(பாறுக் ஷிஹான்)
உயர் மின்னழுத்த மின்கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதியதில் இராணுவ வீரர் உயிரிழந்தார்.
அம்பாறை உஹன பொலிஸ் நிலையத்திற்குட்பட்ட சமன பெத்த பிரிவேனா அருகே மோட்டார் சைக்கிள் வீதியை விட்டு விலகி உயர் மின்னழுத்த மின்கம்பத்தில் மோதியதில் மோட்டார் சைக்கிள் செலுத்தியவர் உயிரிழந்தார்.
இந்த விபத்து இன்று(25 ) அதிகாலை 1:15 மணியளவில் இடம்பெற்றுள்ளதுடன் குறித்த விபத்தில் காயமடைந்தவர் மற்றுமொரு வாகனத்தில் அம்பாறை பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.
இவ்வாறு உயிரிழந்தவர் இலங்கை இராணுவத்தின் முல்லைத்தீவு முகாமில் பணியாற்றும் இராணுவ வீரர் என்பதுடன்
இலங்கை இராணுவத்தின் மின் மற்றும் இயந்திரவியல் பட்டாலியனைச் சேர்ந்த 22 வயதுடைய ஆர்.எச். உதிக மலிந்த ரணசிங்க என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
குறித்த இராணுவ வீரர் விடுமுறையில் பொலன்னறுவைக்குச் சென்று பின்னர் மஹியங்கனையில் உள்ள தனது பாட்டியைப் பார்த்துவிட்டு அம்பாறை பொல்வத்தைக்குத் செல்லும் வழியில் விபத்திற்குள்ளாகியுள்ளமை ஆரம்ப கட்ட விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.
மேலும் அம்பாறை மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த பண்டார கஸ்தூரி ஆராச்சியின் அறிவுறுத்தலின் பேரில் உஹன பிரிவுக்குப் பொறுப்பான உதவி பொலிஸ் அத்தியட்சகர் டி.எம். திசாநாயக்கவின் மேற்பார்வையின் கீழ் உஹன பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தலைமைப் பொலிஸ் பரிசோதகர் சுமித் குணவர்தன உள்ளிட்ட போக்குவரத்துப் பிரிவின் அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

0 Comments