நான் தமிழ் மக்களை அச்சுறுத்துவேன் என்றும் நான் தமிழ் மக்களிடம் மன்னிப்புக் கோர வேண்டுமென்றும் வடக்கு மக்களிடம் கூறி, மிகவும் தாழ்மையான மனப்பான்மையுடன் இனவாதத்தைத் தூண்ட ரணில் விக்கிரமசிங்க முயற்சிக்கிறார்.

ஆனால், ரணிலின் கருத்துக்கு பதிலடிக்கொடுக்க எனக்கு அவசியமில்லை. அதற்கான சரியான பதிலை சுமந்திரனே வழங்கிவிட்டார். தோழர் தோழர் என்று என்னை ரணில் கூறிக்கொண்டாலும், கடந்த காலங்களில் அவர் தலைமையில் இடம்பெற்ற ஒவ்வொரு மோசடிகள் தொடர்பிலும் விசாரணைகளை முன்னெடுப்பேன்” என்று தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

அனைத்து நிறுவன சேவை சங்கத்தின் 25ஆவது மாநாட்டில் கலந்துகொண்டு நேற்று (08) உரையாற்றும்போதே இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,


தேசிய மக்கள் சக்திக்கு எதிராக விமர்சனம் செய்ய முடியாத நிலைமையை சந்தித்திருக்கிறார்கள். போலியான, திரிபுப்படுத்தப்பட்ட கருத்துகளிலேயே அவர்களின் முழு தேர்தல் செயற்பாடுகளும் தங்கியுள்ளன.



தோழர் வசந்த சமரசிங்கவை கைதுசெய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு வழங்கியுள்ளதாக கருத்துகளை வெளியிட்டார்கள். ஆனால் அவர் எம்முடன் மேடையிலேயே இருக்கிறார். நீதிமன்ற உத்தரவை திருபுபடுத்தியதற்காக நீதிமன்றத்தினாலேயே வழக்கு தாக்கல் செய்ய முடியும். உறுதியாக வழக்கு தொடருவோம். போலித் தகவல்களை வெளியிட்ட சட்டத்தரணிகளின் ‘கோட்’டை நீக்கும் வகையில் திட்டமிடுவோம்.

ரவூப் ஹக்கீமும் இதேபோன்ற போலித் தகவலை வெளியிட்டிருந்தார். இப்போதே வேண்டுமென்றாலும் அவர் மன்னிப்பு கோரலாம். மன்னிப்பு கோராவிட்டால் வழக்கு தாக்கல் செய்வோம். நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் கண்டி, பெரஹெராவை நிறுத்தி விடுவோம் என்று திஸ்ஸ அத்தநாயக்க கருத்து வெளியிட்டிருந்தார். ஆனால், மன்னிப்பு பெற்றாலும் திஸ்ஸவுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய வேண்டும். போலி ஆவணங்களை தயாரிப்பதற்காகவே அவர் இருக்கிறார்.

அதேபோன்று ரணில் விக்கிரமசிங்க வடக்குக்கு சென்று “நான் தமிழ் மக்களை அச்சுறுத்துவேன் என்றும் நான் தமிழ் மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும்” என்றும் கூறியிருந்தார். ரணில் விக்கிரமசிங்க மிகவும் குறுகிய மனப்பான்மையுடன் இனவாதத்தை தூண்ட ரணில் விக்கிரமசிங்க முயற்சிக்கிறார். ஆனால், ரணிலின் கருத்துக்கு பதிலடிக்கொடுக்க அவசியமில்லை. அதற்கான சரியான பதிலை சுமந்திரனே ரணில் விக்கிரமசிங்கவுக்கு வழங்கியுள்ளார். அதற்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.


வடக்குக்குச் சென்று தமிழ் மக்களை சந்தித்து இனவாதத்தை தூண்டுவதற்காக ரணில் வெளியிட்ட கருத்து, அவரின் முயற்சியை வடக்கு மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் சுமந்திரம் எம்.பி. நிராகரித்துள்ளார். தற்போது ரணிலே மன்னிப்பு கோரவேண்டும். நாட்டுக்குள் இனவாதத்தை தூண்டும் அரசியல் தற்போது ஒழிந்துவிட்டது. ஒருவருக்கு ஒருவரும் விரிசலை ஏற்படுத்தும் அரசியலும் ஒழிந்துவிட்டது. அதனால், ரணில் பழைய பொருட்கள் உள்ள கடையில் இருக்க வேண்டியவர்கள். அவை அசாத்தியமானவை. அவை காலாவதியாகிவிட்டன.


“எனது தோழர் அநுர, எனது நண்பர் அநுர” என்று பல முறைகள் கூறியுள்ளார். தற்போது என்னுடன் இணக்கத்துக்கு வர பார்க்கிறார். ஆனால், எங்களுடன் ரணிலால் எப்போதும் இணங்க முடியாது. மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பில் நிச்சயம் விசாரணை செய்வோம். தோழர் தோழர் என்று என்னுடன் இணக்கத்துக்கு வந்தாலும் பார் அனுமதிப் பத்திரங்கள், அரச காணிகளை உங்களின் தோழர்களுக்கு வழங்கியது தொடர்பில் விசாரணைகளை நிச்சயம் முன்னெடுப்போம்’’ என்றார்.