Ticker

6/recent/ticker-posts

மத்ரஸா மாணவர்கள் மரணம் - நாடாளுமன்றத்தில் ரிஷாத் பதியுதீன்


மத்ரஸா மாணவர்கள் மரணம் - நாடாளுமன்றத்தில் ரிஷாத் பதியுதீன் அவர்களால் கேட்கப்பட்ட கேள்வியும், 

அதற்கான அமைச்சரின் பதிலும்

காரைதிவு - மாவடிப்பள்ளி வீதியில், உழவு இயந்திரம் கவிழ்ந்து, வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு, மதரஸா மாணவர்கள் உள்ளிட்ட

8 பேர் உயிரிழந்த துயர சம்பவம், தொடர்பில் சுயாதீனமான விசாரணையை நடத்த வேண்டும் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் சபையில் வலியுறுத்தியுள்ளார். 

இன்று (03) நாடாளுமன்ற அமர்வில், ஒழுங்கு பிரச்சினை ஒன்றை முன்வைத்து, ரிஷாத் பதியுதீன் மேற்படி விடயத்தினை சுட்டிக்காட்டி பேசியுள்ளார்.

தொடர்ந்து பேசிய ரிஷாத் பதியுதீன்,

“அம்பாறை மாவட்டத்தில், மாவடிப்பள்ளியில் அண்மையில் இடம்பெற்ற வெள்ள அனர்த்தத்தில் எட்டு பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களது வீடுகளுக்கு நான் நேற்றுமுன்தினம் (01) விஜயம் செய்திருந்தேன். அப்போது, உயிரிழந்தவர்களின் உறவினர்கள் பொலிஸாரின் பொறுப்பற்ற செயற்பட்டினாலேயே இந்தத் துயர சம்பவம் நிகழ்ந்ததாக குற்றஞ்சாட்டி விசனம் வெளியிட்டனர்.

குறிப்பாக, இந்த சம்பவம் இடம்பெற்ற போது பொலிஸார் கடமையில் இருந்திருக்கிறார்கள். வெள்ளப் பாதிப்பினால் மதரஸாவிலிருந்து வெளியேறுவதற்கு வழி இல்லாததன் காரணமாகவே, மதரஸா நிர்வாகம் மாணவர்களை உழவு இயந்திரத்தில் ஏற்றி அனுப்பியிருக்கின்றது.


இவ்வாறு அவர்கள் அந்தப் பாதையில் பயணித்த போது, வீதியில் வெள்ளம் பெருக்கெடுத்திருந்த நிலையில், பொலிஸார் வீதியை மூடாமல், போக்குவரத்துக்கு அனுமதி அளித்தமையானது பொறுப்பற்ற செயற்பாடாகும். அவர்களை தடுத்து நிறுத்தி நிலைமையை விளக்கியிருக்க வேண்டும். 

அதுமட்டும் இல்லாமல், சம்பவம் இடம்பெற்று சுமார் நான்கு மணித்தியாலயங்களுக்கு பிற்பாடு, கடற்படையினர் வருகை தந்து, அவர்களை காப்பாற்றும் பணியில் ஈடுபட்டிருக்கின்றார்கள். அதுவரைக்கும், பொலிஸார் எவ்வித நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை.

குறிப்பாக, அங்கிருந்தவர்கள் இரண்டு உயிர்களை முயற்சி செய்து காப்பாற்றி இருக்கிறார்கள். இதன்போது, அங்கிருந்த பொதுமக்கள், அவர்களை காப்பாற்றுமாறு பொலிஸாரிடம் கெஞ்சியபோது, பொலிஸ் நிலையத்தில் சென்று முறைப்பாடு செய்யுமாறு பொலிஸார் தெரிவித்திருகின்றார்கள். 

பொலிஸ் நிலையத்துக்கு அவர்கள் சென்று ஒரு மணித்தியாலம் வரை முறைப்பாட்டை செய்வதற்காக காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருந்தது. 

ஒரு அனர்த்தம் ஏற்பட்டிருக்கிறது என்றால், அதற்கான துரித பாதுகாப்பு நடவடிக்கைகளில் இவர்கள் ஈடுபடாது, இந்த மக்களை இவ்வாறு அங்குமிங்கும் செல்லுமாறு பணித்திருப்பது கவலை தருகின்ற விடயம்.

எனவே, இந்த சம்பவம் தொடர்பில் சுயாதீனமான விசாரணை ஒன்றை பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் முன்னெடுக்க வேண்டும் என, இந்த உயர் சபையில் கோரிக்கை விடுக்கின்றேன்” இவ்வாறு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன் கூறினார்.

இதற்கு பதில் வழங்கிய சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க,

“மேற்படி, சம்பவம் தொடர்பில் ஏலவே நாம் கலந்துரையாடியுள்ளோம். மேலும், கட்சித் தலைவர்கள் கூட்டத்திலும் விரிவாக ஆராய எண்ணியுள்ளோம். இந்த விடயம் தொடர்பில், பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் உரிய நடவடிக்கையினை மேற்கொள்வார்” என்று தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments