புத்தாண்டு தினத்தில் களுவாஞ்சிகுடி பகுதியில் கடையொன்றிலிருந்து 57 கிலோ அழுகிய கோழி இறைச்சி மீட்கப்பட்டு அழிக்கப்பட்டது
களுவாஞ்சிகுடி பிரதேசத்தில் கடமையாற்றும் ஓர் நேர்மையான பொதுசுகாதார பரிசோதகர் கஜானனின் அதிரடியில் வெளிச்சத்திற்கு வந்த உண்மை வியாபாரியை கைது செய்ய வலைவீச்சு.
களுவாஞ்சிகுடி பகுதியில் பொதுமக்களின் நலனுக்கு கேடு ஏற்படுத்தும் சம்பவங்களுக்கு எதிராக பொதுச் சுகாதார பரிசோதகர் கஜானன் அண்மைக்காலங்களில் முன்னெடுத்து வரும் அதிரடி நடவடிக்கைகள் பலராலும் பாராட்டப்படுகிறது
புத்தாண்டு தினமான நேற்றைய தினம் மட்டக்களப்பு, களுவாஞ்சிக்குடி பொதுச் சுகாதாரப் பரிசோதகர் பிரிவில் முன்னெடுக்கப்பட்ட அதிரடி சுற்றிவளைப்பு ஒன்றின் போது கோழி இறைச்சிக் கடையொன்றில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 57.5 கிலோ கிராம் எடையுள்ள ஏற்கனவே இறந்த கோழிகளின் இறைச்சி கைப்பற்றப்பட்டுள்ளது.
குறித்த இறைச்சிக் கடையின் குளிர்சாதனப் பெட்டியில் நீண்ட நேரம் இறந்த நிலையில் இருந்த கோழிகளின் இறைச்சி மக்களுக்கு விற்பனை செய்வதற்காக வைக்கப்பட்டிருந்தமை கண்டறியப்பட்டதை அடுத்து, களுவாஞ்சிக்குடி பிரிவுக்குப் பொறுப்பான பொதுச் சுகாதாரப் பரிசோதகர் த.கஜானன், குறித்த வியாபாரிக்குக் கடும் எச்சரிக்கை விடுத்ததுடன் அவருக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.
கைப்பற்றப்பட்ட பாவனைக்கு உதவாத கோழி இறைச்சி அனைத்தும் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களால் உடனடியாக அழிக்கப்பட்டது.
பண்டிகைக் காலங்களில் இலாப வெறியில் தரமற்ற உணவுகளை விற்பனை செய்பவர்களுக்கு எதிராகக் கடும் சட்ட நடவடிக்கை பாயும் என களுவாஞ்சிகுடி பொதுச்சுகாதார பிரிவினர் எச்சரித்துள்ளனர்.







0 Comments