இராஜதுரை ஹஷான்)

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் எதிர்வரும் 18 ஆம் திகதி புதன்கிழமை முதல் 21ஆம் திகதி சனிக்கிழமை வரை ஏற்றுக்கொள்ளப்படும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இதனடிப்படையில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை எதிர்வரும் மார்ச் மாதம் 10 ஆம் திகதிக்கு முன்னர் நடத்த ஆணைக்குழு உத்தேசித்துள்ளது.

341 உள்ளூராட்சி மன்றங்கள் உள்ள நிலையில் காலி மாவட்டம் எல்பிட்டிய உள்ளூராட்சி மன்றத்தின் பதவிக்காலம் நிறைவு பெறாத காரணத்தினால் எல்பிட்டிய தேர்தல் தொகுதியை தவிர்த்து 340 உள்ளூராட்சி மன்றங்களுக்கான வேட்பு மனுக்கள் கோரப்பட்டுள்ளன.

தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கான தொழில்நுட்ப நடவடிக்கைகளை நிறைவு செய்ததை தொடர்ந்து வேட்புமனு தாக்கல் தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பை நேற்று முன்தினம் இரவு வெளியிட்டது.

24 மாநகர சபைகள்,41 நகர சபைகள் மற்றும் 275 பிரதேச சபைகளுக்கான நகரபிரதா,பிரதி நகர பிதா, தலைவர், பிரதி தலைவர் மற்றும் உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான வேட்பு மனுக்களை ஏற்றுக்கொள்வதை ஏற்றுக்கொள்வது தொடர்பான அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளன.

இதற்கமைய தேர்தலுக்கான வைப்பு பணத்தை ஏற்றுக் கொள்ளும் நடவடிக்கை நேற்று ஆரம்பமானதுடன்,20 ஆம் திகதி பணம் வைப்பிடல் நிறைவு பெறும் (நாளை 06 போயா விடுமுறை,எதிர்வரும் 08 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை,15ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை தவிர)

இதற்கமைய உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் எதிர்வரும் 18 ஆம் திகதி முதல் 21 ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும். எதிர்வரும் 21ஆம் திகதி நண்பகல் 12 மணியுடன் வேட்பு மனுக்களை பொறுப்பேற்பது நிறைவு பெறும்.

நகர சபைகள் மற்றும் பிரதேச சபை தேர்தல் சட்டத்தின் பிரகாரம் எதிர்வரும் மார்ச் மாதம் 30 ஆம் திகதிக்கு முன்னர் 340 உள்ளூராட்சி மன்றங்களுக்கான உறுப்பினர் நியமனம் நிறைவு பெற வேண்டும்.வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டு 5 அல்லது 7 வார காலத்திற்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டதன் பின்னர் எதிர்வரும் மார்ச் மாதம் 10 ஆம் திகதிக்கு முன்னர் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்த தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு உத்தேசித்துள்ளது.

உள்ளூராட்சி மன்ற நிறுவனங்களுக்கான தேர்தல் கட்டளைச் சட்டத்தின் (262 பிரிவு) 26 வது அத்தியாயத்தின் பிரகாரம் காலி மாவட்டத்தில் எல்பிட்டிய பிரதேச சபையை தவிர்த்து நாடளாவிய ரீதியில் உள்ள ஏனைய உள்ளூராட்சி மன்றங்களுக்கான நகர பிதா, பிரதி நகர பிதா,தலைவர்,உப தலைவர் மற்றும் உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான தேர்தலை நடத்துவதற்கான வேட்பு மனுக்களை ஏற்றுக் கொள்வது தொடர்பில் சகல உள்ளூராட்சி மன்றங்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் அல்லது சுயாதீன குழுக்களினால் தாக்கல் செய்யப்ப டும் ; முதலாவது வேட்பு மனுக்கள்,இரண்டாவது மனுக்கள்,வேட்பாளர்களின் எண்ணிக்கை,முதல் அல்லது இரண்டாவது வேட்பு மனுக்களில் உள்ளடக்கப்பட வேண்டிய குறைந்தபட்ச பெண் பிரதிநிதித்துவ எண்ணிக்கை மற்றும் அங்கிகரிக்கப்பட்ட அரசியல் கட்சி அல்லது சுயாதீன குழுக்களினால் வைப்புச் செய்யப்பட வேண்டிய வைப்புத் தொகை தொடர்பான விபரங்களை உள்ளடக்கிய விசேட வர்த்தமானி அறிவித்தலை தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் சிறி ஸ்ரீ ரத்நாயக்க கடந்த மாதம் 29 ஆம் திகதி வெளியிட்டுள்ளார்.

2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவிருந்த உள்ளூராட்சி மன்ற சபைத் தேர்தலை முன்னாள் உள்ளுராட்சிமன்றம் மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் ஒரு வருட காலத்திற்கு பிற்போட்டார்.அதற்கமைய உள்ளூராட்சி மன்றத் தேர்தல் இவ்வருடம் நடத்தப்பட வேண்டும்.

2018 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி உள்ளூராட்சி மன்றத் தேர்தல் இடம் பெற்றது.ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன 340 உள்ளூராட்சி மன்றங்களில் 241 மன்றங்களை கைப்பற்றியது.ஐக்கிய தேசியக் கட்சி 34 உள்ளூராட்சி மன்றங்களை கைப்பற்றியது.தனித்து போட்டியிட்ட ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி தேர்தலில் பின்னடைந்தது.வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமிழ் தேசிய கூட்டமைப்பு அதிகாரத்தை தக்கவைத்துக் கொண்டது.

எங்களது குரூபில் இணைந்து நாட்டின் களநிலவரங்களை உனுக்குடன்அறிந்துகொண்டு எங்களுக்கு ஆதரவு தாருங்கள்👍

https://chat.whatsapp.com/E0AMSh5wxMhHjnUdz1f0p6