செல்போன் வெடித்ததால், மோட்டார் சைக்கிளில் சென்ற இளம்பெண் வாகனத்தை கட்டுப்படுத்த முடியாமல் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


உத்தரப்பிரதேச மாநிலம், ஃபரூக்காபாத் மாவட்டத்தில் உள்ள நெஹ்ராரியா கிராமத்தைச் சேர்ந்தவர் 28 வயதான பூஜா மோட்டார் சைக்கிளில் கான்பூர் – அலிகார் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது அவரது பையில் இருந்த செல்போன் திடீரென வெடித்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த பூஜாவின் மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்தது. அப்போது வீதியில் இருந்த டிவைடரில் பூஜாவின் மோட்டார் சைக்கிள் மோதியது.

அப்போது பூஜாவின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனால் அவர் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார். இதனால் அவ்வழியாக சென்றவர்கள் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் கொடுத்தனர்.

அவர்கள் விரைந்து வந்த பொலிஸார், படுகாயமடைந்த பூஜாவை மீட்டு வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்.

இதுதொடர்பாக பொலிஸார் விசாரணை நடத்தினர். அப்போது ஹெல்மெட் அணியாத பூஜா மோட்டார் சைக்கிளில் அதிவேகத்தில் இயர்போனில் பேசிக்கொண்டே வந்ததாகவும், அப்போது செல்போன் திடீரென வெடித்து அதனால் அவர் வண்டி நிலைகுலைந்து டிவைடரில் மோதி விபத்து ஏற்பட்டதாக தெரியவந்தது.

விபத்தில் அதிக இரத்தம் வெளியேறியதால் பூஜா உயிரிழந்ததாக வைத்தியர்கள் தெரிவித்தனர். இந்த விபத்து குறித்து பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

செல்போன் வெடித்து அதனால் ஏற்பட்ட விபத்தில் இளம்பெண் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.