இங்கிலாந்துக்கு எதிரான மான்செஸ்டரில் நேற்று (21) ஆரம்பமான முதலாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியில் 41 வருடங்களாக உலக கிரிக்கட் களத்தில் ஒரு துடுப்பாட்ட வீரரால் புதுப்பிக்கப்படாத தனித்துவமான உலக சாதனையை இலங்கை வீரர் மிலான் ரத்நாயக்க புதுப்பித்து சாதனை படைத்துள்ளார்.
தனது அறிமுக டெஸ்ட் போட்டியில் பந்து வீச்சாளராக இலங்கை அணியில் இடம் பிடித்த மிலான், இந்த போட்டியில் 09 ஆவது துடுப்பாட்ட வீரராக களமிறங்கி 72 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.
எந்த வித சலசலப்பும் இல்லாமல் இன்னிங்ஸைக் கட்டமைத்த மிலான் அதற்காக 135 பந்துகளைச் சந்தித்தார். அவரது இன்னிங்ஸில் 02 ஆறு ஓட்டங்கள் மற்றும் 06 நான்கு ஓட்டங்கள் அடங்கும்.
அணித்தலைவர் தனஞ்சய சில்வாவுடன் 8வது விக்கெட்டுக்கு 63 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றுக் கொண்ட நிலையில் அதில் மிலான் 30 ஓட்டங்களை எடுத்திருந்தார்.
மேலும், இலங்கை 176 ஓட்டங்களுக்கு 08 விக்கெட்டுகள் இழந்திருந்த நிலையில், மிலான், விஷ்வா பெர்னாண்டோவுடன் இணைந்து 50 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றுக் கொண்டார்.
இதில் மிலான் 42 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.
இலங்கை அணிக்கான டெஸ்ட் வரத்தை வென்ற 166 வது வீரராக சர்வதேச அரங்கில் நுழைந்த மிலானின் இந்த இன்னிங்ஸ், 09 அல்லது அதற்கும் குறைவான நிலையில் இருந்து டெஸ்ட் அறிமுக போட்டியில் ஒரு துடுப்பாட்ட வீரர் எடுத்த அதிகபட்ச ஓட்டங்களாக கருதப்படுகிறது.
இதற்கு முன்பு 1983-ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமான இந்திய வீரர் பல்விந்தர் சந்து 71 ஓட்டங்களை பெற்றிருந்தமை சாதனையாக இருந்தது.
வலது கை வேகப்பந்து வீச்சாளரான மிலான் இதற்கு முன் முதல் தரப் போட்டியிலேனும் 72 ஓட்டங்களை எடுத்ததில்லை எனவும் அவரது அதிகபட்ச முதல் தர இன்னிங்ஸ் 59 ஓட்டங்கள் ஆகும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
0 Comments