ஆசிரியை ஒருவரின் புகைப்படத்தை கணினி மூலம் மாற்றம் செய்து இணையத்தில் வெளியிட்டதாக சந்தேகிக்கப்படும் இரு மாணவர்களை மாத்தளை காவல்துறையினர் இன்று (12) கைது செய்துள்ளனர்.
மாத்தளை பிரதான பாடசாலையொன்றில் கற்பிக்கும் ஆசிரியை ஒருவரின் புகைப்படத்தை கணினி மூலம் ஆபாசமாக மாற்றம் செய்து இணையத்தில் பதிவேற்றம் செய்ததாக அதே பாடசாலையில் தரம் 10இல் கல்வி கற்கும் இரு மாணவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.
மாத்தளை நகரிலுள்ள பிரதான கலவன் பாடசாலை ஒன்றில் பத்தாம் தரத்தில் கல்வி கற்கும் அம்மாணவர்கள் மாத்தளை ஹுலங்கமுவ மற்றும் வாரியபொல பிரதேசங்களை சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.
பொல்கொல்ல மகாவலி கல்வி பீடத்தைச் சேர்ந்த குறித்த ஆசிரியை, ஒரு வருட பயிற்சிக்காக மாத்தளை கல்லூரி ஒன்றில் நடன ஆசிரியையாக பணிபுரிந்துள்ளார்.
தனது புகைப்படத்தில் முகத்தை கணினி மூலம் வெட்டியெடுத்து நிர்வாண புகைப்படம் ஒன்றுடன் இணைத்து முகநூலில் வெளியிடப்பட்டுள்ளதாக குறித்த ஆசிரியை மாத்தளை காவல்நிலையத்தில் செய்த முறைப்பாட்டுக்கு அமைய விசாரணைகளை மேற்கொண்ட காவல்துறையினர் அவ் இரு மாணவர்களையும் கைது செய்துள்ளனர்.
இதனையடுத்து காவலில் வைக்கப்பட்ட இரு மாணவர்களும் மாத்தளை சிறுவர் நன்னடத்தை அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு, நன்னடத்தை அறிக்கைகளுடன் மாத்தளை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
0 Comments