சர்வதேச நாணய நிதியத்துடன் அரசாங்கம் செய்துள்ள உடன்படிக்கை தொடர்பில் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தத் தயார் என சில ஜனாதிபதி வேட்பாளர்கள் மேடைகளில் கூறிய போதிலும், அவ்வாறு செய்வதால் நாட்டுக்கு கிடைக்க வேண்டிய பணத்தை இழக்க நேரிடும் என்றும் மீண்டும் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடையும் நிலை ஏற்படும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

பத்தரமுல்லை வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலில் நேற்று (21) நடைபெற்ற அபிவிருத்தி மற்றும் நிர்மாணத்துறை நிபுணர்களுடன் இடம்பெற்ற சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

‘தேசத்தின் எதிர்காலத்தைக் கட்டியெழுப்புதல்’ என்ற தொனிப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இச்சந்திப்பில் பேராசிரியர் சிறிமல் அபேரத்ன சிறப்புரையாற்றினார்.

இங்கு உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஒரு நாடாக முன்னோக்கிச் செல்வதற்கு நிலையான பொருளாதாரம் அவசியம் எனவும், சர்வதேச நாணய நிதியம், ஆசிய அபிவிருத்தி வங்கி, உலக வங்கி, சீனா எக்சிம் வங்கி மற்றும் 17 நாடுகளுடன் ஒப்பந்த அடிப்படையில் பெற்றுக்கொள்ளக்கூடிய அனைத்து சலுகைகளையும் அரசாங்கம் இதுவரையில் பெற்றுள்ளதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதில் நிர்மாணம் மற்றும் அபிவிருத்தித் துறைக்கு முக்கிய பங்கு உள்ளதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, கடந்த பொருளாதார நெருக்கடியை அடுத்து வெளிநாட்டு நிதியுதவி திட்டங்கள் நிறுத்தப்பட்டதால் நிர்மாணத் துறை கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தாலும், வங்கிச் சலுகைகள் வழங்குதல், நிர்மாணப் பணிகளுக்காக ஒப்பந்ததாரர்களுக்குச் செலுத்த வேண்டிய கொடுப்பனவுகளைச் செலுத்துவது போன்ற இத்துறையில் பணிபுரிவோர் மீது சுமத்தப்பட்டிருந்த சுமையைக் குறைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்ததையும் நினைவு கூர்ந்தார்.

தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ள திட்டங்கள் மீள ஆரம்பிக்கப்பட்டு, உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து புதிய முதலீடுகள் ஈர்க்கப்படும் போது நிர்மாணத்துறையும் வளர்ச்சியடையும் என ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். அத்துடன், கொழும்பு, பிங்கிரிய, திருகோணமலை, யாழ்ப்பாணம், கண்டி, காலி, ஹம்பாந்தோட்டை ஆகிய புதிய முதலீட்டு வலயங்களில் சுற்றுலா ஹோட்டல் அபிவிருத்தி திட்டங்களை ஆரம்பித்தல், பெருநகர அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் கொழும்பு, காலி மற்றும் கண்டியை அபிவிருத்தி செய்வதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் பிரதிநிதிகளுக்கு ஜனாதிபதி விளக்கமளித்தார்.

இங்கு மேலும் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,

“எமது பொருளாதாரத்தின் முக்கியப் பகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மற்றும் இலங்கையில் கடந்த பொருளாதார நெருக்கடியால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட துறையான நிர்மாணம் மற்றும் அபிவிருத்தித் துறையில் ஈடுபட்டுள்ளவர்களாக நீங்கள் இன்று இங்கு கூடியிருக்கின்றீர்கள்.

நாம் ஒரு நெருக்கடியை மாத்திரம் சந்திக்கவில்லை. நாம் இரண்டு நெருக்கடிகளை எதிர்கொண்டோம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். முதலாவதாக, கொவிட்-19 நோய்த்தொற்று மற்றும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியால் நாம் பாதிக்கப்பட்டோம். இந்த நிகழ்வுகள் ஒன்றோடொன்று தொடர்புடையவை.
சர்வதேச நாணய நிதியத்துடன் செய்துகொண்ட ஒப்பந்தங்களுக்கு முரணாக மேற்கொள்ளப்பட்ட வரிக் குறைப்புகள் போன்ற கொவிட் தொற்றுக்கு முன்னர் நாங்கள் எடுத்த நிதி நடவடிக்கைகள் வருமானம் குறையக் காரணமாகியது. அந்த சூழ்நிலையில், எமது சவால்கள் மிகவும் சிக்கலானதாக மாறியது.

நாடு இவ்வாறானதொரு நிலையை நோக்கி நகர்ந்துகொண்டிருந்த போது நாம் எச்சரித்தோம். துரதிர்ஷ்டவசமாக, இந்த எச்சரிக்கையை ஒரு சிலர் மாத்திரமே கண்டுகொண்டார்கள். அன்று முன்வைத்த ஐக்கிய தேசியக் கட்சியின் கொள்கைப் பிரகடனத்தின் ஊடாக இந்த நெருக்கடி தொடர்பில் மக்களுக்கு சுட்டிக்காட்டினோம். எதிர்காலத்தில் இலங்கையில் பொருளாதார வீழ்ச்சி ஏற்படாமல் தடுக்க 3 பில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவை என தெரிவித்தோம். எனினும், அன்று நாம் விடுத்த இந்த எச்சரிக்கை பெரும்பாலும் புறக்கணிக்கப்பட்டது. ஏனைய குழுக்கள் யதார்த்தமற்ற வாக்குறுதிகளை அளித்தன. உலகளாவிய கொவிட் நோய்த் தொற்று நமது நிலைமையை மேலும் மோசமாக்கியது. 2020 மற்றும் 2021 இல் உலகப் பொருளாதாரத்தின் வீழ்ச்சிக்கு வழிவகுத்தது. நாம் இன்னும் அதிலிருந்து மீண்டு வருகிறோம்.

இலங்கையின் நிலைமை குறித்து கலந்துரையாடும் போது, உலக நிலவரத்தையும் கருத்தில் கொள்ள வேண்டும். சீனாவில், கொவிட் காரணமாக, நிர்மாணத் துறை வீழ்ச்சி கண்டதுடன், அது நுகர்வோர் செலவினத்தையும் பாதித்துள்ளது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் கூட, நுகர்வோர் செலவினம் ஏற்ற இறக்கமாக உள்ளது. அந்த பொருளாதாரங்கள் ஸ்திரமடைய வேண்டும்.

நாம் எதிர்கொள்ளும் சவால்களுக்கு இந்த உலகளாவிய பின்னணியும் காரணமாக அமைந்தது. நான் ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர், நாட்டின் பொருளாதாரத்தை மீட்பதற்குத் தேவையான இந்த மாற்றங்களை என்னால் செய்ய முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. நான் அப்போதே, சர்வதேச நாணய நிதியத்துடன் தொடர்பு கொண்டு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் கலந்துரையாடியிருந்தேன்.

பேராசிரியர் சிறிமல் அபேரத்ன விளக்கியது போன்று, நாம் தற்போது பொருளாதாரத்தையும் எமது கடனையும் ஸ்திரப்படுத்தியுள்ளதுடன், எம்மால் கடனை செலுத்த முடியும் என்பதை உறுதிப்படுத்தியுள்ளோம். நாம் பணத்தை அச்சிட மாட்டோம் என்றும், வங்கிகளில் கடன் பெறப்போவதில்லை என்றும் உறுதி அளித்துள்ளோம்.

நமது வருமானத்திலேயே நாம் தங்கி இருக்க வேண்டும் என்பதே அதன் அர்த்தமாகும். அதனால், நான் உட்பட பலர் அதிக வரி செலுத்த வேண்டியுள்ளது. நமது பொருளாதார வளர்ச்சியைத் தூண்டுவது அடுத்த சவாலாகும். 2022 முதல் இயல்பு நிலைக்கு திரும்ப ஐந்தாண்டு திட்டம் எம்மிடம் உள்ளது.

2026 ஆம் ஆண்டாகும்போது அதனை நாம் அடைய முடியும் என்று எதிர்பார்க்கிறேன். 2027 ஆம் ஆண்டாகும்போது 5% வருடாந்த வளர்ச்சியைப் பேணுவதே எமது இலக்காகும். இந்த இலக்குகளை அடைவது பொருளாதாரப் பரிமாற்றச் சட்டத்தின் கீழ் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

எமது பொருளாதார ஸ்திரத்தன்மைக்கான அடிப்படையை வழங்கும் மத்திய வங்கிச் சட்டம் மற்றும் அரச கடன் முகாமைத்துவச் சட்டம் போன்ற ஏனைய சட்டங்களையும் நாங்கள் நிறைவேற்றியுள்ளோம்.

நாட்டின் முன்னேற்றத்தில், நிர்மாணம் மற்றும் அபிவிருத்தித் துறைக்கு மிக முக்கிய பங்கு உள்ளது. குறிப்பாக வெளிநாட்டு நிதியுதவி திட்டங்கள் முடங்கியதால், இத்துறை கடுமையாக பாதிக்கப்பட்டாலும், வங்கிச் சலுகைகள் வழங்குதல், நிர்மாணப் பணிகளுக்காக ஒப்பந்ததாரர்களுக்குச் செலுத்த வேண்டிய தொகையை வழங்குதல் போன்ற இத்துறைகளில் பணிபுரிபவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள சுமையைக் குறைக்க நாம் நடவடிக்கை எடுத்தோம்.

தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ள திட்டங்களை மீண்டும் ஆரம்பித்து, உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து புதிய முதலீடுகளை பெறும்போது, நிர்மாணத் துறைக்கு பல வாய்ப்புகள் உருவாகும். காலி, கண்டி, கொழும்பு மற்றும் திருகோணமலையில் பாரிய ஹோட்டல் அபிவிருத்தி திட்டங்களையும் பிங்கிரிய, யாழ்ப்பாணம் மற்றும் ஹம்பாந்தோட்டையில் புதிய முதலீட்டு வலயங்களையும் ஆரம்பிக்கவுள்ளோம்.
மேலும், பெருநகர அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் கொழும்பு, காலி மற்றும் கண்டி ஆகிய இடங்களில் கணிசமான அளவு நிர்மாணப் பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. அபிவிருத்திக்காக பயன்படுத்த எதிர்பார்த்துள்ள, தற்போது பயன்படுத்தாத ஏராளமான அரச காணிகள் எம்மிடம் உள்ளன.

முதலீட்டாளர்களைக் கண்டறிதல், இந்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்வது உங்களுக்குரியது. இதன்போது, அரச துறையாக இருந்தாலும் சரி, தனியார் துறையாக இருந்தாலும் சரி, நீங்கள் அனைவரும் எதிர்காலத்தில் செய்ய வேண்டிய பணிகள் ஏராளம்.

உழைக்கும்போது செலுத்தும் வரி (PAYEE Tax) போன்ற நீங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை வழங்கவும் நாங்கள் நடவடிக்கை எடுப்போம். இந்த முயற்சிகள், விரிவடைந்து வரும் பொருளாதாரம் மற்றும் நிர்மாண அபிவிருத்தித் துறையின் எதிர்காலத்துடன் எவ்வாறு ஒத்துப்போகின்றன என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்” என்று ஜனாதிபதி தெரிவித்தார்.

தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத்,

"எமது மொத்தத் தேசிய உற்பத்தியில் சுமார் 7% பங்களிக்கும் நிர்மாணத் துறை, இந்நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கின்றது. இது நேரடியாகவும் மறைமுகமாகவும் சுமார் 5 மில்லியன் மக்களுக்கு வாழ்வாதாரத்தை வழங்குவதுடன் இலங்கையின் மிகப் பெரிய மற்றும் மிக முக்கியமான தொழில்துறை ஒன்றாக மாறியுள்ளது.

இதன் மூலம் கிடைக்கும் பலன்கள் கீழ்மட்ட மக்களை சென்றடைகிறது. இருப்பினும், கடந்த சில வருடங்கள் இத்துறைக்கு சவாலான காலகட்டமாக மாறியது. கொவிட்-19 தொற்று மற்றும் பொருளாதார நெருக்கடி ஆகியவை நமது நிர்மாணம் மற்றும் அபிவிருத்தித் துறையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.

ஆனால், இந்தக் கால கட்டத்தில் கூட, இத்துறையின் செயற்பாடுகளுக்கு அரசாங்கம் ஆதரவு அளித்துள்ளது. தற்போதைய நெருக்கடி காரணமாக, இந்தத் துறையில் கிட்டத்தட்ட 400,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், மேலும் ஒப்பந்தக்காரர்களுக்கு வழங்க வேண்டியிருந்த 450 பில்லியன் ரூபா தொகையை செலுத்துவதை நிறுத்த வேண்டியிருந்தது.

இதுவரை குறைந்தது 400 பில்லியனுக்கும் அதிகமான கொடுப்பனவுகளை அரசாங்கம் செலுத்தியிருப்பதைக் கண்டு நான் மகிழ்ச்சியடைகிறேன். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் துணிச்சலான தீர்மானங்கள் மற்றும் நிலையான தலைமைத்துவத்தின் நேரடி விளைவுதான் நாம் தற்போது அனுபவித்து வரும் பொருளாதார ஸ்திரத்தன்மை என்பதைக் கூற வேண்டும்.

எம்மால் இந்த திட்டத்தை மாற்றி மீண்டும் ஆரம்பிக்க முடியாது. இந்த வேகத்தைத் தக்கவைக்க, நாம் அனுபவித்த மாற்றங்களை நகர்த்துவதும், மிகவும் கவனமாக மீட்டெடுக்கப்பட்ட அரசியல் ஸ்திரத்தன்மையைப் பேணுவதும் முக்கியமானதாக இருக்கும். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தொடர்ச்சியான தலைமைத்துவமே எமது வெற்றிக்கான ஒரே வழி” என்று தெரிவித்தார்.

இதன்போது, பொறியலாளர் டி. அபேசிறிவர்தன, கட்டிடக் கலைஞர் ஹிரந்தி வெலந்தாவ, பிரபல நகர திட்டமிடலாளர் கலாநிதி கே. லோகன குணரத்ன, பொருளாதார விவகாரங்கள் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் கலாநிதி ஆர். எச். எஸ். சமரதுங்க, இலங்கை தேசிய கட்டுமான சங்கத்தின் தலைவர் டெரின்டன்போல் மற்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆகியோர் இணைந்து கொண்ட விசேட கலந்துரையாடல் நிகழ்வும் இடம்பெற்றது. அத்துடன், அங்கு, பொறியியலாளர்கள், ஒப்பந்தக்காரர்கள் உட்பட அபிவிருத்தி மற்றும் நிர்மாணத்துறை சார்ந்த நிபுணர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு ஜனாதிபதி சாதகமான பதில்களை வழங்கினார்.

எழுப்பப்பட்ட கேள்விக்கு ஜனாதிபதி அளித்த பதில் வருமாறு:

கேள்வி :
தாம் ஜனாதிபதியானால் மீண்டும் சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவோம் என அனுரகுமார திஸாநாயக்கவும், சஜித் பிரேமதாசவும் கூறுகின்றனர். அப்படிச் செய்தால் ஒரு நாடாக நாம் என்னென்ன விளைவுகளைச் சந்திக்க நேரிடும்?

பதில் :
அப்போது உங்கள் நிறுவனத்தை மூடுவேண்டி ஏற்படும். அவ்வளவுதான் நடக்கும். ஏனென்றால் நமக்கு ஒரு பொருளாதாரம் தேவை. சர்வதேச நாணய நிதியம், ஆசிய அபிவிருத்தி வங்கி, உலக வங்கி, சீனா எக்சிம் வங்கி மற்றும் 17 நாடுகளுடன் ஏற்கனவே ஒப்பந்தம் செய்துள்ளோம்.

கலந்துரையாடப்பட்ட இந்த கட்டமைப்பிற்குள் இருந்து, நாங்கள் இப்போது பிணைமுறிப் பத்திரதாரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். நமக்கான அளவுகோல்களை அவர்கள் வகுத்துத் தந்துள்ளனர். மேலும் இந்தியாவையும் மற்ற நாடுகளையும் பெரிஸ் கிளப்புக்கு அழைத்து கலந்துரையாடியுள்ளோம். சீனாவை தனியாக ஒருங்கிணைத்து உத்தியோகபூர்வ கடன் வழங்குநர் குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. இப்போது அந்தக் கலந்துரையாடல்கள் அனைத்தும் முடிந்துவிட்டதால், அந்த வழிமுறை இனி தேவையில்லை.

அவர்கள் எங்களுக்கு வழங்கக்கூடிய சலுகைகளை நாங்கள் ஒப்புக்கொண்டோம். எக்ஸிம் வங்கியின் சலுகைகள், உத்தியோகபூர்வ கடன்வழங்குநர்களின் சலுகைகளிலிருந்து வேறுபட்டவை. பிணைமுறிப் பத்திரம் வைத்திருப்பவர்களைப் பொறுத்தவரை, அவர்கள் வழங்கும் நிவாரணம் மாறுபடும். சிலர் வட்டியைக் குறைக்கின்றனர். மற்றவர்கள் திருப்பிச் செலுத்தும் காலக்கெடுவை நீடிக்கிறார்கள்.

இவையனைத்தும் சேர்த்துப் பார்த்தால், பல்வேறு இடங்களிலிருந்து அதிக உணவைப் பெறும் சிறு பிள்ளையைப் போன்றது. சர்வதேச நாணய நிதியத்துடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப் போவது சுனில் ஹதுன்னெத்தியா அல்லது ஹர்ஷ த சில்வாவா? என்பதை பாருங்கள்’’ என்று ஜனாதிபதி பதிலளித்தார்.

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன, இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன, பொறியியலாளர்கள், ஒப்பந்ததாரர்கள் மற்றும் அபிவிருத்தி மற்றும் நிர்மாணத் துறையைச் சேர்ந்த நிபுணர்கள் பலர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.