பிரேசில் நாட்டில் வெறும் 19 வயதே ஆன பாடிபில்டர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். உடல் பருமனுக்கு எதிராகப் போரடி வெறும் 5 ஆண்டுகளில் உடலை மாற்றி பாடிபில்டிங் விளையாட்டில் சாதித்த இவர் திடீரென மரணமடைந்துள்ளார். இது சமூக வலைத்தளங்களில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நமது நாட்டில் உடல் பருமன் என்பது பெரிய பிரச்சினையாக மாறி வருகிறது. ஃபாஸ்ட் புட் மற்றும் மோசமான வாழ்க்கை முறையால் இப்போது இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் கூட உடல் பருமனால் அவதிப்பட்டு வருகிறார்கள். உடல் பருமன்: உடல் பருமனின் ஆபத்தை உணர்ந்து பலரும் உடலைக் குறைக்க முயன்றாலும் அது அவ்வளவு ஈஸியாக அமைவதில்லை. உடல் பருமனால் அவதிப்படும் சிலர் பாடிபில்டிங் நோக்கியும் திரும்புகிறார்கள்.
ஆனால், அதிலும் கூட பல பிரச்சினைகள் இருக்கிறது. இதற்கிடையே அப்படியொரு ஷாக் சம்பவம் தான் பிரேசில் நாட்டில் நடந்துள்ளது. 19 வயது பாடிபில்டர்: அங்கே 19 வயதே ஆன பாடிபில்டர் ஒருவர் சில நாட்களுக்கு முன்பு பரிதாபமாக உயிரிழந்தார். அவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. உயிரிழந்த பாடிபில்டரின் பெயர் மேதியஸ் பாவ்லக் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. உடல் பருமனில் இருந்து விடுபட ஐந்தே ஆண்டுகளில் தனது உடலை மாற்றிக் கொண்டு இவர் பாடிபில்டராக ஆனவர் என்பது குறிப்பிடத்தக்கது..
அங்கு நடந்த பாடிபில்டிங் போட்டிகளிலும் அவர் தொடர்ச்சியாகக் கலந்து கொண்டு வந்திருக்கிறார். பாடிபில்டிங் வீரர்களிடையே வளர்ந்து வரும் நட்சத்திரமாக இருந்த அவரை பலரும் பாராட்டி ஊக்குவித்தே வந்துள்ளனர். சமீபத்தில் அங்கே பிராந்திய அளவில் நடந்த போட்டியில் அவர் நான்காவது இடத்தைப் பிடித்தார்.
கடந்தாண்டு நடந்த 23 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான போட்டியில் வென்று அவர் "மிஸ்டர் புளூமெனாவ்" பட்டத்தையும் பெற்றது குறிப்பிடத்தக்கது. ஸ்டெராய்டு பயன்பாடு: பாவ்லக்கின் இந்த திடீர் மரணம் ஸ்டெராய்டுகள் குறித்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. வெறும் 5 ஆண்டுகளில் இந்தளவுக்கு உடலை மாற்றுவது கிட்டதட்ட முடியாத ஒன்று என்றும் இதனால் பாவ்லக் ஸ்டெராய்டுகளை பயன்படுத்தி இருக்கலாம் என்றும் பலரும் கூறி வருகின்றனர். இருப்பினும், இத தொடர்பாக போலீசார் எந்தவொரு விளக்கத்தையும் அளிக்கவில்லை.
முன்னதாக பாவ்லக் தனது சமூக வலைத்தள பக்கத்தில் ஐந்து ஆண்டுகளில் உடலை எந்தளவுக்கு மாற்றி இருக்கிறார் என்பதை விளக்கும் வகையிலான போட்டோகளை பகிர்ந்து வந்தார். "உங்கள் கனவு எவ்வளவு கடினமாக இருந்தாலும் சாத்தியமற்றது போல இருந்தாலும், நீங்கள் அதை விரும்பினால், நீங்கள் அதை அடைவீர்கள். என்னால் அதை செய்ய முடிந்தது" என்று போஸ்ட் செய்த அவர் 5 ஆண்டுகளில் உடலை எப்படி மாற்றினார் என்பதைப் பகிர்ந்துள்ளார். பாவ்லாக்கின் மரணம் அங்கே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தொடர்கதையாகி வரும் உயிரிழப்புகள்: மேலும் பாடிபில்டிங் துறையில் இருப்போர் திடீரென உயிரிழப்பது தொடர்கதையாகி வரும் நிலையில், இது உடலில் ஏற்படுத்தும் நீண்டகால பாதிப்பு குறித்தும் கேள்விகள் எழுந்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் தான் பிரேசிலிய பாடிபில்டர் ஜோனாஸ் ஃபில்ஹோ 29 வயதில் உயிரிழந்தார்.. கடந்த மே மாதம் 50 வயதான பாடிபில்டர் ஒருவர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
0 Comments