நாட்டில் தடை செய்யப்பட்ட அமைப்புகளின் பட்டியலில் உள்ளடக்கப்பட்டிருந்த 6 புலம் பெயர் தமிழ் அமைப்புக்கள் மற்றும் 316 தனி நபர்கள் மீதான தடையை  பாதுகாப்பு அமைச்சு நீக்கியுள்ளது.


இந்நிலையில்  1968 ஆம் ஆண்டின் 45 ஆம் இலக்க ஐக்கிய நாடுகள் சட்டத்தின் கீழ் 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 9 ஆம் திகதி வெளியிடப்பட்ட 1992/ 25 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டிருந்த  கறுப்புப் பட்டியலை திருத்தி 2022 ஆகஸ்ட் முதலாம் திகதியிடப்பட்ட 2291/02  ஆம் இலக்க  அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் ஊடாக புதிய பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக 577 தனி நபர்களும் 18 அமைப்புக்களும்  ஐ.நா சட்டத்தின் கீழ் பாதுகாப்பு அமைச்சினால் கறுப்புப் பட்டியலில் உள்ளடக்கப்பட்டிருந்தன. எனினும்  அப்பட்டியலில் இருந்த 316 தனி நபர்கள் ( ஒரே பெயர் உள்ளடக்கப்பட்டிருந்த 7 பேர் உள்ளடங்கலாக), ஆறு அமைப்புக்கள் தடைப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.




அவுஸ்திரேலிய தமிழ் காங்கிரஸ்( ATC) , உலக தமிழர் பேரவை ( GTF),  உலக தமிழர் ஒருங்கிணைப்பு குழு (WTCC),  தமிழ் ஈழ மக்கள் சம்மேளனம் (TEPA), கனேடிய தமிழர் காங்கிரஸ் (CTC), பிரித்தானிய தமிழர் பேரவை(BTF) ஆகிய 6 தமிழ் அமைப்புக்கள் மீதான தடையே தற்போது  நீக்கப்பட்டுள்ளன.

எவ்வாறாயினும் திருத்தப்பட்ட பட்டியல் பிரகாரம்,  புதிதாக 55 நபர்களும், 3 அமைப்புககளும்  தடை செய்யப்பட்டோர் குறித்தான கறுப்புப் பட்டியலில் புதிதாக உள்வாங்கப்பட்டுள்ளனர்.

தாருல் அதர்,  இலங்கை இஸ்லாமிய மாணவர் சங்கம், சேவ்த பேர்ள் ஆகிய அமைப்புகளே தடை செய்யப்பட்ட அமைப்புக்கள் பட்டியலில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள அமைப்புகளாகும்.


இது தொடர்பில் பாதுகாப்புச்செயலாளர் ஜெனரல் கமால் குணரத்னவினால் திருத்தப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

அந்த வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் வெளிநாடுகளில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் கருத்தியலை பரப்பும் வகையில் செயற்பட்டு வந்த அந்த இயக்கத்தின் கட்டமைப்பையொத்த தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழர் புனர்வாழ்வு அமைப்பு, தமிழர் கூட்டிணைவுக்குழு, உலகத் தமிழர் இயக்கம், நாடு கடந்த தமிழீழ அரசாங்கம், உலகத் தமிழர் உதவி நிதியம், தலைமைக் காரியாலயக் குழு, தேசிய தௌஹீத் ஜமா-அத், ஜமா அத்தே மில் அத்தே இப்ராஹிம், விலாயத் அஸ் செய்லானி, தாருல் அதர் அல்லது ஜாமியுல் அதர் பள்ளிவாசல், தேசிய கனேடியத் தமிழர் பேரவை, தமிழ் இளைஞர் அமைப்பு, இலங்கை இஸ்லாமிய மாணவர் இயக்கம், சேவ் த பேர்ள்  ஆகிய 15  அமைப்புககளே  தற்போது தடை செயயப்பட்டுள்ள  அமைப்புக்கள் பட்டியலில்  உள்ளடங்குகின்றன.

அதேபோன்று பெரும்பாலும் போரின்போதும் அதன் பின்னரும் புலம் பெயர்ந்து வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்கள் மற்றும் குறிப்பாக உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்களின் பின்னர் கடும்போக்கு சிந்தனைகளைக் கொண்டவர்களாக அடையாளப்படுத்தப்பட்ட முஸ்லிம்கள் பலரின் பெயர்கள் உள்ளடங்கலாக  316 தனி நபர்களும்  தடை செய்யப்பட்டோர் பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.