இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 09ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக ஜனநாயக ரீதியில் தெரிவுசெய்யப்பட்ட மாண்புமிகு அனுரகுமார திஸாநாயக்க அவர்களுக்கு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா (ACJU), (இஸ்லாமிய சமய அறிஞர்கள் பேரவை) தனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறது.


உங்கள் தலைமையின் மீது தாய்நாட்டு மக்கள் வைத்துள்ள நம்பிக்கைக்கு குறிப்பிடத்தக்க இந்த சாதனை ஒரு சான்றாகும்.


ஆசியாவின் பழமையான ஜனநாயக நாடுகளில் ஒன்றான இங்கு அதன் குடிமக்கள், தமது தலைவரைச் சுதந்திரமானதும் நியாயமானதுமான ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கும் ஜனநாயக உரிமையைப் பயன்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உங்களது பதவிக்காலத்தில் அனைத்து குடிமக்களுக்கும் அமைதி, செழிப்பு, ஒற்றுமை ஆகியவை ஈண்டு குறிப்பிடப்படக்கூடியவையாக அமையும் என்று அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள், இஸ்லாமிய சமய அறிஞர்கள், இலங்கை வாழ் முஸ்லிம்கள் நம்புவதுடன் அதற்காகப் பிரார்த்தனையும் செய்கின்றோம்.

அன்பிற்குரிய முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பின்வருமாறு கூறியுள்ளார்கள்:


"உங்கள் ஆட்சியாளர்களில் சிறந்தவர்கள், நீங்கள் யாரை விரும்பி, அவர்களும் உங்களை நேசிப்பார்களோ, அவர்களேயாவர்." (நூல்: ஸஹீஹ் முஸ்லிம்)

உங்கள் தலைமையின் கீழ், நீதி, இரக்கம் நிலைநிறுத்தப்பட்டு பௌத்தர்கள், இந்துக்கள், முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் என அனைத்து மதத்தினரையும் உள்வாங்கி ஒற்றுமையாக வாழக்கூடிய ஒரு சமூகத்தை உருவாக்கும் என்றும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா நம்புகிறது.

100ஆண்டுகளுக்கும் மேலாக இந்த நாட்டில் இஸ்லாமிய சமய மற்றும் சமூகப் பணிகளில் தொடராக ஈடுபட்டு வருவதுடன் சட்டப்பூர்வமாகத் தேர்ந்தெடுக்கப்படும் அரசாங்கங்களுக்கு ஜம்இய்யா ஒத்துழைப்பையும் வழங்கி வருகிறது.


குறிப்பாக சமூகங்களுக்கு இடையிலான சகவாழ்வை வலுப்படுத்தல், தேசாபிமானம், மக்களின் நல்வாழ்வை மேம்படுத்தலின் போது என்றும் கைகோர்த்துப் பணியாற்றி வருகிறது.


எல்லாம் வல்ல அல்லாஹ் தனது கிருபையின் மூலம், இந்தத் தேசத்தை ஒளிமயமான, வளமான எதிர்காலத்தை நோக்கி வழிநடத்த உங்களுக்கும் உங்களுடன் இணைந்து செயற்படும் குழுவிற்கும் சிறந்த ஞானத்தையும் ஆற்றலையும் தந்தருள்வானாக!


முஃப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி

தலைவர்

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா







அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித்

பொதுச் செயலாளர்

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா