மட்டக்களப்பு வாவியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண்களின் சடலங்கள் இன்று (07) மாலை மீட்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸார் தெரிவித்தனர்.
மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சின்ன உப்போடை பகுதியில் உள்ள வாவியில், இரண்டு சடலங்கள் மிதந்த நிலையில் கரை ஒதுங்கியிருப்பதை இன்று மாலை 5.00 மணியளவில் அவதானித்த பொதுமக்கள், இது குறித்து பொலிஸாருக்குத் தகவல் வழங்கினர்.
இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸாரும் தடயவியல் பிரிவு அதிகாரிகளும் நீரில் மூழ்கிய நிலையில் காணப்பட்ட இரு ஆண்களின் சடலங்களையும் மீட்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சடலங்களை அடையாளம் காண்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், நீதிமன்ற அனுமதியைப் பெற்று பிரேத பரிசோதனைக்காக சடலங்களை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்க பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
-சரவணன்

0 Comments