பள்ளிவாசலில் சிறுவர்கள் விளையாட அனுமதித்த அதற்கு வழிசமைத்த துருக்கிய பள்ளிவாசல்கள், பள்ளிக்கி வருகின்ற சிறுவர்களை விரட்டுகின்ற நம் நாட்டு பள்ளிவாசல்கள்...


பள்ளியில் தொழுகை நடாத்திய போது தன்மீது பூனை ஏறி விளையாட இடமளித்த அல்ஜீரிய இமாம்...


சம்மாந்துறை சென்னல் கிராம பள்ளிவாசல் நிர்வாக தெரிவின் போது ஏற்பட்ட அசம்பாவிதத்தில் ஒருவர் பலி...


கடந்த சில நாட்களாக சமூக ஊடகங்களில் பேசு பொருளாக மாறிய அம்சங்கள் இவை. 


ஒரு பள்ளிவாசலின் செயற்பாடுகள் புகழப்படுவதற்கும் இகழப்படுவதற்கும் பின்னால் இருப்பது அந்த பள்ளிவாசல் நிர்வாகத்தின் செயற்பாடுகளே. நிர்வாகத் தெரிவின் போது நேற்று நடைபெற்ற அசம்பாவிதம் புதிதாக இருந்தாலும் இதற்கு முன்னர் உயிர்ச் தேசம் இல்லாத அடிபுடி பிரச்சினைகள் எத்தினையோ நாம் கண்டிருக்கின்றோம். எனவே இங்கு இதற்குக் காரணங்களாக அமைகின்ற ஒரு சில விடையங்களையே நான் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.


முதலாவது காரணம் : ஒழுங்கீனம்
====================


இஸ்லாம் ஒரு மனிதன் காலைல எழும்பினா என்ன செய்யோணும், எப்புடி சாப்புடோணும், பாதையில எப்புடி போகோணும், வாகனத்தில எப்புடி ஏறோணும், எச்சில் வந்தா எப்புடி துப்போணும், வேலை நேரத்தில எப்புடி இருக்கோணும், ஆட்சியாளர எப்புடி தெரிவு செய்யோணும், தூங்குற நேரம் எப்புடி தூங்கோணும் எண்டு காலைல எழும்பி பல் துலக்குறதுல இருந்து ஆட்சி நடாத்துற வரைக்கும் அத்தனையையும் எப்புடி ஒழுங்காக செய்யோணும் என்பதனை மிகத் தெளிவாக சொல்லியிருக்கின்றது.


தொழுகையில் எப்புடி ருக்குஉ சுஜுது செய்யோணும் என்பது பற்றியெல்லாம் பேசாத அல்குர்ஆன் ஒரு வீட்டில் நுழையும் போது கடைப்பிடிக்க வேண்டிய ஒழுங்கு, தாய் தந்தையரின் அறையில் நுழையும் போது பேண வேண்டிய ஒழுங்கு, சபை ஒழுங்கு என்று சின்னச் சின்ன ஒழுங்குகளைக் கூட பேசியிருக்கின்றது என்றால் மார்க்கத்தில் ஒழுங்கு, நேர்த்தி என்ற அம்சம் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது.


இப்புடி சிறிய பெரிய ஒழுங்களைப் பற்றி பேசுகின்ற மார்க்கத்தில் இருக்கின்ற நாம் மார்க்கத்தின் பெயராலே நடக்கின்ற எத்தனையோ விடையங்களைக் கூட ஒழுங்காகச் செய்வதில்லை. இதில் ஒன்றுதான் இந்தப் பள்ளிவாசல் நிர்வாகத் தெரிவும். 


சமூகத் தலைமைத்துவம் என்று மார்தட்டிக் கொள்பவர்களது தெரிவு முதல் ஒரு ஊரின் சாதாரண பள்ளிவாசல் நிர்வாகத் தெரிவு வரை சரியான ஒழுங்குகளும் இல்லை அப்புடி இருந்தாலும் அது சரியாக நடைமுறைப் படுத்துவதுமில்லை. 


பள்ளிவாசல் நிர்வாகம் எப்போது, எப்படி தெரிவு செய்யப்பட வேண்டும்..? யார் யாரெல்லாம் அதில் பங்குகொள்வார்கள்...? எத்தின வருடங்களுக்கு ஒருக்கா அது நடக்கும்...? ஒருவர் எத்தின முறை தெரிவாகேலும்...? அவங்கட வேலை என்ன பொறுப்பு என்ன...? இப்புடி ஒரு பள்ளிவாசலில் நிர்வாகத்த நடாத்துறதுக்கான எல்லா ஒழுங்குகளையும் உள்ளடக்கிய ஒரு யாப்பு, ஒரு கோவை நிறைய பள்ளிகளில் இருப்பதில்லை. 


பள்ளிவாசலுக்கான யாப்புனு ஒரு மாதிரியை முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் தயாரித்து வைத்திருக்கின்றது. பள்ளிய பதிவு செய்வதற்காக அந்த யாப்ப எடுத்து அல்லது வேற ஒரு பள்ளிட யாப்ப எடுத்து தங்கட பள்ளிட பேர... ஊர... விலாசத்த... போட்டு ஒரு யாப்பை தயாரிக்கின்ற வேலையைத்தான் நிறைய பள்ளிவாசல்கள் செய்ராங்களே தவிர தங்கட பள்ளிவாசலுக்கும் ஏரியாக்கும் ஏற்ற வகையில ஒரு யாப்ப தயாரிப்பது கிடையாது. அப்புடி இருந்தாலும் அதனை நடைமுறைப்படுத்துவதும் இல்லை.


அறிவியலும் நாகரீகமும் வளர்ச்சியடைந்துள்ள இந்த காலத்தில் உலகுக்கே வழிகாட்டுகின்ற ஒரு மார்க்கத்தில் இருந்து கொண்டு ஒருவர் பிரேரிக்க இன்னுமொருவர் ஆமோதிக்கின்ற ஒழுங்கில் நிர்வாகம் தெரிவு செய்வதென்பது சில்லறைத் தனமான செயல் அல்லாமல் வேறொன்றுமில்லை.


தெரிவின் போதும், நிர்வாகத்தின் போதும் நடைபெறுகின்ற பல பிரச்சினைக்கு முதல் காரணம் இந்த ஒழுங்கீனம்தான். இதனால் இன்று சம்மாந்துறை சென்னல்கிராம பள்ளிவாசலில் நடைபெற்ற அசம்பாவிதம் வெளிக்கு வந்தாலும் வெளிவராமல் எத்தனையோ சம்பவங்கள் நடந்துகொண்டுதான் இருக்கின்றது.


இரண்டாவது காரணம்: குழு வாதம்
====================


பள்ளிவாசல் தக்வாவின் (இறையச்சத்தின்) அடிப்படையில் நிறுவப்பட வேண்டும் என்றிருந்தாலும். நிறைய பள்ளிவாசல்கள் கட்டப்பட்டிருப்பது தக்வாவிலும் அல்ல சில அமைப்புக்களின் பெயர்களின் நாமத்துக்காக... தங்கட ஒரு சில மார்க்க அடிப்படைகள நடைமுறைப்படுத்த... தங்களைச் சார்ந்த ஆட்கள் நிர்வாகம் நடாத்த...


இப்புடி இறையச்சத்தையும் இறை திருப்தியையும் விட்டு விலகி தங்கட தங்கட என்று யோசிச்சி பள்ளிய கட்டினதும் அதனை நிர்வாகம் செய்யப் போனதும்தான் பள்ளிவாசல் நிர்வாகத் தெரிவில் ஏற்படும் பிரச்சினைக்கான அடுத்த காரணம். 


ஒரு குழு தாங்கள் மட்டும் என்று யோசிக்கின்ற நேரம் அங்க அடுத்த குழு உருவாகின்றது அதனை வீழ்த்தி தாங்கள் நிர்வாகத்திற்கு வருவதற்காக. இந்த இரு குழுவும் சந்திக்கின்ற நிர்வாகத் தெரிவு சண்டையாக... அடிபுடியாக... பொலீஸ் கேசாக முடிவடைகின்றது. இது கடந்த காலங்களில் பல இடங்களில் நடைபெற்ற கசப்பான உண்மைகள்.


இந்த இரு குழுவாத மனோநிலையும் பள்ளி நிர்வாகத்திற்கு சரிவராது. நிர்வாகத்தை மட்டுமல்ல சமூகத்தையே சீரழித்துவிடும்.


மூன்றாவது காரணம்: அச்சம்
====================


அடுத்து வாற குழுவினர் ஒழுங்கா பள்ளிய நிர்வாகம் செய்வாங்களா எங்கின்ற பயம்தான் நிர்வாகத்தில் பிரச்சினை ஏற்படுவதற்கான அடுத்த காரணம். இந்த பயம் வயது முதிர்ந்த பலருக்கு இருக்கும். இதனால மத்தவங்களுக்கும் அடுத்த தலைமுறையினருக்கும் கொடுக்காம நிருவாகத்தை தாங்களே வெச்சிக்கொள்ள பார்க்கின்றார்கள். இந்தப் பயம் ஒருவகையான நல்லெண்ணமாகத் தெரிந்தாலும் பின்னால் பல பிரச்சினைகள் உருவாக காரணமாகவும் அமைகின்றது.


சிரேஷ்ட மற்றும் அடுத்த தலைமுறையினருக்கு இடையில் நிர்வாகம் சார் புதிய சிந்தனை, அறிவு, அனுபவம் என்பவற்றில் ஏற்படும் இடை வெளி சின்னச் சின்ன முறுகல்களாக மாறி நிர்வாகத் தெரிவின் போது பெரும் பிரச்சினையாக வெடிக்கின்றது. இருவரும் இணைந்து ஒரு நல்ல நிர்வாகத்தை உருவாக்காமல் ஒவ்வொருத்தரும் அடுத்தடுத்தவர்களை விமர்சிப்பதிலேயே காலத்தை கடத்துவர்.


நான்காவது காரணம்: ஆசை
===============


பள்ளி நிர்வாகத்தில் இருப்பதனை பலர் மிகப் பெரும் கௌரவமாக, சமூக அந்தஸ்தாக கருதுகின்றார்கள். இன்னும் சிலர் அங்கு இருக்கின்ற இலாபங்களை அனுபவிக்க ஆர்வம் கொள்கின்றனர். நிர்வாகம் மீதான இந்த குருட்டுத்தனமான ஆசைதான் பிரச்சினைக்கான அடுத்த காரணம்.


இதனால் பள்ளி நிர்வாகத்திற்கு வருவதற்கும்... இன்னொருத்தர் அந்த இடத்திற்கு வராமல் தடுப்பதற்கும்... தானே அதில் தொடர்ந்தும் இருந்து கொண்டு எல்லாவற்றையும் அனுபவிப்பதற்காகவும்... என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ அத்தனையும் செய்கின்றார்கள். இதுவும் பல பிரச்சினைச்சினையை தோற்றுவிக்கின்றது.


ஐந்தாவது காரணம்: பொருத்தமற்ற தெரிவு 
=======================


பிரச்சினை வாறதுக்குரிய அடுத்த காரணம்தான் பள்ளி நிர்வாக தெரிவின் போது தொடர்ந்து பள்ளிக்கி வாறவர் அல்லது பண வசதி கொண்ட ஒரு ஹாஜியார் என்று ஒரு சிலர பிடிச்சி நிர்வாகத்திற்கு தெரிவு செய்வது. இவர்களிடம் திறமைகள் இருந்தால் அவர்களைத் தெரிவு செய்வது தவறல்ல ஆனால் பள்ளி நிர்வாகத்திற்கு பணமோ பள்ளிக்கி வாறதோ மட்டும் காரணமாக அமைந்துவிடக் கூடாது.


மார்க்கம் எத்தினையோ விடயங்களைச் சொல்லியிருக்கின்றது. ஒரு நிர்வாகத்திற்கு எத்தினையோ திறமைகள், பண்புகள் தேவை இவை எல்லாம் முழுமையாக இல்லாவிட்டாலும் ஓரளவேனும் இருக்கின்றதா என்று பார்க்க வேண்டும் அப்புடிப் பார்த்து பொருத்தமானவர்களை தெரிவுசெய்ய வேண்டும். 


இது எதையும் கணக்கிலெடுக்காமல் சிலரை தெரிவு செய்து விட்டால், அவர்களுக்கு மார்க்க வரம்புகளும் தெரியாது... பிரச்சினைகள் வரும் போது அதனை எப்புடி சூசகமாக கையாழ்வது என்றும் தெரியாது... ஒழுங்கா பேசவும் தெரியாது... கடைசில பிரச்சினை வந்தா பள்ளிக்க நின்று தகாத வார்த்தையால ஏசி பிரச்சினைய பெரிசாக்குகின்ற நிலைமைதான் உருவாகின்றது. 


இது போன்று பள்ளிவாசல் நிர்வாகத் தெரிவின் போது ஏற்படும் பிரச்சினைகளுக்கு இன்னும் சில விடயங்கள் காரணங்கள் இருக்கலாம். நான் ஐந்து விடயங்களை மாத்திரமே இங்கு குறிப்பிட்டிருக்கின்றேன். இந்த காரணங்களைத் தாண்டி எப்படி நிர்வாகத்தை தெரிவு செய்வது, வினைத்திறனாகக் கொண்டு செல்வது என்பதனை அடுத்த ஆக்கத்தில் எழுதலாம் என்று இருக்கின்றேன் இன்ஷா அல்லாஹ். 


Sajeer Muhaideen 
09/04/2023