Ticker

6/recent/ticker-posts

மோட்டார் சைக்கிளில் மாணவர்களை அழைத்துச் செல்லும் பெற்றோருக்கு பொலிஸார் அவசர எச்சரிக்கை.!!!


மோட்டார் சைக்கிளில் மாணவர்களை அழைத்துச் செல்லும் பெற்றோருக்கு பொலிஸார் அவசர எச்சரிக்கை.!!!

மோட்டார் சைக்கிள்களில் பாடசாலை மாணவர்களை அழைத்துச் செல்லும் பெற்றோர்கள், தங்களது பிள்ளைகளுக்கு கட்டாயமாக தரச்சான்று பெற்ற தலைக்கவசம் அணிவிக்க வேண்டும் என வவுனியா பொலிஸ் நிலையப் போக்குவரத்துப் பிரிவு அறிவித்துள்ளது.

இந்த நடைமுறையை அமல்படுத்துவதற்காக பெற்றோருக்கு ஒரு வார கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும், அதன் பின்னர் விதிமுறைகளை மீறுபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் பொலிஸார் எச்சரித்துள்ளனர்.

வவுனியா பொலிஸ் நிலைய போக்குவரத்துப் பிரிவு பொறுப்பதிகாரி மலீத் ரணதுங்க தலைமையில், வவுனியா-கண்டி வீதியில் அமைந்துள்ள வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்திற்கு முன்பாக நேற்று (15) விசேட விழிப்புணர்வு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.


இதன்போது, தலைக்கவசம் இன்றி மோட்டார் சைக்கிள்களில் பிள்ளைகளை அழைத்து வந்த பெற்றோர்கள் நிறுத்தப்பட்டு, சிறுவர்களுக்கான தலைக்கவசத்தின் அவசியம் குறித்து அறிவுறுத்தப்பட்டதுடன், விழிப்புணர்வுத் துண்டுப் பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டன.


இது தொடர்பாக ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த போக்குவரத்துப் பிரிவு பொறுப்பதிகாரி மலீத் ரணதுங்க, ஒரு வார கால அவகாசத்திற்குள் மோட்டார் சைக்கிளில் பயணிக்கும் அனைத்து சிறுவர்களுக்கும் தரச்சான்று பெற்ற தலைக்கவசம் அணிவிக்கப்பட வேண்டும் என தெரிவித்தார்.


அவர் மேலும், வழங்கப்பட்டுள்ள அவகாசம் நிறைவடைந்த பின்னர் விதியை மீறும் பெற்றோர்களுக்கு எதிராக சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தார்.

இலங்கையில் அண்மைக் காலமாக அதிகரித்து வரும் வீதி விபத்துகளில் மோட்டார் சைக்கிள் விபத்துகளே அதிகளவில் பதிவாகி வருகின்றன. குறிப்பாக தலைக்கவசம் அணியாமல் பயணிக்கும் சிறுவர்கள் கடுமையான தலைக்காயங்களுக்கு உள்ளாகி உயிரிழப்பதோ அல்லது நிரந்தர பாதிப்புகளைச் சந்திப்பதோ அதிகரித்துள்ளதாக பொலிஸார் சுட்டிக்காட்டினர்.




இலங்கையின் மோட்டார் போக்குவரத்துச் சட்டத்தின்படி, மோட்டார் சைக்கிளை இயக்கும் ஓட்டுநருடன் பின்னால் பயணிக்கும் நபரும், அவர் சிறுவராக இருந்தாலும், இலங்கை தரச்சான்று (SLSI) பெற்ற தலைக்கவசம் அணிவது கட்டாயமாகும்.




பாடசாலை ஆரம்பிக்கும் மற்றும் நிறைவடையும் நேரங்களில் இவ்வாறான விசேட கண்காணிப்பு மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என்றும் வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Post a Comment

0 Comments