Ticker

6/recent/ticker-posts

மொபைல் போனுக்குப் புதியவரா! மொபைல் போன் பயன்களும் பாதுகாப்பும்.....

 


இணையப் பயன்பாடு நம் வாழ்க்கையை வளப்படுத்துவது ஒரு புறமிருக்க, அதனை விபத்துகள் சந்திக்கும் களமாகவும் ஹேக்கர்கள் மாற்றி வருகின்றனர். இதுவரை கம்ப்யூட்டர்களில் மட்டுமே இருந்த வைரஸ் ஆபத்து, மிக வேகமாக மொபைல் போன்களிலும் பரவி வருகிறது. மொபைல் போனில் பயன்படுத்தப்படும் இயக்க முறைமைகள், ஹேக்கர்களுக்கு எளிதாக வழிவிடும் வகையில் அமைக்கப்பட்டுள்ளனவா? என்ற கேள்வியும், மொபைல் போன்களில் இயங்குவதற்கென கிடைக்கும் பாதுகாப்பு செயலிகள் அவ்வளவு வலிமையுள்ளனவாக அமைக்கப்படவில்லையா என்ற சந்தேகமும் தற்போது அனைவரின் மனதிலும் எழத் தொடங்கி உள்ளன.

ஆப்பிள் நிறுவனத்தின் ஐ.ஓ.எஸ். சிஸ்டத்துடன் ஒப்பிடுகையில், ஆண்ட்ராய்ட் சிஸ்டம், வைரஸ்கள் பரவுவதற்கான வழிகளை அதிகமாகவே கொண்டுள்ளன என்பது உறுதியாகியுள்ளது. எனவே, அதிகம் பயன்படுத்தப்படும் ஆண்ட்ராய்ட் இயங்கும் ஸ்மார்ட் போன்களில், நாம் பாதுகாப்பு வழிகளைப் பலப்படுத்த வேண்டும் என்பதுவும் உறுதியாகிறது. இணையம் என்றாலே, நம் பாதுகாப்பு குறித்து சந்தேகம் எழுகிறது. எனவே, ஆண்ட்ராய்ட் சிஸ்டம் வழியாக, அது பயன்படுத்தப்படும் மொபைல் போன்களில், வைரஸ் புரோகிராம்களுக்கு எதிரான புரோகிராம்கள் கட்டாயம் பதிக்கப்பட்டு இயங்கப்பட வேண்டும் என்பதுவும் உறுதியாகிறது.

வெகுகாலமாகவே, வைரஸ் என்றாலே, அது நம் கம்ப்யூட்டர்களில் அதன் இயக்கத்தை கெடுக்கும் அல்லது முடக்கிப் போடும் ஒரு எதிரி என்பது நாம் அறிந்த ஒன்றாகும். ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்கள், அது போன்ற கெடுதல் விளைவிக்கும் மால்வேர் தொகுப்புகள், நம் கம்ப்யூட்டரை முடக்கி வைத்து, பணம் கேட்டு மிரட்டும் ரேன்சம் வேர் (Ransomeware) மற்றும் நம்முடைய தகவல்களையே நாம் அணுக முடியாமல் செய்திடும் வைரஸ்கள் என அனைத்திற்கும் எதிரான செயல்பாட்டினை மேற்கொள்ளும் புரோகிராம்களாக உருவெடுத்துள்ளன. தற்போது, மொபைல் சாதனங்களுக்குமான ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்கள் பல கிடைக்கின்றன. இருப்பினும், மக்கள் மொபைல் போனுக்கு இது தேவையா என்ற அலட்சியத்துடன் இருப்பது, ஆபத்தினை உணர்ந்தவர்களிடம் ஒருவித பதற்றத்தினை ஏற்படுத்துகின்றது.

ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்களை நாம் இணையத்திலிருந்து இலவசமாகப் பெறலாம்; பல கட்டணம் செலுத்திப் பெறும் வகையிலும் கிடைக்கின்றன. இவை, பலவகையான பாதுகாப்பு வசதிகளைக் கொண்டவையாக உள்ளன.
பலர், மொபைல் போன்களில், நாம் எவற்றைப் பாதுகாக்க வேண்டும்? என்ற வினாவினை முன்வைக்கின்றனர். நாம் எங்கு சென்றாலும் நம் மொபைல் போன்களை எடுத்துச் செல்கிறோம். பல தனிப்பட்ட தகவல்கள் பலவற்றை அவற்றில் பதிந்து சேமித்து வைக்கிறோம். அவற்றில் சில முக்கிய டாகுமெண்ட்கள் இருக்கலாம். நாம் பங்கு கொண்ட விடியோக்கள், போட்டோக்கள், அரட்டையில் பகிர்ந்த தகவல்கள், கிரெடிட் கார்ட் தகவல்கள், இணையம் வழி பொருட்கள் வாங்கியது குறித்த தகவல்கள், நம் அஞ்சல்களுடன் அனுப்பிய இணைப்புகள் என்ற வகையில் பலவகையான தனிநபர் சார்ந்த ரகசிய பதிவுகள் இன்றைய மொபைல் போன்களில் நம்மால், சேவ் செய்து வைக்கப்படுகின்றன. இவை தவிர இன்னும் பல முக்கியமாகப் பதிவு செய்தவற்றை நாம் பாதுகாத்திட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.
மொபைல் போன்களுக்கான ஆண்ட்டி வைரஸ் தொகுப்புகள் என எண்ணுகையில் நம் கவனத்திற்கு வருபவை ~~ 360 Security, ESET, Kaspersky, Avast, Avira, Quickheal, AVG, Comodo, Norton, Symantec, Sophos மற்றும் McAfee ஆகியவை ஆகும். ஆனால், இவை தவிர, இன்னும் பல ஆண்ட்டி வைரஸ் தொகுப்புகளும் உள்ளன. ஆனால், இவை அனைத்தையும், நம் மொபைல் போனில் பதிந்து ஒரே நேரத்தில் இயக்க முடியாது. ஏதேனும் ஒரு சூழ்நிலையில், நீங்கள் ஒரு ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் ஒன்றைத் தேர்ந்தெடுத்து, போன் பாதுகாப்பிற்கென பயன்படுத்த வேண்டும். இது நீங்கள் எந்த வகை டேட்டாவினைப் பாதுகாக்க விரும்புகிறீர்கள் என்பதையும், எப்படி அவற்றைப் பாதுகாக்க விரும்புகிறீர்கள் என்பதையும் பொறுத்து உள்ளது. பொதுவாக, இந்த ஆண்ட்டி வைரஸ் தொகுப்புகள் தரும் பாதுகாப்பு வசதிகள் குறித்துப் பார்க்கலாம்.

விரைவான தேடல்: மொபைல் போனில் உள்ள அனைத்து கோப்புகளையும், அவற்றில் வைரஸ் அல்லது மால்வேர் உள்ளதா என ஸ்கேன் செய்வது, பாதுகாப்பு வழங்குவதில் முதல் படியாகும். இதனை அனைத்து ஆண்ட்டி வைரஸ் செயலிகளும் தருகின்றன. மேலும், இவற்றைக் குறிப்பிட்ட கால இடைவெளியில் இயங்கி, போன் முழுவதையும் ஸ்கேன் செய்திடும்படி அமைத்திடவும் செய்திடலாம். ஸ்கேன் செய்வதனை வரையறை செய்தல்: போனை ஸ்கேன் செய்வதில், ஸ்கேன் செய்யப்படும் கோப்புகளை வகை செய்து அமைக்கலாம். போன் முழுவதையும் ஸ்கேன் செய்திடலாம். போனில் இயங்கும் அப்ளிகேஷன் புரோகிராம்கள் மட்டும் ஸ்கேன் செய்திட வழி அமைக்கலாம். மெமரி கார்டில் உள்ளனவற்றை மட்டும் எனவும், காலரி அல்லது டவுண்லோட் போல்டர்களை மட்டும் எனவும் வழி அமைக்கலாம். இதன் மூலம் நாம் ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்கள் எவற்றை மட்டும் ஆய்வு செய்திட வேண்டும் எனக் குறிப்பிடலாம்.

பின்புலத்தில் ஆய்வு: இது ஒரு மெளனமாக இயங்கும் செயல்பாடு. நாம் மொபைல் போனைப் பயன்படுத்துகையில், போனின் வழக்கமான செயல்பாடுகளுக்கு எந்த ஒரு பாதிப்பும் இன்றி, பின்னணியில், போனில் உள்ள அனைத்திலும் ஆய்வு மேற்கொள்ளப்படும். இந்த செயல்பாடு, போனின் திரையின் முன்புறத்தில் காட்டப்பட மாட்டாது.

பாதுகாப்பு மற்றும் தனிவழிக்கான ஆலோசனை: இந்த வசதி, உங்கள் மொபைல் போனின் முழுமையான பாதுகாப்பு வழிகள் குறித்து உங்களை வழி நடத்தும். அத்துடன், இது பாதுகாப்புக்கு எதிரான வைரஸ் நடவடிக்கைகளைக் கண்காணித்து அறிவிக்கும். மேலும், போனில் இயங்கும் அப்ளிகேஷன்கள் சார்ந்த பழைய தேவைப்படாத டேட்டாவினை அழிக்கும். மேலும், ஏதேனும் டேட்டா கரப்ட் ஆகிப் பயன்படுத்த முடியாத நிலையில் இருந்தால், அவற்றையும் நீக்கும். போனில் இயங்கும் அனைத்து அப்ளிகேஷன்களையும் சோதனை செய்து, அவற்றில் கெடுதல் விளைவிக்கும் செயலிகள் ஏதேனும் கெடுத்துள்ளதா எனக் கண்டறியும். நம் தனிநபர் தகவல்கள் திருடப்படும் ஆபத்தில் உள்ளனவா என்பதனையும் ஆய்வு செய்து கண்டுபிடிக்கும்.

ஆண்ட்டி வைரஸ் செயலியை மேம்படுத்தல்: எந்த ஆண்ட்டி வைரஸ் தொகுப்பானாலும், அது பதியப்பட்டு, செயல்படுகையில், அதனைத் தயாரித்து வழங்கும் நிறுவனம், புதியதாகப் பரவி வரும் வைரஸ்களுக்கு எதிரான பாதுகாப்பு குறியீடுகளுடன், அதனை மேம்படுத்தும். இந்த மேம்படுத்தலை, நம் போனில் உள்ள ஆண்டி வைரஸ் புரோகிராம் தானாகவே ஏற்றுக் கொண்டு தன்னை மேம்படுத்திக் கொள்ளும் வகையில் நாம் அமைக்க வேண்டும். இந்த வசதி அனைத்து ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்களிலும் தரப்பட்டுள்ளது.

தன் அடையாளத் தகவல் பாதுகாப்பு: இந்த வசதியை அனைத்து ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்களும் கொண்டுள்ளன. இதன் மூலம், மொபைல் போனிலிருந்து, நம் மின் அஞ்சல்கள் திருடப்படுகின்றனவா என்பது முதல், நம் ரகசிய தகவல்கள் கடத்தப்படுகின்றனவா என்பது வரையிலான செயல்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன.

செயல் வேகம் அதிகரிப்பு: மொபைல் போனை அச்சுறுத்தும் வைரஸ் நீக்கம், தேவையற்ற பைல்கள் நீக்கம் மற்றும் கெட்டுப் போன டேட்டா நீக்கம் ஆகியவற்றினால், போனின் செயல் திறன் வேகம் அதிகரிக்கிறது. இதனால், மொபைல் போன்களில் தரப்பட்டுள்ள பேட்டரிகளின் வாழ்நாள் நீடிக்கிறது.

திருட்டுக்கு எதிரான பாதுகாப்பு: இந்த வசதி பெரும்பாலும், கட்டணம் செலுத்திப் பெறும் ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்களில் மட்டும் தரப்படுகிறது. உங்கள் மொபைல் போனை, திருடன் ஒருவன் கவர்ந்து செல்கையில், அதில் உள்ள டேட்டாவினை, இந்த வசதியின் மூலம் முழுமையாக போனில் இருந்து நீக்கிவிடலாம். இந்த செயல்பாடு பல வழிகளில் மேற்கொள்ளப்படுகிறது. உங்கள் போனுடைய லாக் பாஸ்வேர்டினை, போனை எடுத்த திருடன், இரண்டு முறை தவறாக உள்ளீடு செய்தால், உடனே, போனின் முன்புறத்திலும், பின்புறத்திலும் உள்ள கேமராக்கள், அந்த திரைத்தோற்றத்தினை ஸ்கிரீன் ஷாட் காட்சியாகப் பதிவு செய்கின்றன. இது, போனை எடுத்தவனையும் மற்றும் அவன் இருக்கும் இடத்தினையும் பதிவு செய்கிறது. இதுவும் கட்டணம் செலுத்திப் பெறும் ஆண்ட்டி வைரஸ் தொகுப்புகளில் உள்ளது.

போன் இருக்கும் இடம் அறிதல்: இது முன்பு கட்டணம் செலுத்திப் பெற்ற புரோகிராம்களில் மட்டுமே காணப்பட்டாலும், கூகுள் ஆண்ட்ராய்ட், பயனாளர்கள் அனைவருக்கும் இந்த வசதியைத் தனி வசதியாகத் தருகிறது. உங்கள் போனை நீங்கள் தொலைத்துவிட்டாலோ அல்லது வைத்த இடத்தினை மறந்துவிட்டாலோ, இணையத்தில், இந்த அப்ளிகேஷனுக்கான இணைய தளம் சென்று, அது தரும் வழிகளில் தேடினால், போன் இருக்கும் இடத்தில் வரைபடம் காட்டப்படுகிறது. அத்துடன், இந்த செயல்முறை வழியாகவே, உங்கள் போனை உங்களால் லாக் செய்திட முடியும் மற்றும் டேட்டாவினை அழிக்க முடியும். Avira போன்ற ஆண்ட்டி வைரஸ் தொகுப்புகள், போன் இருக்கும் இடத்தை இந்த வசதி மூலம் அறிந்தவுடன், மிகப் பெரிய அளவில் ஒலி எழுப்பும் வசதியையும் கொண்டிருக்கின்றன. மேலும், அந்த போன் திருடப்பட்டுவிட்டதென, திரையில் செய்தியையும் காட்டுகின்றன. இதனால், சுற்றி இருப்பவர்களின் கவனம் அந்த திருடப்பட்ட போனின் பால் ஈர்க்கப்படுகிறது.

உங்கள் மொபைல் போனை எப்படிப் பாதுகாக்கலாம்?
நம்பத் தகுந்த தளத்திலிருந்து கிடைக்கும் ஆண்ட்டி வைரஸ் தொகுப்பு ஒன்றை போனில் தரவிறக்கம் செய்து பதிந்து கொள்ளவும். எடுத்துக் காட்டாக, ஆண்ட்ராய்ட் சிஸ்டத்திற்கு, கூகுள் ப்ளே தளம் பல்வேறு ஆண்ட்டி வைரஸ் தொகுப்புகளை வழங்குகிறது. அது மட்டுமின்றி, குறிப்பிட்ட ஆண்ட்டி வைரஸ் புரோகிராம், அதிகார பூர்வ அனுமதி பெற்றதுதான் எனச் சான்று அளிக்கப்படுகிறது. போனில் பதிவதுடன் நின்றுவிடாமல், அதனை அவ்வப்போது மேம்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும். அப்போதுதான், புதிது புதிதாய் வரும் வைரஸ்களிடமிருந்து பாதுகாப்பு கிடைக்கும்.
இணையத்தில் உலா வருகையில், பாப் அப்கள் மூலம் உங்களுக்குக் காட்டப்படும் லிங்க்குகளில் கிளிக் செய்து மாட்டிக் கொள்ளக் கூடாது. இவை பெரும்பாலும் வைரஸ் புரோகிராம்களை அனுப்பும் தளமாகவே இருக்கும். உங்களுடைய வை பி இணைய இணைப்புகளும் பாதுகாக்கப்பட்டவையாக இருப்பதையும் உறுதி செய்திடுங்கள். பலர், நமக்கு இலவசமாகக் கிடைக்கும், பொதுவான வை பி இணைப்புகள் நம் டேட்டா கட்டணத்தை மிச்சப்படுத்தும் என எண்ணுகின்றனர். ஆனால், இவற்றின் மூலம் நாம் எளிதாக வைரஸ்களைப் பெறும் வழிகளும் திறக்கப்படுகின்றன என்பதை அறியாமல் இருக்கிறோம்.
மாறி வரும் உலகில், நம் வாழ்வில், முக்கிய அங்கமாக, மொபைல் போன் பயன்பாடும், அதன் வழி இணைய அணுக்கமும் மாறிவிட்டது. எனவே, வாழ்வின் இந்த வழியை நாம் பாதுகாப்பாக மேற்கொள்ள வேண்டியது அவசியமாகிறது. மேற்குறிப்பிட்ட தேவைகளும், அதனைப் பாதுகாக்க நாம் மேற்கொள்ள வேண்டிய வழிகளும் நமக்கு அவசியமாகின்றன. அவற்றைப் பின்பற்றுவதே நம் பாதுகாப்பினை உறுதி செய்திடும்.


Post a Comment

0 Comments