நாட்டின் சில பகுதிகளில் இடம்பெற்ற வீதி விபத்துகளில் இரண்டு இளைஞர்கள் உட்பட மூவர் உயிரிழந்தனர்.
காரைநகர் - மாதகல் வீதியில் பொன்னாலை கோவில் அருகே இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பொன்னாலைய சந்தி நோக்கி அதிவேகமாகச் சென்ற மோட்டார் சைக்கிள் ஒன்று, கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி பனை மரத்துடன் மோதியதால் இந்த விபத்து நேர்ந்துள்ளது.
விபத்தில் காயமடைந்த மோட்டார் சைக்கிள் செலுத்துனரும் பின்னால் அமர்ந்து சென்றவரும் காரைநகர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சாரதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
உயிரிழந்தவர் காரைநகர், விக்காவிலைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞராவார். வட்டுக்கோட்டை பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அதேநேரம், புத்தளம் - திருகோணமலை வீதியின் 17ஆம் சந்தி பகுதியில், அனுராதபுரம் நோக்கிச் சென்ற கெப் வாகனமொன்று, எதிரே நெல் மூட்டைகளை ஏற்றி வந்த கை உழவு இயந்திரத்துடன் நேருக்கு நேர் மோதியதில் மற்றுமொரு விபத்து நிகழ்ந்துள்ளது.
இந்த விபத்தில் காயமடைந்த கை உழவு இயந்திரத்தின் சாரதி புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.
உயிரிழந்தவர் அளுத்கம, இஹல புளியங்குளம் பகுதியைச் சேர்ந்த 61 வயதுடையவர் ஆவார். விபத்துடன் தொடர்புடைய 41 வயதுடைய கெப் வாகனச் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், சாலியவெவ பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
அத்துடன், தம்புள்ளை - ஹபரணை வீதியின் திகம்பதன பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 19 வயதுடைய மற்றுமொரு இளைஞர் உயிரிழந்தார்.
ஹபரணை நோக்கிச் சென்ற வேன் ஒன்றும், எதிரே வந்த மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.
விபத்தில் காயமடைந்த மோட்டார் சைக்கிள் செலுத்துனர், பின்னால் அமர்ந்து வந்தவர் மற்றும் வேனின் சாரதி ஆகியோர் தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மோட்டார் சைக்கிள் சாரதி உயிரிழந்தார்.
சம்பவம் குறித்து சீகிரியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


0 Comments