Ticker

6/recent/ticker-posts

போலி சட்டத்தரணிக்கு விளக்கமறியல்


மட்டக்களப்பில் கைது செய்யப்பட்ட போலி சட்டத்தரணியை அடையாளம் காணும் அணிவகுப்பு, நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (11) இடம்பெற்றபோது அவர் அடையாளம் காணப்பட்டதையடுத்து எதிர்வரும் 24ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மட்டக்களப்பு நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டார்.

செவ்வந்தி பாணியில் மட்டக்களப்பில் செயற்பட்டுவந்த 42 வயதுடைய போலி ஆண் சட்டத்தரணி ஒருவர் கடந்த சனிக்கிழமை (08) அன்று ஓந்தாச்சிமடம் பிரதேசத்தில் வாடகை வீடு ஒன்றில் தங்கியிருந்த போது கைது செய்யப்பட்டார்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவரை கடந்த ஞாயிற்றுக்கிழமை (09) இரவு நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போது அவரை செவ்வாய்க்கிழமை (11) வரை விளக்கமறியலில் வைக்குமாறு அன்றைய தினம் அடையாள அணிவகுப்பு இடம்பெறும் எனவும் நீதவான் உத்தரவிட்டார்.

இதையடுத்து அவர் செவ்வாய்க்கிழமை (11) அன்று நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போது அவரின் வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நீதவான் அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்திய நிலையில் அவருக்கு எதிராக முறைப்பாடு செய்த மூன்று பேரும் அடையாளம் காண்பித்ததையடுத்து எதிர்வரும் 24 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தர பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த சந்தேக நபர் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக சட்டத்தரணி போல் நடித்து வந்துள்ளதாகவும் உயர்கல்வியை விஞ்ஞான பாடம் கற்றுள்ள இவர் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர் எனவும் யுத்தத்தினால் இடம்பெயர்ந்து கொழும்பில் வாழ்ந்து வந்துள்ளதுடன் கல்முனை பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசமொன்றில் திருமணம் முடித்துள்ளதாகவும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதேவேளை அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட சட்டத்தரணி என அடையாளப்படுத்தும் போலி வருகை அட்டை மற்றும் இறப்பர் முத்திரை, சட்டத்தரணி என வாகனத்துக்கு அடையாளப்படுத்தி ஒட்டப்படும் ஸ்டிக்கர்களை தயாரித்து கொடுத்த கல்முனை பிரதேசத்தைச் சேர்ந்த அச்சக உரிமையாளர் ஒருவரும் ஞாயிற்றுக்கிழமை (09) அன்று கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

கனகராசா சரவணன்

Post a Comment

0 Comments