குடியிருப்புகளுக்குள் நுழையும் யானைகளை கட்டுப்படுத்த நடவடிக்கை
தில்சாத் பர்வீஸ்
சம்மாந்துறை அலவக்கரை பகுதியில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ள நிலையில், வீடுகள் மற்றும் கட்டிடங்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதுடன், மக்கள் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர்.
பகல் நேரங்களில் வயல்வெளிப் பகுதிகளில் நடமாடும் காட்டு யானைகள், இரவு நேரங்களில் குடியிருப்புப் பகுதிகளுக்குள் நுழைந்து வருவதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதனால் வீடுகள் மற்றும் கட்டிடங்களின் சுவர்கள் உள்ளிட்ட பகுதிகள் சேதமடைந்துள்ளதுடன், யானைகளின் நடமாட்டம் காரணமாக இரவு நேரங்களில் பொதுமக்கள் வெளியில் செல்வதற்கும் அச்சம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட பகுதிகளை சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளர் ஐ.எல்.எம். மாஹிர், சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம். ஹனீபா, சம்மாந்துறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி டபிள்யூ.ஏ.என். நிசாந்த பிரதீப் குமார உள்ளிட்டோர் நேரில் சென்று பார்வையிட்டனர்.
இதன்போது, காட்டு யானைகளால் ஏற்பட்டுள்ள சேதங்கள் மற்றும் அவற்றின் நடமாட்டம் தொடர்பில் பிரதேச மக்களிடம் தகவல்கள் பெறப்பட்டதுடன், மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.
யானைகளின் நடமாட்டம் அதிகமாகக் காணப்படும் பகுதிகளில் இரவு நேரக் கண்காணிப்பை வலுப்படுத்தும் வகையில், பிரதேச மக்களின் உதவியுடன் பெறப்பட்ட சக்திவாய்ந்த போக்கஸ் விளக்குகளை பிரதேச சபையினர் பொருத்தியுள்ளனர்.
இதன் மூலம் இரவு நேரங்களில் யானைகளின் நடமாட்டத்தை கண்காணித்து, அவை குடியிருப்புப் பகுதிகளுக்குள் நுழைவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், காட்டு யானைகளின் நடமாட்டத்தை கண்காணித்து பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில், சம்மாந்துறை பகுதியில் வனஜீவிகள் அலுவலகம் ஒன்றை அமைப்பதற்கான ஆரம்ப நடவடிக்கைகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
காட்டு யானைகளின் அச்சுறுத்தல் தொடரும் நிலையில், மக்களின் உயிர் மற்றும் உடமைகளைப் பாதுகாக்க நீண்டகால அடிப்படையிலான தீர்வொன்றை ஏற்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.





0 Comments