விளையாட்டுப் பொருட்களுடன் சூட்சுமமாக கொரியர் சேவை ஊடாக கடத்தி வரப்பட்ட ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதுடன் சந்தேக நபரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
அம்பாறை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் நேரடி கண்காணிப்பில் இயங்கும் DCDB எனும் குற்றப் புலனாய்வு பிரிவுக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கு அமைவாக கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் புதன்கிழமை (8) மாலை சந்தேக நபர் பயன்படுத்திய சில வீடுகள் மணிக்கணக்கில் சோதனையிடப்பட்டன.
இதன்போது கொரியர் சேவை ஊடாக கடத்தி வரப்பட்டிருந்த விளையாட்டுப் பொருட்களுடன் இருந்த கரடி பொம்மையின் கழுத்துப் பகுதியில் சூட்சுமமாக மறைத்து வைத்திருந்த 107 கிராம் ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.
அத்துடன் 43 வயது மதிக்கத்தக்க சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தலில் - தோடம்பழ சின்ன சுயேட்சைக் குழுவில் காரைதீவு பிரதேச சபைக்கு போட்டியிட்டு, தெரிவாகி உறுப்பினராக செயற்பட்டவர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த ஐஸ் போதைப்பொருருடன்
இலத்திரனியல் தராசு, 2 கைத்தொலைபேசிகள் மற்றும் ஒரு தொகை பணம் உள்ளிட்ட சான்றுப் பொருட்கள் யாவும் சட்ட நடவடிக்கைக்காக கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன. சந்தேக நபரை கல்முனை நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.




0 Comments