நவகமுவ, கொரதொட்ட மெனிகாகார பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 20 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அவருடன் இருந்த மேலும் இருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பொரள்ளை ‘குடு துமிந்த’ என்ற குற்றவாளியின் தரப்பைச் சேர்ந்த குழுவினரே இந்தத் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாகவும், பொரள்ளை ‘குடு சது’ தரப்பினரே இத்தாக்குதலை நடத்தியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
நவகமுவ கொரதொட்ட மெனிகாகார பகுதியில் உள்ள வாடகை வீடு ஒன்றில் தங்கியிருந்த குழுவினரை இலக்கு வைத்தே நேற்று இரவு 9.30 முதல் 10 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
சம்பவத்தின் போது வீட்டில் மூவர் இருந்துள்ள நிலையில், அவர்களில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், ஏனைய இருவர் தற்போது ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
காணியின் வேலியொன்றை வெட்டிவிட்டு வீட்டிற்குள் நுழைந்த இரு துப்பாக்கிதாரிகள், கைத்துப்பாக்கியைப் பயன்படுத்தி இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் பொரள்ளை பிரதேசத்தைச் சேர்ந்த ‘சங்கல்ப’ என்ற 20 வயதுடைய இளைஞர் ஆவார். காயமடைந்த இருவரும் அம்பலாந்தோட்டை மற்றும் தெமட்டகொட பிரதேசங்களைச் சேர்ந்தவர்களாவர்.
கொல்லப்பட்ட இளைஞன் கடந்த நவம்பர் 14ஆம் திகதி பொரள்ளை சரண வீதியில் வைத்து மற்றுமொருவருடன் இணைந்து பெண் ஒருவரின் கையைத் துண்டித்தவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
பாதிக்கப்பட்ட அந்தப் பெண் பொரள்ளை ‘குடு சது’ என்பவருக்கு நெருக்கமானவர் என்றும், குடு சதுவின் ஆலோசனையின் பேரில் கடந்த ஜூன் 24ஆம் திகதி பொரள்ளை ‘டம்ப் எக்க’ தோட்டம் பகுதியில் நபரைச் சுட வந்த துப்பாக்கிதாரியும் மோட்டார் சைக்கிள் ஓட்டுநரும் இந்தப் பெண்ணின் வீட்டிலிருந்தே வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அச்சமயம் துப்பாக்கிச் சூட்டு இலக்கிலிருந்து தப்பி ஓடிய நபரும், நேற்று உயிரிழந்த இளைஞனும் இணைந்தே குறித்த பெண்ணின் கையைத் துண்டித்திருந்தனர். இவர்கள் இருவரும் ‘குடு சது’வின் எதிரி தரப்பான ‘குடு துமிந்த’வின் நெருங்கிய சகாக்கள் ஆவர்.
இந்தச் சம்பவத்தின் பின்னர் சந்தேகநபர்கள் இருவரையும் கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்த போதிலும், அவர்களைக் கண்டுபிடிக்க முடியாமல் போனது.
எவ்வாறாயினும், ‘குடு சது’ தரப்பினருக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதுடன், காயமடைந்தவர்களில் ஒருவர் கடந்த ஜூன் மாதம் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் உயிர் தப்பிய நபரின் மைத்துனர் என பொலிஸார் குறிப்பிட்டனர்.
இதேவேளை, இக்கொலைச் சம்பவத்திற்குப் பழிவாங்க ‘குடு துமிந்த’ தரப்பு தயாராகி வருவதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில், பொரள்ளை பிரதேசத்தில் விசேட பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர்
தெரிவித்தார்.
இந்தத் துப்பாக்கிச் சூடு இவ்வருடத்தில் (2026) பதிவான முதலாவது துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் என்பது குறிப்பிடத்தக்கது.

0 Comments