கம்பளை, எத்கால நாகொல்ல பகுதியில் தனது தாய் மற்றும் 7 வயது சகோதரனுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த 3 வயது சிறுமி, கார் ஒன்றில் மோதி பலியான சம்பவம் தொடர்பான CCTV காட்சிகள் வெளியாகியுள்ளன.
இவ்வாறு உயிரிழந்தவர் நாவலபிட்டிய பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி நிஸங்க நந்தன குலதுங்கவின் மகளான நிசாரா கெனுலி குலதுங்க என்ற முன்பள்ளிச் சிறுமி ஆவார்.
தனது முன்பள்ளி ஆசிரியையின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காகத் தாய் மற்றும் சகோதரனுடன் மாவத்துர பகுதிக்குச் சென்று கொண்டிருந்தபோது, பேருந்து ஒன்றை முந்திச் செல்ல முயன்ற கார் இவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிளுடன் மோதியுள்ளது.
விபத்தின் பின்னர் கம்பளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட நிலையில், கடந்த 20ஆம் திகதி மாலை 5.00 மணியளவில் அச்சிறுமி உயிரிழந்துள்ளார்.
நெஞ்சு மற்றும் வயிற்றுப் பகுதியில் ஏற்பட்ட பலத்த காயம் மற்றும் உட்புற இரத்தப்போக்கு காரணமாகவே அவர் உயிரிழந்துள்ளதாகக் கம்பளை வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி சசிந்த ரணதுங்க தெரிவித்துள்ளார்.
இச்சிறுமியின் தாயாரான குமாரி ஹேரத்தின் கை ஒன்று முறிவடைந்துள்ளது.
கவனக்குறைவாகக் காரைச் செலுத்திய நாவலபிட்டிய, அம்பகமுவ பகுதியைச் சேர்ந்த 82 வயதுடைய ஓய்வுபெற்ற ஒருவரான குணபால ஜெரால்ட் காமிணி சுபசிங்க, கம்பளை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் இன்று (23) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டு, பின்னர் தலா பத்து இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
எத்கால பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரியந்த பண்டார உள்ளிட்ட குழுவினர் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

0 Comments