Ticker

6/recent/ticker-posts

24 மணி நேரத்தில் 88 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர்.


புதிய போர் நிறுத்த பேச்சுக்கு மத்தியில் காசாவில் இஸ்ரேலிய தாக்குதல் தீவிரம்

3 நாட்களுக்குள் 200க்கும் அதிகமானோர் பலி

காசாவில் இஸ்ரேலின் தாக்குதல்கள் அதிகரித்து கடந்த 24 மணி நேரத்தில் குறைந்தது 88 பலஸ்தீனர்கள் வரை கொல்லப்பட்ட நிலையில் 15 மாதங்கள் நீடிக்கும் போரை முடிவுக்குக் கொண்டுவரும் புதிய சுற்று போர் நிறுத்த பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில்,இஸ்ரேலுக்கு 8 பில்லியன் டொலர் பெறுமதியான ஆயுதங்களை வழங்க அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

காசா நகரில் உள்ள இரு வீடுகள் மீது இஸ்ரேல் நேற்றுக் காலை நடத்திய வான் தாக்குதல்களில் குறைந்தது 17 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதில் அல் கௌலா குடும்பத்திற்கு சொந்தமான வீடு ஒன்று தரைமட்டமாக்கப்பட்டதாக மருத்துவ வட்டாரங்கள் மற்றும் குடியிருப்பாளர்களை மேற்கோள்காட்டி ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

'பாரிய சத்தத்திற்கு மத்தியில் அதிகாலை 2 மணிக்கு விழித்துக்கொண்டேன்' என்று அண்டை வீட்டாரான அஹமது அய்யான் என்பவர் குறிப்பிட்டுள்ளார். தாக்குதலுக்கு இலக்கான வீட்டில் 14 அல்லது 15 பேர் தங்கி இருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

'இதில் பெரும்பாலானவர்கள் பெண்கள் மற்றும் சிறுவர்கள் என்பதோடு அனைவரும் பொதுமக்கள் ஆவார்கள். அவர்களில் எவரும் ஏவுகணைகளை விசுபவர்கள் அல்லது எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபடுபவர் அல்ல' என்று அய்யான், ரோய்ட்டர்ஸ் செய்தி சேவைக்கு மேலும் தெரிவித்துள்ளார்.


இடிபாடுகளை அகற்றி உயிர்தப்பியவர்களை மக்கள் தேடி வருவதோடு கொல்லப்பட்டவர்களில் பல சிறுவர்களும் இருப்பதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 

தாக்குதலினால் அழிக்கப்பட்ட வீட்டில் இருந்து தொடர்ந்து தீ மற்றும் புகைமூட்டம் இருந்து வருவதாக அங்கிருப்பவர்கள் நேற்று விபரித்திருந்தனர்.

காசா நகரில் இருக்கும் வீடு ஒன்றின் மீது கடந்த சனிக்கிழமை இரவு இடம்பெற்ற மற்றொரு தாக்குதலில் ஐவர் கொல்லப்பட்டதாக பலஸ்தீன சிவில் அவசர சேவை பிரிவு குறிப்பிட்டுள்ளது. இந்த இடிபாடுகளில் மேலும் ஐவர் கொல்லப்பட்டிருப்பதாக அஞ்சப்படுகிறது.

வடக்கு காசாவில் இஸ்ரேல் கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக முற்றுகையை மேற்கொண்டு தீவிர படை நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. வடக்கே ஜபலியா மற்றும் அருகே மத்திய நகராக டெயிர் அல் பலாஹ்வில் இஸ்ரேலின் தாக்குதல்களில் குறைந்தது ஆறு பேர் கொல்லப்பட்டதாக மருத்துவ வட்டார்கள் தெரிவித்துள்ளன.

இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் 88 பேர் வரை கொல்லப்பட்டிருப்பதாக பலஸ்தீன சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


குறிப்பாக காசாவின் குடியிருப்பு கட்டடங்கள், வீதிகளில் திரண்டிருக்கும் மக்கள் மற்றும் சந்தைப் பகுதிகள் அல்லது தற்காலிக முகாம்கள் மீது இஸ்ரேல் நடத்தும் தீவிர தாக்குதல்களில் கடந்த மூன்று நாட்களில் 200க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டிருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் காசாவில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 45,800ஐ தாண்டியுள்ளது. மேலும் 109,000க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர்.

காசாவில் புதிய சுற்று போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாகி இருக்கும் நிலையிலேயே இஸ்ரேலின் தாக்குதல்களும் தீவிரம் அடைந்துள்ளன.

கட்டார் தலைநகர் டோஹாவில் இஸ்ரேலிய பேச்சுவார்த்தையாளர்கள் கட்டார் மற்றும் எகிப்து மத்தியஸ்தர்களுடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்திருப்பதோடு இந்த பேச்சுவார்த்தைகளுக்கு மத்தியஸ்தம் வகிக்கும் அமெரிக்காவின் ஜனாதிபதி ஜோ பைடன் நிர்வாகமும் உடன்படிக்கை ஒன்றுக்கு இணங்கும்படி ஹமாஸை வலியுறுத்தியுள்ளது.

முடியுமான விரைவில் உடன்பாடு ஒன்றை எட்டுவதற்கு பொறுப்புடன் இருப்பதாக ஹமாஸ் கூறியுள்ளபோதும், இரு தரப்பும் உடன்பாடு ஒன்றை எட்டுவதில் எந்தளவு நெருங்கியுள்ளன என்பது உறுதி செய்யப்படவில்லை.

ஹமாஸ் அமைப்பு கடந்த சனிக்கிழமை வெளியிட்ட வீடியோ ஒன்றில், பணயக்கைதியான லிரி அல்பக் என்பவரை காண்பித்துள்ளது. பணயக்கைதிகளை விடுவிப்பதற்கான உடன்படிக்கை ஒன்றை எட்டும்படி அந்தப் பெண் இஸ்ரேலை வலியுத்தியுள்ளார். அவர் ஒரு இஸ்ரேலிய படை வீரர் என்று இஸ்ரேலிய ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன. காசாவில் இஸ்ரேலின் படை நடவடிக்கை உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தி இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வீடியோ தமது இதயங்களை நொறுக்கிவிட்டதாக அல்பக்கின் குடும்பத்தினர் குறிப்பிட்டுள்ளனர்.

'இது எமக்கு தெரிந்த மகள் அல்லது சகோதரி அல்ல. அவர் அதிகம் உளவியல் ரீதியில் பாதிக்கப்பட்டிருப்பது தெரிகிறது' என்று அவரது குடும்பத்தினரின் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. பணயக்கைதிகளை உயிருடன் மீட்பதற்கான வாய்ப்பை தவறவிட வேண்டாம் என்று இஸ்ரேல் அரசு மற்றும் உலகத் தலைவர்களை அந்த குடும்பத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.

இந்த வீடியோவுக்கு பதிலளிக்கும் வகையில் அறிக்கை வெளியிட்ட இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, பணயக்கைதிகளை மீட்பதற்கு ஒய்வின்றி தொடர்ந்து செயற்பட்டு வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

'எமது பணயக்கைதிகளுக்கு தீங்கு விளைவிக்க முயல்பவர்கள் அதற்கான பொறுப்பை ஏற்க வேண்டி இருக்கும்' என்று குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 2023 ஒக்டோபரில் பலஸ்தீன போராளிகள் இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலின்போதே சுமார் 250 பணயக்கைதிகள் பிடிக்கப்பட்டனர். அதில் தொடர்ந்து 100க்கும் அதிகமான பணயக்கைதிகள் காசாவில் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக நம்பப்படுகிறது.

இந்நிலையில் சர்வதேச நிறுவனங்களால் இஸ்ரேல் மீது போர் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு வரும் சூழலில் அதற்கு 8 பில்லியன் டொலர் பெறுமதியாக ஆயுதங்களை விற்பதற்கு திட்டமிடுவதாக அமெரிக்க இராஜாங்க திணைக்களம் அந்நாட்டு கொங்கிரஸ் சபையை அறிவுறுத்தியுள்ளது.

ஏவுகணைகள், செல்கள் மற்றும் மற்ற வெடிபொருட்கள் அடங்கிய ஆயுதங்களை வழங்குவதற்கு அமெரிக்க பிரதிநிதிகள் மற்றும் செனட் சபையின் ஒப்புதல் கிடைக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் பதவிக் காலம் முடிவதற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையிலேயே இந்த முன்னெடுப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. காசா போரில் பெரும் எண்ணிக்கையான பொது மக்கள் கொல்லப்பட்டு வருவதன் காரணமாக இஸ்ரேலுக்கான ஆயுத உதவிகளை இடைநிறுத்தும்படி விடுக்கப்பட்ட கோரிக்கையை அமெரிக்க அரசு நிராகரித்துள்ளது.

Post a Comment

0 Comments