Ticker

6/recent/ticker-posts

வாரந்த சந்தை தொடர்பில் கைகலப்பு பிரதேச சபை உறுப்பினர்கள் இருவர் உட்பட நால்வர் வைத்தியசாலையில் அனுமதி.!!



ஓட்டமாவடி மற்றும் வாழைச்சேனை வர்த்தக சங்கங்கள் ஒன்றிணைந்து மேற்கொண்ட கடையடைப்புப் போராட்டம் (31) செவ்வாய்க்கிழமை மேற்கொள்ளப்பட்டது.


இதன்போது, செம்மண்ணோடை கப்பல் ஹாஜியார் சந்தியில் இயங்கி வரும் வாராந்த சந்தை பகுதியில் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட கைகலப்பில் நால்வர் தாக்கப்பட்ட நிலையில் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வாழைச்சேனை பிரதேச சபையின் ஒத்துழைப்புடன் செம்மண்ணோடை பகுதியில் நடாத்தப்பட்டு வரும் வாராந்த சந்தைக்கு எதிர்ப்புத் தெரிவித்தே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.



ஓட்டமாவடி பிரதேச சபையின் குத்தகையின் கீழ் மீராவோடை பகுதியில் புதன்கிழமைகளில் இயங்கி வந்த வாராந்த சந்தை மற்றும் வாழைச்சேனை பிரதேச சபையின் குத்தகையின் கீழ் செம்மண்ணோடை பகுதியில் செவ்வாய்க்கிழமைகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வாராந்த சந்தை ஆகிய இரு சந்தைகளையும் பிரதி சனிக்கிழமைகளில் மாத்திரமே நடாத்துமாறு வலியுறுத்தியே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

ஓட்டமாவடி பிரதேச சபை பிரிவிலுள்ள மீராவோடை வாராந்த சந்தை இணக்கப்பாட்டுக்கு அமைய சனிக்கிழமைகளில் நடாத்தப்பட்டு வரும் நிலையில், வாழைச்சேனை பிரதேச சபை பிரிவிலுள்ள செம்மண்ணோடை வாராந்த சந்தை இணக்கப்பாட்டை மீறி செவ்வாய்க்கிழமைகளில் நடாத்தப்பட்டு வருவதாக தெரிவித்து இந்த எதிர்ப்பு எழுந்துள்ளது.

இரு பிரதேச சபைகள் மற்றும் பொது நிறுவனங்கள் எடுத்த தீர்மானங்களை வாழைச்சேனை பிரதேச சபை மீறிச் செயற்படுவதாக ஓட்டமாவடி - வாழைச்சேனை ஆகிய ஒன்றிணைந்த வர்த்தக சங்கங்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

மீராவோடை வாராந்த சந்தை நடைபெறும் சனிக்கிழமை தினத்தில் செம்மண்ணோடை வாராந்த சந்தையும் இயங்க வேண்டும் என இரு வர்த்தக சங்கங்களும் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில்தான், இரு குழுக்களுக்கு மத்தியில் ஏற்பட்ட முரண்பாடு கைகலப்பில் முடிந்துள்ளது.


இதில், வாழைச்சேனை பிரதேச சபை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் ஏ.எல்.ஏ.கபூர், ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் எம்.ஏ.எப்.றிஸ்வானா உட்பட நால்வர் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


இவ் விவகாரம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment

0 Comments