பிலியந்தலை, போகுந்தர பகுதியில் கூர்மையான ஆயுதத்தால் பொலிஸாரைத் தாக்க முற்பட்ட நபர் ஒருவர் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
கூர்மையான ஆயுதத் தாக்குதலில் காயமடைந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரும், துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த சந்தேகநபரும் தற்போது தெற்கு கொழும்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
முன்னதாக, பொரலெஸ்கமுவ, ஓ.பி.பெரேரா மாவத்தையில் உள்ள வீடு ஒன்றிற்கு இரண்டு மோட்டார் சைக்கிள்களில் கூர்மையான ஆயுதங்களுடன் வந்த நால்வர், அங்கிருந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தி வீட்டிற்கும் பலத்த சேதம் விளைவித்திருந்தனர்.
இதனைத் தொடர்ந்து, சந்தேகநபர்கள் பிலியந்தலை பகுதியை நோக்கி தப்பிச் செல்வதாக பொரலெஸ்கமுவ பொலிஸாருக்குத் தகவல் கிடைத்துள்ளது.
அதற்கமைய, பிலியந்தலை போகுந்தர, வீரசிங்க மாவத்தை பகுதியில் பொலிஸார் சோதனையில் ஈடுபட்டிருந்த போது, தப்பி ஓடிய சந்தேகநபர்களில் இருவர் எதிர்பாராதவிதமாக பொலிஸாரைக் கண்டு, உடனடியாக மோட்டார் சைக்கிளைத் திருப்பி தப்பியோட முயன்றுள்ளனர்.
அங்கு மோட்டார் சைக்கிளை நிறுத்த பொலிஸ் அதிகாரிகள் கடுமையாக முயற்சித்த போது, மோட்டார் சைக்கிளின் பின்னால் அமர்ந்திருந்த நபர், தான் வைத்திருந்த கூர்மையான ஆயுதத்தால் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரைத் தாக்கியுள்ளார்.
இதன்போது, அந்த கான்ஸ்டபிள் பின்னால் அமர்ந்திருந்த நபரைக் குறிவைத்து துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார்.
துப்பாக்கிச் சூடு சந்தேகநபரின் இடுப்புப் பகுதியில் பட்டதில், அவர் மோட்டார் சைக்கிளிலிருந்து கீழே விழுந்துள்ளார்.
உடனடியாகச் செயற்பட்ட பொலிஸ் அதிகாரிகள் பின்னால் அமர்ந்திருந்த சந்தேகநபரைக் கைது செய்த போதிலும், மோட்டார் சைக்கிளைச் செலுத்தியவர் அந்த இடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர் பண்டாரகம, வீதியகொட பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவத்தில் காயமடைந்த சந்தேகநபர் மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஆகியோருடன், சந்தேகநபர்களின் தாக்குதலுக்கு உள்ளான வீட்டின் இளம் பெண் ஒருவரும் தற்போது களுபோவில போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சம்பவம் தொடர்பாக பிலியந்தலை மற்றும் பொரலெஸ்கமுவ பொலிஸ் நிலையங்கள் இணைந்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன.

0 Comments