சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் டிவைன் பிராவோ-வை (Dwayne Bravo) ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி தங்கள் அணியின் பந்துவீச்சு ஆலோசகராக நியமித்துள்ளது.


2024 இருபதுக்கு20 உலக கிண்ண தொடர் இன்னும் சில தினங்களில் துவங்க உள்ளது. இந்த முறை உலகக் கிண்ண தொடர் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற உள்ளது. இந்த நிலையில் தான் ஆப்கானிஸ்தான அணி இந்த உலகக் கிண்ண தொடருக்கு மட்டும் பிராவோவை பந்துவீச்சு ஆலோசகராக நியமித்துள்ளது.

முன்பு 2023 ஒருநாள் போட்டி உலகக் கிண்ண தொடர் இந்தியாவில் நடைபெற்ற போது, இந்திய ஆடுகளத்தின் சூழ்நிலைகளில் சரியாக கணித்து செயல்பட வேண்டி, முன்னாள் இந்திய வீரர் அஜய் ஜடேஜாவை அந்த அணி ஆலோசகராக நியமித்திருந்தது. அது அந்த அணிக்கு பெரிய அளவில் கை கொடுத்தது. அந்த உலகக் கிண்ண தொடரில் ஆப்கானிஸ்தான் அணி சில முக்கிய வெற்றிகளை பெற்றது. இங்கிலாந்து, வங்கதேசம், இலங்கை மற்றும் பாகிஸ்தான் என நான்கு அணிகளை ஆப்கானிஸ்தான் வீழ்த்தியது.

மேலும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக வெற்றிக்கு அருகே வந்து தோல்வியடைந்தது. அப்போது பலராலும் ஆப்கானிஸ்தான அணி பாராட்டை பெற்றது. தற்போது 2024 இருபதுக்கு 20 உலகக் கிண்ணத்தில் ஆட உள்ள ஆப்கானிஸ்தான் அணி அதே போன்ற திட்டத்தை கையில் எடுத்துள்ளது. உலகக் கிண்ணத்தில் சிறப்பாக செயல்பட வெஸ்ட்இண்டீஸ்-ஐ சேர்ந்த பிராவோவின் உதவியை நாடி உள்ளது. இது அந்த அணிக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமையும் வாய்ப்புள்ளது.

இருபதுக்கு-20 போட்டிகளில் அதிக அனுபவம் கொண்ட ஆப்கானிஸ்தான் வீரர்கள் இந்த முறை அரை இறுதி வரை முன்னேற வாய்ப்பு உள்ளது. ஆப்கானிஸ்தான் அணி குரூப் சுற்றில் நியூசிலாந்து, உகண்டா மற்றும் பப்புவா நியூ கினியா ஆகிய அணிகளுடன் மோத உள்ளது. எப்படியும் குரூப் சுற்றில் முதல் இரண்டு இடங்களில் இடம்பெற்று சூப்பர் எட்டு சுற்றுக்கு முன்னேறும் என எதிர்பார்க்கப்படுகிறது.