பொதுத் தேர்தலைக் கருத்தில் கொண்டு தமது கட்சியுடன் கூட்டணியமைக்க வேண்டுமென்றால், அதற்கு நிபந்தனையாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பதவி விலக வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தி வலியுறுத்துகிறது.


ஐக்கிய மக்கள் சக்தியினர் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைவதை விட ஐக்கிய தேசியக் கட்சியினர் அனைவரும் எஸ்.ஜே.பி.யில் இணைய வேண்டும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா தெரிவித்துள்ளார்.

“கட்சித் தலைவர் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்க விரும்பும் ஒரு சிலர் சிறிகொத்தாவில் ஒரு சில கட்சி உறுப்பினர்களுடன் இருக்கட்டும், மற்றவர்கள் எங்களுடன் சேர வேண்டும். ஐக்கிய தேசியக் கட்சியினருக்கு இப்போது சிறந்த இடம் எஸ்.ஜே.பி. அத்துடன் தற்போதைய தலைவர் ரணில் விக்கிரமசிங்க பதவி விலகி கட்சியை எங்களிடம் ஒப்படைத்தால் ஐக்கிய தேசியக் கட்சியை கைப்பற்ற நாங்கள் தயாராக உள்ளோம்.

விக்கிரமசிங்கவிடம் தலைமைப் பதவியை ராஜினாமா செய்யுமாறு பலமுறை கூறியும் அவர் கோரிக்கையை செவிசாய்க்கவில்லை. விக்கிரமசிங்க வெளியேறினால் ஐக்கிய தேசியக் கட்சியை கைப்பற்றுவதற்கு நாங்கள் தயாராக உள்ளோம், ஆனால் அது எமக்கு வழங்கப்படுமா என்பதில் சந்தேகம் உள்ளது என ராஜகருணா ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

எவ்வாறாயினும், அடிமட்ட மட்டத்தில் இருந்து விக்கிரமசிங்கவைத் தலைமைப் பொறுப்பில் நீடிக்க வேண்டும் என்று தீர்மானங்களைப் பெறுவதற்கான செயல்முறை ஏற்கனவே தொடங்கியுள்ளது. இது வார இறுதியில் காலி மாவட்டத்தில் ஆரம்பமானது.

இதேவேளை, பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்கு பொது எதிரணிக் கூட்டணியை உருவாக்குவதே சிறந்த வழி என ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

“பொதுத் தேர்தலில் பொதுச் சக்தியாகப் போட்டியிடுவதற்கு எதிர்க்கட்சிகள் மத்தியில் ஒருமித்த கருத்தை ஏற்படுத்த முடியுமா என்பதைப் பார்ப்போம். பொது எதிரணிக் கூட்டமைப்பை உருவாக்குவதே நாட்டைப் பொறுத்தமட்டில் சிறந்த தெரிவாகும், நாங்கள் அதைத் தொடர்வோம்” என்று அபேவர்தன ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.


“ஏழு தசாப்தங்களில் முதன்முறையாக பிரதான எதிர்க்கட்சி அதிகாரத்தைப் பெறத் தவறிவிட்டது. இத்தகைய சூழ்நிலையில் பொதுக் கூட்டணி அமைப்பதே இப்போது இருக்கும் சிறந்த வழி. இந்த இலக்கை அடைய முடியுமா என்பதைப் பார்த்துவிட்டு, பொதுத் தேர்தலில் எப்படிப் போட்டியிடப் போகிறோம் என்பதைத் தெரிவிப்போம்,” என்றார்.