Ticker

6/recent/ticker-posts

"10 வருஷமா அடக்கி வச்ச ஆத்திரம்.. பிணத்தின் மீது கால் வைத்து இளைஞர் செய்த காரியம்



"10 வருஷமா அடக்கி வச்ச ஆத்திரம்.. பிணத்தின் மீது கால் வைத்து இளைஞர் செய்த காரியம்". போலீஸாரே மிரண்டு போயிட்டாங்க. நடுங்க வைக்கும் பின்னணி.!

Karnataka - பெலகாவி மாவட்டத்தில் 10 ஆண்டுகளுக்கு முன்பு தனது தாயுடன் ஓடிச் சென்ற நபரை, ஆத்திரம் குறையாத மகன் கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெலகாவி மாவட்டம் சவதத்தி தாலுகாவைச் சேர்ந்த ஈரய்யா (25) என்பவரின் தாயார், கடந்த 2015-ஆம் ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த பசப்பா ஓசமணி (51) என்பவருடன் மகாராஷ்டிராவுக்குச் சென்று குடியேறினார். சிறு வயதிலேயே தாய் தன்னைத் தவிக்க விட்டுச் சென்றதால், பசப்பா மீது ஈரய்யா நீண்ட நாட்களாகக் கடும் கோபத்தில் இருந்து வந்துள்ளார்.

சுமார் 10 ஆண்டுகளுக்குப் பிறகு, பசப்பா தனது சொந்த ஊரான சடோனி கிராமத்திற்கு வீடு கட்டும் பணி தொடர்பாகத் திரும்பியுள்ளார். அவர் ஊருக்கு வந்திருப்பதை அறிந்த ஈரய்யா, சமயம் பார்த்து அவரைத் தீர்த்துக்கட்டத் திட்டமிட்டார். இதற்காகப் பசப்பாவின் நடமாட்டத்தைக் கண்காணித்து வந்த ஈரய்யா, ஒரு இரவு நேரத்தில் அவர் இருசக்கர வாகனத்தில் தனியாகச் சென்றபோது வழியில் மறித்து மறைத்து வைத்திருந்த அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் சுமார் 16 இடங்களில் வெட்டுக்காயங்களுடன் பசப்பா சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார்.

கொலை செய்த பிறகும் ஈரய்யாவின் ஆத்திரம் அடங்கவில்லை. உயிரிழந்த பசப்பாவின் சடலத்தின் மீது ஏறி நின்று, தனது கால்களை அவர் மீது வைத்து விதவிதமான கோணங்களில் செல்ஃபி எடுத்துக்கொண்டார். 10 வருடப் பகையைத் தீர்த்துக்கொண்ட திருப்தியில், சடலத்தின் மீது ஏறி நின்றபடி போஸ் கொடுத்தது அங்கிருந்தவர்களையும் போலீசாரையும் திகைக்க வைத்தது. பின்னர் அவரே காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்து, அவர்கள் வரும் வரை அந்தப் பிணத்தின் அருகிலேயே நின்று கொண்டிருந்தார்.

சம்பவ இடத்திற்கு விரைந்த சவதத்தி போலீசார், ஈரய்யாவைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு சம்பவத்திற்காக இவ்வளவு காலமாகக் காத்திருந்து, மிகக் கொடூரமான முறையில் ஒருவரைக் கொலை செய்துவிட்டு, அதன் அருகே செல்ஃபி எடுத்த இளைஞரின் செயல் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தற்போது போலீசார் ஈரய்யா மீது கொலை வழக்குப் பதிவு செய்து மேலதிக விசாரணையைத் தொடர்ந்து வருகின்றனர்.

Post a Comment

0 Comments