கொல்கத்தாவில் உள்ள பிரபலமான ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் செமினார் ஹாலில் இருந்து பயிற்சி மருத்துவர் ஒருவரின் உடல் கடந்த ஆகஸ்ட் 9ஆம் திகதி கண்டெடுக்கப்பட்டது. அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டதாக பொலிஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
நள்ளிரவு 3 மணியில் இருந்து அதிகாலை 6 மணிக்குள் இந்த சம்பவம் நடந்திருப்பதாக கூறிய பொலிசார், சஞ்சய் ராய் என்பவரை கைது செய்துள்ளனர்.
கொல்கத்தாவில் போக்குவரத்து காவல் தன்னார்வலராக அவர் பணியாற்றி வந்திருக்கிறார். ஐபிசி 64, 103/1 ஆகிய பிரிவுகளின் கீழ் சஞ்சய் ராய் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.
கொலை செய்யப்பட்ட மருத்துவரின் கழுத்து எலும்பில் முறிவு ஏற்பட்டுள்ளதாகவும் அவரது கழுத்து நெரிக்கப்பட்டு உள்ளதாகவும் பொலிஸ் அதிகாரி ஒருவரை மேற்கோள் காட்டி பிடிஐ செய்தி முகமை செய்தி வெளியிட்டுள்ளது.
சம்பவம் குறித்த விசாரணையை தொடங்கிய பொலிசார், ஆறு மணி நேரத்தில் குற்றஞ்சாட்டப்பட்ட நபரை கைது செய்தனர். சம்பவ இடத்தில் கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் குற்றஞ்சாட்டப்பட்ட நபர் கைது செய்யப்பட்டு இருக்கிறார். பெண் மருத்துவரின் சடலம் இருந்த செமினார் ஹாலில் உடைந்துபோன புளூடூத் இயர்போன் கிடைத்திருக்கிறது. அது குற்றஞ்சாட்டப்பட்ட நபரின் மொபைலுடன் இணைக்கப்பட்டிருந்தது பொலிஸ் விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.
மேலும், அதிகாலை 4 மணிக்கு அந்த நபர் கட்டடத்திற்குள் நுழைவதும் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அப்போது அவர் காதில் இயர்போன் அணிந்திருக்கிறார். 40 நிமிடங்கள் கழித்து அவர் மருத்துவமனையை விட்டு வெளியேறும்போது காதில் இயர்போன் இல்லை.
பெண் மருத்துவரின் படுகொலையை அடுத்து ஆர்.ஜி கர் மருத்துவமனையின் தலைவராக இருந்த சந்திப் கோஸ் தனது பதவியை இராஜினாமா செய்தார்.
மருத்துவரின் குடும்பத்தினரிடம் பேசிய மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். எனினும் இச்சம்பவத்தில் உண்மை குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை என குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
பெண் மருத்துவரின் மரணத்தைத் தொடர்ந்து மேற்கு வங்கத்தில் மருத்துவப் பணிகள் முற்றிலும் முடங்கின. மாவட்ட மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களைக் கடந்து, மேற்கு வங்கத்தின் மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களின் கோபம் மற்ற மாநிலங்களுக்கும் பரவியுள்ளது.
அனைத்து இந்திய மருத்துவ சங்கங்களுக்கான கூட்டமைப்பின் அழைப்பை ஏற்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் மருத்துவர்கள் உட்பட நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் மருத்துவர்கள் ஆகஸ்ட் 13ஆம் திகதி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் சுகந்த் மஜும்தார் தெரிவித்திருந்தார்.
எனினும், குற்றங்களில் ஈடுபடுபவர்கள் உடனடியாக தண்டிக்கப்பட வேண்டும் என்றும் இதை அரசியலாக்க வேண்டாம் என்றும் திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.மஹுவா மொய்த்ரா தெரிவித்தார். 7 நாட்களுக்குள் வழக்கு விசாரணையில் முன்னேற்றம் ஏற்படவில்லை என்றால் சிபிஐ வசம் வழக்கை ஒப்படைப்பதாகவும் மம்தா பானர்ஜி தெரிவித்திருந்தார்
இதனிடையே, படுகொலை செய்யப்பட்ட மாணவியின் பெற்றோர் உட்பட பல்வேறு தரப்பினர் இந்த வழக்கை சுதந்திரமான அமைப்பு விசாரிக்க வேண்டும் எனக் கோரி கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி டிஎஸ் சிவஞானம் நீதிபதி ஹிரன்மே பட்டாசாரியா ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்த வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டது.
சிபிஐக்கு வழக்கு விசாரணை மாற்றப்பட்டுள்ளதை வரவேற்பதாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் தெரிவித்துள்ளனர். அதேநேரம் தங்கள் போராட்டம் தொடரும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
0 Comments