மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் பரீட்சைகளை நடாத்துவதற்காக, பரீட்சைக்கான விடைகளை எழுதுவதற்குத் தேவையான தாள்களை மாணவர்களே கொண்டு வருமாறு அதன் நிர்வாகம் மாணவர்களுக்கு அறிவித்துள்ளது.

மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் தகவல் தொழில்நுட்ப பீடத்தின் முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் வருட மாணவர்களுக்கான அண்மையில் நடைபெற்ற பரீட்சைக்குத் தேவையான தாள்கள் இதே மாணவர்களிடமே கோரப்பட்டுள்ளதாக மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.

பல்கலைக்கழகத்தில் நிதிப் பற்றாக்குறை காரணமாக மாணவர்களிடம் இவ்வாறு தாள்களை கேட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தாள்கள் தட்டுப்பாடு காரணமாக பரீட்சையினை ஒருமுறை ஒத்திவைக்க நேரிட்டதாக மாணவர்கள் கூறுகின்றனர்.

தாள் குறித்த இந்த அறிவிப்பை அடுத்து, மாணவர்கள் தேவையான தாள்களை கொண்டு வருமாறு அறிவுறுத்தப்பட்டதை அடுத்து, இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு மார்ச் 28ஆம் திகதியும். முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு மார்ச் 22, 28ஆம் திகதிகளிலும் பரீட்சை நடைபெற்றதாகக் கூறப்படுகிறது.

வெளியில் இருந்து காகிதம் போன்ற பொருட்களை கொண்டு வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள போதிலும், அதற்கான ஏற்பாடுகள் இல்லை என தெரிவித்து, வெளியில் இருந்து கொண்டு வரப்பட்ட தாள்களை பயன்படுத்த பல்கலைக்கழக நிர்வாகம் தீர்மானித்திருப்பது சிக்கலாக உள்ளதாக பல்கலைக்கழக மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.