Ticker

6/recent/ticker-posts

ஈரான் -அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கிடையில் யுத்தம் ஏற்படாமல் தடுக்க சவூதி அரேபியா ஏன் முயற்சிக்கிறது…..?


Razana Manaf

மத்திய கிழக்கு பிராந்தியத்தின் இரு பெரும் சக்திகளான சவூதி அரேபியாவிற்கும் ஈரானுக்கும் இடையிலான உறவு, பல தசாப்தங்களாக மோதல்களும் சமரசங்களும் நிறைந்த ஒரு நீண்ட வரலாற்றைக் கொண்டது. 

சுன்னி மக்களை அதிகமாக கொண்ட சவூதி அரேபியாவும், ஷீயா மக்களை அதிகமாக கொண்ட ஈரானுக்கும் இடையிலான மோதல் மத ரீதியானது மட்டுமல்ல, அது பிராந்திய மேலாதிக்கத்திற்கான ஒரு போட்டியுமாகும். 

1979 இல் ஈரானில் நடந்த புரட்சிக்கு பிறகு, இரு நாடுகளுக்கும் இடையே விரிசல்கள் அதிகமானது. குறிப்பாக யெமன், சிரியா மற்றும் லெபனான் ஆகிய நாடுகளில் நடக்கும் உள்நாட்டுப் போர்களில் இரு நாடுகளும் எதிரெதிர் துருவங்களாகச் செயல்பட்டன.

இந்த நிலையில் 2016 ஆம் ஆண்டு ஜனவரி 2ம் திகதி சவூதியில் ஷியா மதத் தலைவர் ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஈரானில் உள்ள சவூதி தூதரகம் தாக்கப்பட்டது. இதனால் இரு நாடுகளும் தங்கள் தூதரக உறவுகளை முழுமையாகத் துண்டித்துக்கொண்டன. அடுத்த ஏழு ஆண்டுகள் மத்திய கிழக்கில் பதற்றமான சூழலே நிலவியது.

2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் சீனாவின் பீஜிங் நகரில் நடந்த பேச்சுவார்த்தையில், சவூதியும் ஈரானும் மீண்டும் தூதரக உறவுகளைத் தொடங்க ஒப்புக்கொண்டன. இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாகக் கருதப்பட்டதுடன் இரு நாடுகளும் மீண்டும் தங்கள் தூதரகங்களை திறந்து, தூதர்களை நியமித்துள்ளன. அத்துடன் 2001ஆம் ஆண்டு இரு நாடுகளுக்கும் இடையில் கையெழுத்தான பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை மீண்டும் செயல்படுத்த இரு நாடுகளும் இணங்கியுள்ளன.

அந்த உறவுகளின் தொடர்ச்சியாக அண்மைக்காலமிருந்து சவூதி அரேபியா ஈரானுடன் மிகவும் இணக்கமான போக்கைக் கடைபிடிக்கிறது. இதனால்தான் ஈரான் மீது அமெரிக்காவோ அல்லது இஸ்ரேலோ தாக்குதல் நடத்தினால், தனது வான்வெளியைப் பயன்படுத்த அனுமதிப்பதில்லை என்று சவூதி அரேபியா அறிவித்தது.

ஈரான் மீது அமெரிக்கா அல்லது இஸ்ரேல் தாக்குதல் நடத்துவது குறித்து சவூதி அரேபியா மிகுந்த கவலை கொள்வதற்குப் பின்னால் மிக முக்கியமான பொருளாதார மற்றும் பாதுகாப்பு காரணங்கள் உள்ளன.

🔴 சவூதி இளவரசர் முகமது பின் சல்மானின் கனவுத் திட்டமான ‘விஷன் 2030’, சவூதி அரேபியாவை எண்ணெய் சார்ந்த பொருளாதாரத்திலிருந்து சுற்றுலா மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த நாடாக மாற்ற முயல்கிறது. பிராந்தியத்தில் போர் வெடித்தால், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் சவூதிக்கு வரத் தயங்குவார்கள்.
‘நியோம்’ என்ற பிரம்மாண்ட கட்டுமானத் திட்டங்கள் போரினால் பாதிக்கப்படலாம் அல்லது நிதி நெருக்கடியைச் சந்திக்கலாம்.

🔴 கடந்த 2019 ஆம் ஆண்டு சவூதியின் ‘அப்கைக்’ எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையின் மீது நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதல் உலகையே அதிரவைத்தது.
அமெரிக்கா ஈரானைத் தாக்கினால், அதற்குப் பதிலடியாக ஈரான் அல்லது அதன் ஆதரவு அமைப்புகள் மீண்டும் சவூதியின் எண்ணெய் ஆலைகளைத் தாக்கும் அபாயம் உள்ளது.
இது சவூதியின் வருமானத்தைப் பாதிப்பதோடு, உலகளவில் எரிபொருள் விலையை அதிகரிக்கச் செய்யும்.

🔴 உலக எண்ணெய் விநியோகத்தில் சுமார் 30% பகுதி ஈரானுக்கு அருகிலுள்ள ஹார்முஸ் நீரிணை வழியாகவே செல்கிறது. போர் ஏற்பட்டால் இந்த வழியை ஈரான் முடக்கும்.
இது சவூதி உள்ளிட்ட அனைத்து வளைகுடா நாடுகளின் ஏற்றுமதியையும் முற்றிலுமாக முடக்கி, உலகப் பொருளாதாரச் சரிவுக்கு வழிவகுக்கும்.

🔴 2023ல் சீனாவின் முன்னிலையில் ஏற்பட்டசமாதான ஒப்பந்தத்திற்குப் பிறகு, சவூதிக்கும் ஈரானுக்கும் இடையே இப்போது இணக்கமான உறவு நிலவுகிறது. சவூதி இப்போது ஈரானை ஒரு எதிரியாகப் பார்க்காமல், ஒரு ‘பிராந்தியப் பங்காளியாக’ பார்க்கத் தொடங்கியுள்ளது.
தேவையற்ற ஒரு போர், பல ஆண்டுகள் உழைத்து உருவாக்கிய இந்த அமைதியைச் சிதைத்துவிடும் என சவூதி கருதுகிறது.

🔴 சவூதி அரேபியா தனது இராணுவத்தைப் பலப்படுத்தினாலும், ஒரு பெரிய அளவிலான பிராந்தியப் போரில் நேரடியாக ஈடுபட அது விரும்பவில்லை. குறிப்பாக அமெரிக்காவின் போருக்காகத் தனது வான்வெளியைப் பயன்படுத்த அனுமதித்தால், அது ஈரானின் நேரடிப் பகைக்குக் காரணமாகும். “எங்கள் மண்ணை யாரையும் தாக்கப் பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம்” என்ற சவூதியின் தற்போதைய கொள்கை இதனாலேயே உருவானது.

🔴 சவூதி அரேபியா தனது நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் பாதுகாப்பைப் பாதுகாக்கவே ஈரானுக்கு எதிரான தாக்குதலை எதிர்க்கிறது.

🔴 சவூதி அரேபியா இப்போது தனது வெளியுறவுக் கொள்கையை மோதல் என்பதிலிருந்து நிதானம் மற்றும் ராஜதந்திரம் என்ற நிலைக்கு மாற்றியுள்ளது ஈரான் அரசு வீழ்த்தப்பட்டால் அல்லது பலவீனமடைந்தால், அந்தப் பகுதியில் ஏற்படும் அரசியல் வெற்றிடம் ஐஎஸ்ஐஎஸ் போன்ற பயங்கரவாத அமைப்புகள் மீண்டும் உருவெடுக்க வழிவகுக்கும் என்று சவூதி அஞ்சுகிறது.
அண்டை நாடுகளில் ஏற்படும் குழப்பம் சவூதியின் எல்லைப் பாதுகாப்பிற்கு பெரும் சவாலாக அமையும்.

🔴 தனது நாட்டில் உள்ள ஷியா பிரிவு மக்களின் உணர்வுகளையும் சவூதி அரேபியா கவனத்தில் கொள்கிறது.
ஈரானின் உச்ச தலைவர் போன்ற ஆன்மீகத் தலைவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டால், அது சவூதிக்குள்ளும் அல்லது அண்டை வளைகுடா நாடுகளுக்குள்ளும் சமூகப் பதற்றத்தை உருவாக்கக்கூடும். ஒரு போரை ஆதரிப்பது அந்நாட்டின் உள்நாட்டு அமைதியைக் குலைக்கக்கூடும் என ஆட்சியாளர்கள் கருதுகிறார்கள்.

🔴 கடந்த காலங்களில் ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் போர்களில் அமெரிக்கா எடுத்த முடிவுகள் அந்தப் பிராந்தியத்திற்குப் பெரிய நன்மையைத் தரவில்லை என்பதை சவூதி உணர்ந்துள்ளது. அமெரிக்கா போரைத் தொடங்கிவிட்டு பாதியிலேயே வெளியேறினால், அதன் நீண்டகாலப் பாதிப்புகளை சவூதி போன்ற அண்டை நாடுகளே சுமக்க வேண்டியிருக்கும்.
எனவே, அமெரிக்காவின் இராணுவத் தீர்வை விட, பிராந்திய நாடுகளே பேசித் தீர்க்கும் சமரசத்தையே சவூதி விரும்புகிறது.

🔴 சவூதி தற்போது உலகளாவிய வணிக மையமாக  உருவெடுக்க முயல்கிறது.
ஃபிஃபா உலகக்கோப்பை 2034 மற்றும் எக்ஸ்போ 2030 போன்ற உலகளாவிய நிகழ்வுகளை நடத்தத் தயாராகி வரும் வேளையில், போர்ச் சூழல் நிலவினால் பில்லியன் கணக்கான டொலர் முதலீடுகள் வெளியேறிவிடும்.
அமைதியான சூழல் இருந்தால் மட்டுமே சுற்றுலா மற்றும் தொழில்நுட்பத் துறையில் சவூதியால் சாதிக்க முடியும்.

🔴 சவூதி அரேபியா இப்போது அமெரிக்காவை மட்டும் சார்ந்து இல்லாமல், சீனா மற்றும் ரஷ்யாவுடனும் நெருங்கிய உறவை வைத்துள்ளது.
ஈரானின் நெருங்கிய கூட்டாளிகளான சீனா மற்றும் ரஷ்யா, இந்தப் போரை விரும்பவில்லை. தனது புதிய நட்பு நாடுகளின் விருப்பத்திற்கு மாறாகச் செயல்படுவது சவூதியின் தற்போதைய பன்முக வெளியுறவுக் கொள்கைக்குப் பாதிப்பை ஏற்படுத்தும்.

🔴 சவூதி அரேபியா இப்போது ஒரு போர் முனையாக இருப்பதை விட, பொருளாதார முனையாக இருக்கவே விரும்புகிறது. இதற்காகவே ஈரானுடனான மோதலைத் தவிர்த்து, அமைதிப் பேச்சுவார்த்தையை வலியுறுத்துகிறது.

இவ்வாறான பிரச்சினைகளை தடுப்பதற்காகவே அந்நாடு யுத்தம் ஏற்படாமல் இருக்க மிகக்கடுமையாக பாடுபடுகிறது. உண்மையிலேயே இது வரவேற்கப்படவேண்டிய அந்நாட்டின் இராஜதந்திர நகர்வுகளாக இருக்கிறது.

Post a Comment

0 Comments