குடும்பத் தகராறு காரணமாக உயர்அழுத்த மின்பரிமாற்றக் கம்பத்தில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டு பல பகுதிகளில் மின்விநியோகத்தை பாதித்த நபரொருவருக்கு, இலங்கை மின்சார சபைக்கு (CEB) ஏற்பட்ட ரூ.201,059.90 இழப்பீட்டை செலுத்துமாறு மாத்தறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஜூலை 21ஆம் திகதி கம்புறுபிட்டிய பகுதியில் இடம்பெற்ற குடும்பத் தகராறு தொடர்பாக எதிர்ப்புத் தெரிவிக்கும் நோக்கில் குறித்த நபர் உயர்அழுத்த மின்பரிமாற்றக் கம்பத்தில் ஏறியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவத்தால் திஹகொட, கம்புறுபிட்டிய, அக்குரெஸ்ஸ, முலட்டியான, தெய்யந்தர, மாவரல மற்றும் தெனியாய உள்ளிட்ட பல பகுதிகளில் இரண்டு மணிநேரத்திற்கும் மேலாக மின்விநியோகம் துண்டிக்கப்பட்டது.
பின்னர் பொலிஸார் அவரது குடும்பத்தினரை சம்பவ இடத்துக்கு அழைத்து வந்ததையடுத்து, அவர் கீழிறங்க சம்மதித்தார். அதனைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டு மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதுடன், முதலில் ஜூலை 24ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
அன்றைய தினம், இலங்கை மின்சார சபைக்கு ஏற்பட்ட நிதி இழப்பை கணக்கிட்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறு கம்புறுபிட்டிய பொலிஸாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டதுடன், சந்தேகநபர் மீண்டும் ஜூலை 28ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
ஜூலை 28ஆம் திகதி வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, சம்பவத்தால் ரூ.201,059.90 நிதி இழப்பு ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் நீதிமன்றத்தில் அறிவித்தனர்.
இதனையடுத்து குற்றத்தை ஒப்புக்கொண்ட சந்தேகநபருக்கு, குறித்த முழுத் தொகையையும் இலங்கை மின்சார சபைக்கு இழப்பீடாக செலுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இவ்வழக்கின் மேலதிக விசாரணை எதிர்வரும் நவம்பர் 3ஆம் திகதி நடைபெறவுள்ளது.

0 Comments