(எம்.ஆர்.எம்.வசீம்)

உள்ளூராட்சி மன்ற தேர்தலில் கொழும்பு மாநகர சபை ஐக்கிய மக்கள் சக்தி மேயர் வேட்பாளராக பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மானை நியமிப்பதற்கு கட்சியின் செயற்குழு ஏகமனதாக தீர்மானித்துள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச தலைமையில் சனிக்கிழமை (14) மாலை கூடிய கட்சியின் செயற்குழுவின் போதே இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

செயற்குழு கூட்டத்தின் போது எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் கொழும்பு மாநகரசபை மேயர் வேட்பாளராக பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மானின் பெயரை கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாசவினால் பிரேரிக்கப்பட்டது. அந்த பிரேரணைக்கு கட்சியின் செயற்குழு உறுப்பினர்கள் அனைவரதும் அனுமதி ஏகமனதாக கிடைக்கப்பெற்றுள்ளது.

இதேவேளை, கொழும்பு மாநகர சபையின் ஆளும்கட்சியான ஐக்கிய தேசிய கட்சியின் மேயர் வேட்பாளராக யாரை பெயரிடுவது என்பதில் இன்னும் தீர்மானம் இல்லாமல் இருப்பதுடன் தற்போதைய மேயர் ராேசி சேனாநாயக்கவை மீண்டும் மேயர் வேட்பாளராக பெயரிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாக ஐக்கிய தேசிய கட்சி வட்டாரங்களில் இருந்து தெரியவருகின்றது