அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் எரிபொருள் விநியோகம் மட்டுப்படுத்தப்பட்டிருந்தாலும் உயர் மட்டத்தில் இருந்து அனுப்பப்படுகின்ற பட்டியலுக்கு கொலன்னாவையில் எரிபொருள் விநியோகிக்கப்படுகிறது.
பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் கொலன்னாவை முனையத்தில் எரிபொருளை பெற்றுக்கொள்ள இன்றும் அதிகளவிலான வாகனங்கள் சென்றிருந்தன.
முனையத்தில் இடப்பற்றாக்குறை நிலவியதால், சில வாகனங்கள் வௌியிலும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.
பீப்பாய்களில் எரிபொருளை பெற்றுச்செல்லவும் சிலர் வருகை தந்திருந்தனர்.
எனினும், வரிசைகளில் காத்திருக்கும் மக்களுக்கு எரிபொருள் வழங்கும் நோக்கில், கொலன்னாவை எரிபொருள் முனையத்தில் இருந்து ஒரு பௌசர் கூட வௌியேறவில்லை.
அவ்வாறாயின், கொலன்னாவையில் எரிபொருள் யாருக்கு வழங்கப்படுகிறது?
நியூஸ்ஃபெஸ்ட் இன்று கொலன்னாவை முனையத்திற்கு சென்று இது தொடர்பில் வினவியது.
அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடுவோருக்கு எரிபொருள் விநியோகிக்கப்படுகின்றதா என்ற கேள்விக்கு, இல்லை என அங்கிருந்த ஒருவரிடம் இருந்து பதில் வந்தது.
மீன்பிடிப் படகுகளுக்கு தேவையான எரிபொருள் வழங்கப்படுவதாக அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.
உயர் மட்டத்தில் இருந்து வரும் பட்டியலுக்கு அமைய எரிபொருள் வழங்கப்படுவதாக அந்த அதிகாரி மேலும் கூறினார்.
அவரின் தகவலுக்கு அமைய, இன்றைய நாள் முழுவதும் உயர் மட்டத்தில் இருந்து அனுப்பி வைக்கப்பட்ட பட்டியலுக்கு எரிபொருள் விநியோகிக்கப்படுவதை காண முடிந்தது.
0 Comments