கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில், ஒன்றரை வயது மதிக்கத்தக்க பெண் குழந்தை ஒன்றை 50,000 ரூபாய்க்கு விற்பனை செய்த தாய் மற்றும் அதற்கு உடந்தையாக இருந்த நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கிளிநொச்சி, தர்மபுரம் பகுதியில் உள்ள கிராமம் ஒன்றில் வசிக்கும் தாய் ஒருவரே இவ்வாறு தனது குழந்தையை பணத்திற்காக விற்பனை செய்துள்ளார். வறுமை அல்லது வேறு காரணங்களால் இந்த விற்பனை நடைபெற்றதா என்பது குறித்து பொலிஸார் தீவிர
விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
குறித்த குழந்தையை கொள்வனவு செய்ததாகக் கூறப்படும் நபர் மற்றும் விற்பனைக்கு இடைத்தரகராகச் செயற்பட்டதாக சந்தேகிக்கப்படும் ஆண் ஒருவரும் பொலிஸாரால் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து தர்மபுரம் பொலிஸார் மேற்கொண்ட துரித நடவடிக்கையினால் இந்தச் சட்டவிரோத விற்பனை முறியடிக்கப்பட்டுள்ளது.
குழந்தையை விற்ற தாய் மற்றும் விற்பனைக்கு உதவிய நபர் தற்போது பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
மீட்கப்பட்ட குழந்தை தற்போது மருத்துவப் பரிசோதனைக்காகவும், பாதுகாப்பிற்காகவும் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை தர்மபுரம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். சந்தேகநபர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் கிளிநொச்சி பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

0 Comments