முஸ்லிம் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட செயற்குழுக் கூட்டம் நேற்று (11) இரவு அட்டாளைச்சேனையிலுள்ள தனியார் மண்டபமொன்றில் நடைபெற்ற போது, அந்தக் கூட்டத்தில் கைகலப்பு ஏற்பட்டது.
மு.கா தலைவர் ரஊப் ஹக்கீம் கலந்து கொண்ட இந்தக் கூட்டத்தில், முஸ்லிம் காங்கிரஸின் பாலமுனை அமைப்பாளர் அலியார் தலைமையிலான குழுவினரே குழப்பத்தை ஏற்படுத்தியதாக அங்கிருந்தோர் தெரிவிக்கின்றனர்.
மண்டபத்திலிருந்த கதிரைகளால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமை காரணமாக கூட்டத்தில் கலந்து கொண்ட சிலர் காயமடைந்துள்ளனர்.
மு.கா தலைவர் ரஊப் ஹக்கீம் மண்டபத்திலிருந்து வெளியேறிய பின்னரே தாக்குதல் சம்பவம் நடந்த போதிலும், ஹக்கீம் மண்டபத்தில் இருந்த போதே, குழப்பநிலை தொடங்கி விட்டதாக கூறப்படுகிறது.
என்ன நடந்தது ?
மேற்படி கூட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவரில் – பைசல் காசிம் கலந்து கொண்ட போதும், ஹரீஸ் எம்.பி கலந்து கொள்ளவில்லை.
இந்த நிலையில், மு.கா தலைவர் உரையாற்றிக் கொண்டிருந்த போது, தலைமை இருக்கைகளில் ஒன்றில் அமர்ந்திருந்த பைசல் காசிமை சுட்டிக்காட்டிய – அலியார் தரப்பினர் ”கட்சியை அழிப்பவர்கள் இவர்கள்தான்” என கூறியுள்ளனர்.
இதன் பின்னர் கூட்டம் முடிவடைந்த பின்னர் – அங்கிருந்த பைசல் காசிமிடம் வந்த, பாலமுனை அமைப்பாளர் அலியார் தரப்பினர்; ”உனக்கு இங்கு என்ன வேலை? நீ இங்கிருந்து வெளியேறு” என சத்தமிட்டுள்ளனர்.
இதனையடுத்தே, அலியார் தரப்பினருக்கும் – பைசல் காசிம் எம்.பியுடன் வந்திருந்தவர்களுக்கும் இடையில் – கைகலப்பு ஏற்பட்டது. இருந்த போதும் – பைசல் காசிம் இந்த கைகலப்பிலிருந்து விலகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பின்னணி என்ன?
பாலமுனையில் முஸ்லிம் காங்கிரஸ் செயற்பாடுகள் மற்றும் அபிவிருத்தி வேலைகளை முன்னெடுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் பைசல் காசிம், தம்மை தவிர்த்து விட்டு – முஸ்லிம் காங்கிரஸின் வேறு தரப்பினருடன் இணைந்து செயற்படுவதாக, பாலமுனை அமைப்பாளர் அலியார் தரப்பினர் குற்றஞ்சாட்டுகின்றனர்.
அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீசுடன் – அமைப்பாளர் அலியார் நெருக்கமானவர் என்பதும், இதனாலேயே அலியாருடன் பைசல் காசிம் விலகியிருப்பதாகவும் அறியமுடிகிறது.
இந்தப் பின்னணியில்தான் ஹரீஸ் எம்.பிக்கு நெருக்கமான அலியார் தரப்பினர், பைசல் காசிம் எம்.பியுடன் வம்பிழுத்ததாக தெரியவருகிறது.
மேற்படி கைகலப்பு – பொலிஸாரின் தலையீட்டினால் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதாக, அங்கிருந்தோர் கூறுகின்றனர்.
இந்தக் கூட்டத்துக்கு நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் சமூகமளிக்காமைக்கும், பைசல் காசிம் எம்.பியை குறி வைத்து – ஹரீசுக்கு நெருக்கமானோர் மேற்கொண்ட கைகலப்புக்கும் இடையில், தொடர்புகள் உள்ளதா என்கிற கேள்விகளும் – கட்சி ஆதரவாளர்கள் மத்தியில் எழுந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
தவிசாளர் வீட்டில் ஹக்கீமை அழைத்து கடுந்தொனியில் பேசிய பைசல்
இந்த கைகலப்பின் பின்னர், நேற்றிரவு முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளர் முழக்கம் மஜீத்தின் சாய்ந்தமருது வீட்டுக்குச் சென்ற பைசல் காசிம் எம்.பி, அங்கு மு.காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீமை வரவழைத்து – நடந்த சம்பவம் தொடர்பில் தமது கடுமையான கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
தன்கை் குறிவைத்து கைகலப்பில் ஈடுபட்ட பாலமுனை அமைப்பாளர் அலியாருக்கு எதிராக – கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும், ஹக்கீமிடம் பைசல் காசிம் வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை, ”எங்களை கட்சியை விட்டும் அனுப்பப் பார்க்கிறீர்களா” எனவும் இதன்போது ஹக்கீமிடம் பைசல் காசிம் கடுந்தொனியில் கேட்டுள்ளார்.
”அலியாருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படாது விட்டால், நாங்கள் யார் என்பதைக் காட்டுவோம்” எனவும், பைசல் காசிம் இதன்போது மு.கா தலைவர் ஹக்கீமிடம் கூறியதாக தெரியவருகிறது.
0 Comments