மெக்ஸிக்கோ வளைகுடாவில் சென்றுகொண்டிருந்த உல்லாசக் கப்பல் ஒன்றிலிருந்து கடலில் வீழ்ந்த இளைஞர் ஒருவர், சுமார் 15 மணித்தியாலங்களின் பின்னர் மீட்கப்பட்டுள்ளார்.

28 வயதான மேற்படி இளைஞன் கார்னிவெல் வெலோர் எனும் உல்லாசக் கப்பலில் பயணம் செய்தார். கடந்த புதன்கிழமை இரவு கப்பலின் மதுபான விடுதியில் அவர் காணப்பட்டார். அதன்பின் கழிவறைக்கு செல்வதாக கூறிய அவர் திரும்பிவரவில்லை. 

கப்பலில் அவரை காணாத நிலையில் கடலில் மீட்புக்குழுவினரால் தேடுதல் நடத்தப்பட்டது. 

வியாழக்கிழமை மாலை, அமெரிக்காவின் லூசியானா மாநில கரையோரத்திலிருந்து 20 கிலோமீற்றர் தொலைவில் அவர் கண்டுபிடிக்கப்பட்டார். 

அவர் எவ்வாறு கடலில் வீழ்ந்தார் என்பது தெரியவில்லை. 15 மணித்தியாலங்களுக்கு மேல் அவர் கடலில் இருந்திருப்பார் அமெரிக்க கரையோர காவல் படை அதிகாரி லெப்டினன்ட் சேத் குரொஸ் தெரிவித்துள்ளார்.

அவரின் உடல்நிலை ஸ்திரமாக உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனது 17 வருட தொழிற்சார் வாழ்க்கையில் இவ்வாறான சம்பவத்தை அறிந்ததில்லை என சேத் குரொஸ் தெரிவித்துள்ளார்.

2018 ஆம் ஆண்டில் 46 வயதான பிரித்தானிய பெண்ணொருவர் குரோஷியாவுக்கு அருகில் உல்லாசக் கப்பலிலிருந்து வீழ்ந்த நிலையில் 10 மணித்தியாலங்களின் பின் மீட்கப்பட்டிருந்தார்.