Ticker

6/recent/ticker-posts

இரண்டு கப்பல்களை சிறைபிடித்த ஈரான் – அதிகரிக்கும் பதற்றம்

 


ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கடந்த பெப்ரவரி 28-ஆம் திகதி தாக்குதல் நடத்தியது. இதில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியானார்கள்.

இந்த தாக்குதல், ஏறக்குறைய 40 நாட்களாக நீடித்து வந்த நிலையில், கடந்த 8-ஆம் திகதி 2 வார கால போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது.

இதனால், பதற்றம் சற்று தணிந்தது. இதனை தொடர்ந்து, ஹோர்மூஸ் நீரிணையை ஈரான் திறந்தது.

எனினும், அந்த பகுதியை கடந்து செல்லும் கப்பல்கள் தங்களுக்கு கட்டணம் செலுத்த வேண்டும் என ஈரான் அதிரடியாக அறிவித்தது.

இது உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இந்த நிலையில், ஈரானின் இஸ்லாமிய புரட்சி காவல் படையினர், ஹோர்மூஸ் நீரிணையில் 2 கப்பல்களை சிறைபிடித்து வைத்துள்ளனர்.

அவற்றில் ஒன்று, இந்தியாவை நோக்கி வந்த கப்பல் ஆகும். எபமினன்டோஸ் என்ற அந்த கப்பல், விதிகளை மீறி விட்டது என ஈரான் தெரிவித்து உள்ளது.

இதேபோன்று, எம்.எஸ்.சி. பிரான்சிஸ்கா என்ற கப்பலையும் ஈரான் முடக்கியுள்ளது.

இதில் எம்.எஸ்.சி., உலக அளவில் மிக பெரிய கப்பல் நிறுவனங்களில் ஒன்றாகும். இதனால், அந்த பகுதியில் பதற்றம் அதிகரித்து உள்ளது.

கடல்சார் பாதுகாப்பை மோசடி செய்யும் வகையிலும், தேவையான அனுமதி இன்றியும் கப்பல்கள் இயக்கப்பட்டு உள்ளன.

அதனால், அந்த கப்பல்கள் சிறைபிடிக்கப்பட்டு, ஈரான் கடற்பகுதியை நோக்கி கொண்டு செல்லப்படுகின்றன என அதுபற்றி ஈரானின் இஸ்லாமிய புரட்சி காவல் படை வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கின்றது.

ஹோர்மூஸ் நீரிணையில் ஒழுங்கு மற்றும் பாதுகாப்பை சீர்குலைப்பது என்பது எங்களுக்கான எச்சரிக்கை வரம்பு ஆகும் என்றும் அறிக்கை தெரிவித்து உள்ளது.

இதுதவிர, யுபோரியா என்ற பெயரிடப்பட்ட கிரேக்க நாட்டுக்குரிய 3-வது கப்பல் ஒன்றையும் சிறைபிடித்த ஈரான், அதனை தன்னுடைய கடற்கரைக்கு கொண்டு சென்று நிறுத்தி உள்ளது.

Post a Comment

0 Comments