2022ஆம் ஆண்டின் ஆண்கள் உலகக் கிண்ண கால்­பந்­தாட்டச் சுற்­றுப்­போட்டி கத்­தாரில் இன்று ஆரம்­ப­மா­கு­கி­றது.


ஆரம்ப விழா, கத்தார் தலை­நகர் தோஹா­­வி­லுள்ள அல் பாய்த் அரங்கில் இலங்கை நேரப்­படி இரவு 7.30 (கத்தார் நேரப்­படி மாலை 5 மணிக்கு) ஆரம்­ப­மாகும். வெளி­நா­டு­களைச் சேர்ந்த பாட­கர்கள் உட்­பட பல கலை­ஞர்­களின் நிகழ்ச்­சிகள் இதில் நடை­பெ­ற­வுள்­ளன.

அதே அரங்கில் 2 மணித்­தி­யா­லங்­களின் பின்னர், அதா­வது இலங்கை நேரப்­படி இரவு 9.30 மணிக்கு இச்­சுற்­றுப்­போட்­டியின் முதல் போட்­டியில் கத்­தா­ருக்கும் ஈக்­கு­வ­டோரும் மோத­வுள்­ளன.



டிசெம்பர் 18 வரை நடை­பெறும் இச்­சுற்­றுப்­போட்­டியில் நடப்புச் சம்­பியன் பிரான்ஸ் உட்­பட 32 அணிகள் பங்­கு­பற்­று­கின்­றன. இவை 8 குழுக்­க­ளாக பிரிக்­கப்­பட்டு லீக் முறை­யில் முதல் சுற்­றுப்­போட்டி நடை­பெறும். தோஹா­வி­லுள்ள 4 அரங்­குகள் உட்­­பட மொத்தம் 5 நக­ரங்­க­ளி­லுள்ள 8 அரங்­கு­­களில் போட்­டிகள் நடை­பெறும். 29 நாட்­களில் 64 போட்­டிகள் நடை­பெ­ற­வுள்­ளன.


உலகக் கிண்­ணத்தில் இது­வரை

சர்­வ­தேச கால்­பந்­தாட்டச் சங்­கங்­களின் சம்­மே­ள­னத்­தினால் (பீபா) 1930 முதல் 4 வரு­டங்­க­ளுக்கு ஒரு தடவை உலகக் கிண்ண சுற்­றுப்­போட்டி நடத்­தப்­ப­டு­கி­றது. 2 ஆம் உலக யுத்தம் கார­ண­மாக 1942, 1946 ஆம் ஆண்டின் போட்­டிகள் நடை­பெ­ற­வில்லை. இம்­முறை 22 ஆவது தட­வை­யாக உலகக் கிண்ண கால்­பந்­தாட்ட சுற்­றுப்­போட்டி நடத்­தப்­ப­டு­கி­றது.

இது­வரை 79 நாடுகள் உலகக் கிண்ண போட்­டி­களில் பங்­கு­பற்­றி­யுள்­ளன. அவற்றில் 8 நாடு­களே இது­வரை சம்­பியன் கிண்­ணத்தை கைப்­பற்­றி­யுள்­ளன. பிரேஸில் 5 தட­வைகள் சம்­பி­ய­னா­கி­யது. ஜேர்­மனி, இத்­தாலி தலா 4 தட­வைகள் இக்­கிண்­ணத்தை வென்­றன. ஆர்­ஜென்­டீனா, உரு­குவே, பிரான்ஸ் ஆகி­யன தலா 2 தட­வை­களும், இங்­கி­லாந்து, ஸ்பெய்ன் ஆகி­யன தலா ஒரு தட­வையும் இக்­கிண்­ணத்தை வென்­றுள்­ளன.

உலகக் கிண்ண போட்­டி­களை நடத்தும் 18 ஆவது நாடு கத்தார். இச்­சுற்­றுப்­போட்­டியை நடத்தும் முத­லா­வது அரபு நாடும், முத­லா­வது மத்­திய கிழக்கு நாடும் கத்தார் ஆகும். வர­வேற்பு நாடு என்ற அடிப்­ப­டையில் இச்­சுற்­றுப்­போட்­டிக்கு கத்தார் அணியும் தகுதி பெற்­றுள்­ளது. 

இதற்­குமுன் உலக கிண்ண போட்­டி­க­ளுக்கு கத்தார் தகுதி பெற­வில்லை.
1971 ஆம் ஆண்டு பிரிட்­ட­னி­ட­மி­ருந்து கத்தார் சுதந்­திரம் பெற்­றது. அதற்­குமுன் 1970 இல் பஹ்­ரெய்­னுக்கு எதி­ரான போட்டி மூலம் சர்­வ­தேச கால்­பந்­தாட்­டத்தில் கத்தார் அறி­மு­க­மா­கி­யி­ருந்­தது.

முந்தைய திட்டப்படி, நாளை நடைபெறவுள்ள நெதர்லாந்து, செனகல் அணிகளுக்கிடையிலான போட்டியுடன் தான் உலகக் கிண்ண ஆட்டங்கள் ஆரம்பமாகவிருந்தன. ஆனால் முதல் போட்டியில் வரவேற்பு நாடு பங்குபற்றும் சம்பிரதாயத்தை தொடர்வதற்காக நாளை இரண்டாவதாக நடைபெறவிருந்த கத்தார் - செனகல் போட்டியை ஒருநாள் முன்னதாக 20 ஆம் திகதிக்கு மாற்றுவதாக கடந்த ஆகஸ்ட் மாதம் பீபா அறிவித்தது.

நாளை திங்­கட்­கி­ழமை 3 போட்­டிகள் நடை­பெ­ற­வுள்ளன. அதன்பின் நவம்பர் 22 முதல் டிசெம்பர் 2 ஆம் திக­தி­வரை தினமும் 4 முதல் சுற்று ஆட்­டங்கள் நடை­பெ­ற­வுள்­ளன.

கத்தார் நேரப்­படி பிற்­பகல் 1.00, மாலை 4.00, மாலை 6.00, இரவு 7.00, அல்­லது இரவு 10.00 மணிக்கு இப்­போட்­டிகள் ஆரம்­ப­மாகும்.

இலங்­கைக்கும் கத்­தா­ருக்கும் இடையில் இரண்­டரை மணித்­தி­யால நேர வித்­தி­யாசம் உள்­ளது. இதன்­படி, தினமும் 4 ஆவது போட்டி ஆரம்­பாகும் போது இலங்கை, இந்­தியா நாடு­களில் மறுநாள் அதி­காலை 12.30 மணி­யா­கி­விடும் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.


சர்ச்சைகள்

இவ்வருட உலகக் கிண்ண போட்டிகளை நடத்தும் உரிமையை 2010 ஆம் ஆண்டு கத்தார் பெற்றுக்கொண்டது. இதற்காக பல நாடுகளின் பிரதிநிதிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாக கத்தார் அதிகாரிகள் மீது குற்றச்சாட்டுகளும் சுமத்தப்பட்டன. கத்தாருக்கு இவ்வாய்ப்பை வழங்கியது தவறு என அப்போது பீபா தலைவராக இருந்த செப் பிளாட்டர் அண்மையில் கூறியிருந்தார்.

உலகக் கிண்ண போட்டிகளை கத்தார் பெற்ற பின்னர் அங்கு ஆயிரக்கணக்கான வெளிநாட்டுத் தொழிலாளர்கள் உயிரிழந்தமை, 

மனித உரிமை தொடர்பான குற்றச்சாட்டுகளால் கத்தாரில் இப்போட்டிகளை நடத்தக்கூடாது என்ற குரல்களும் ஒலித்தன. 



புதியவை


உலகக் கிண்ண வர­லாற்றில் பல புதிய அம்­சங்கள் இம்­முறை அறி­மு­க­மா­கின்­றன.

'ஓவ்சைட்' தீர்­மா­னங்­களை விரை­வா­கவும் துல்­லி­ய­மா­கவும் தீர்­மா­னிப்­ப­தற்கு தன்­னி­யக்கத் தொழில்­நுட்பம் முதல்­மு­றை­யாக உலகக் கிண்­ணத்தில் அறி­மு­க­மா­கி­றது. பந்­தையும் வீர்­களின் அவை­யங்­க­ளையும் பின் தொடரும் சென்சார் தொழில்­நுட்பம் இதற்­காக பயன்­ப­டுத்­தப்­ப­ட­வுள்­ளது.

முதல் தட­வை­யாக பெண் மத்­தி­யஸ்­தர்கள் அறி­மு­க­மா­வுள்­ளனர். 36 மத்­தி­யஸ்­தர்­களில் மூவர் பெண்கள்.
ஒவ்­வொரு போட்­டி­யிலும் 5 மாற்­று­வீ­ரர்­களைப் பயன்­ப­டுத்த அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ளது. முன்னர் 3 மாற்று வீரர்­க­ளுக்கே அனு­மதி வழங்­கப்­பட்­டது.

ஒவ்­வொரு குழா­மிலும் 26 வீரர்­களை சேர்க்க அனு­ம­திக்­கப்­பட்­டது. முன்னர் 23 பேரே அனு­ம­திக்­கப்­பட்­டனர்.
முதல் தட­வை­யாக நவம்பர், டிசெம்பர் மாதங்­களில் இப்­போட்­டிகள் நடை­பெ­று­கின்­றன.


பரிசு மழை

உலகக் கிண்ணப்போட்டிகளில் பங்குபற்றும் அணிகளுக்கு பரிசுகளை அள்ளி வழங்குகிறது பீபா. மொத்தமாக 440 மில்லியன் அமெரிக்க டொலர்களை (சுமார் 16,324 கோடி ரூபா) பரிசுகளுக்காக பீபா ஒதுக்கியுள்ளது. இது கடந்த 2018 உலகக் கிண்ணத் தொடரில் வழங்கப்பட்டதைவிட 40 மில்லியன் டொலர் அதிகமாகும்.

போட்டிகளுக்கு முன்பாகவே, தகுதி பெற்ற ஒவ்வொரு அணிக்கும் தயார்படுத்தல்களுக்காக தலா 1.5 மில்லியன் டொலர்களை (சுமார் 55 கோடி ரூபா) பீபா வழங்கியது.

இது தவிர, சுற்றுப்போட்டியில் கடைசி இடங்களைப் பெற்று வெளியேறும் அணிகளுக்கும் குறைந்தபட்சம் 9 மில்லியன் டொலர்கள் (333 கோடி ரூபா) கிடைக்கும்.

16 அணிகள் கொண்ட முன் கால் இறுதி சுற்றுடன் வெளியேறும் அணிகளுக்கு தலா 13 மில்லியன் டொலர்கள் (482 கோடி ரூபா) கிடைக்கும்.

கால் இறுதியுடன் வெளியேறும் அணிகளுக்கு தலா 17 மில்லியன் டொலர்கள் (630 கோடி ரூபா) வழங்கப்படும்.

4 ஆம் இடத்தைப் பெறும் 25 மில்லியன் டொலர்களும் (சுமார் 927 கோடி ரூபா) 3 ஆம் இடத்தைப் பெறும் அணிக்கு 27 மில்லியன் (சுமார் 1,001 கோடி ரூபா), வழங்கப்படும்.

2 ஆம் இடம் பெறும் அணிக்கு 30 மில்லியன் டொலர்கள் (1,113 கோடி ரூபா) வழங்கப்படும். சம்பியனாகும் அணிக்கு 42 மில்லியன் டொலர்கள் (சுமார் 1,558 கோடி ரூபா) வழங்கப்படும்.