Ticker

6/recent/ticker-posts

இரு சிறுமிகள் பாலியல் துஷ்பிரயோகம் ; அவமானத்தால் தந்தை உயிர்மாய்ப்பு

 


மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில், 54 வயதுடைய நபர் ஒருவரால் 12 மற்றும் 10 வயதுடைய இரு சிறுமிகள் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தின் வலியைத் தாங்க முடியாத 12 வயது சிறுமியின் தந்தை, தன்னுயிரை மாய்த்துக்கொண்டுள்ள துயர சம்பவமும் புதன்கிழமை (17) பதிவாகியுள்ளது.

குறித்த பகுதியில் வசிக்கும் 54 வயதுடைய நபர், அதே வீதியிலுள்ள 12 வயதுடைய சிறுமியின் வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்துள்ளார். கடந்த சில வாரங்களுக்கு முன்பு, சிறுமியின் பெற்றோர் வெளியில் சென்றிருந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, அந்த நபர் 12 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார். அதே சமயம், அருகில் இருந்த 10 வயதுடைய சிறுமியையும் அவர் அத்துமீறித் துன்புறுத்த முயன்றபோது, அந்தச் சிறுமி அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.

பாதிக்கப்பட்ட 12 வயது சிறுமியை, அவரது தோழியான 10 வயது சிறுமி பாடசாலையில் வைத்து கேலி செய்துள்ளார். இந்த விடயம் ஆசிரியரின் கவனத்திற்கு செல்லவே, அவர் பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயாரை அழைத்து விவரங்களை கூறியுள்ளார். அதிர்ச்சியடைந்த தாயார், புதன்கிழமை(17) அன்று காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இதனையடுத்து விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், மனைவியைப் பிரிந்து வாழும் 54 வயதுடைய சந்தேகநபரை வியாழக்கிழமை(18) கைது செய்துள்ளனர். அவர் விசேட தேவையுடையவர் என்பது குறிப்பிடத்தக்கது. பாதிக்கப்பட்ட சிறுமிகள் மருத்துவப் பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந் நிலையில் தனது மகளுக்கு நேர்ந்த கொடூரத்தையும், அதனால் ஏற்பட்ட சமூக அவமானத்தையும் தாங்கிக்கொள்ள முடியாத, பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை, புதன்கிழமை(17) இரவு தன் உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார். இவ்வாறு உயிரை மாய்த்துக்கொண்டவர், ஏற்கெனவே ஒரு கொலை வழக்குடன் தொடர்புடையவர் என்பதும், பிணையில் விடுவிக்கப்பட்டு பொலிஸ் நிலையத்தில் கையொப்பமிட்டு வருபவர் என்பதும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

  கனகராஜா சரவணன்

Post a Comment

0 Comments