உயிரைப் பணயம் வைத்து 35 உயிர்களை மீட்ட ‘கல்கமுவ ஹீரோக்கள்’: நள்ளிரவுப் போராட்டத்தில் வென்ற மனிதநேயம்!
கடந்த நவம்பர் 27 ஆம் திகதி இலங்கையை உலுக்கிய சீரற்ற காலநிலையின் போது, கண்டி – கெலிஓயா கல்கமுவ பகுதியில் நிகழ்ந்த ஒரு பாரிய உயிர்ச் சேதத்தை ஐந்து இளைஞர்கள் தமது உயிரைப் பணயம் வைத்து தடுத்து நிறுத்தியுள்ளனர்.
அன்றைய தினம் நள்ளிரவு 2 மணியளவில் கல்கமுவ பகுதியில் வெள்ள நீர் வீடுகளுக்குள் புகுந்தது. மூன்று குடும்பங்களைச் சேர்ந்த 35 பேர் மரண பயத்தில், வேறு வழியின்றி கட்டிடத்தின் மூன்றாவது மாடியில் தஞ்சமடைந்தனர். மின்சாரம் முழுமையாகத் துண்டிக்கப்பட்ட நிலையில், இருட்டில் வெள்ளம் கட்டிடத்தைச் சூழ்ந்தது.
அனைத்து தொலைபேசி இணைப்புகளும் செயலிழந்த நிலையில், தற்செயலாக வேலை செய்த ஒரே ஒரு தொலைபேசி எண்ணின் ஊடாகப் பகுதி இளைஞர்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவல் கிடைத்த அடுத்த நொடியே, எவ்வித நவீன மீட்பு உபகரணங்களும் இன்றி, சீறிப்பாயும் வெள்ளத்தில் இறங்கினர் அந்த ஐந்து இளைஞர்கள். சஜித், அக்ரம், இக்ரம், சப்ரான் மற்றும் ரஸ்னி ஆகிய இந்த இளைஞர் குழுவினர், காற்று நிரப்பப்பட்ட ‘டியூப்’ (Tube) ஒன்றையே தமது மீட்புக் கருவியாகப் பயன்படுத்தினர்.
வெள்ளத்தின் வேகம் அதிகமாக இருந்தபோதிலும், தமது உயிரைப் பற்றிச் சிறிதும் கவலைப்படாமல், நீந்திச் சென்று மூன்றாவது மாடியில் சிக்கியிருந்த குழந்தைகளையும், பெண்களையும், முதியவர்களையும் ஒவ்வொருவராக டியூப் மூலம் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தினர்.
அதிகாரிகளின் உதவி கிடைப்பதற்கு முன்னரே, இந்த இளைஞர்கள் காட்டிய துரித செயல்பாடு இன்று 35 உயிர்களைப் பாதுகாத்துள்ளது.
“நள்ளிரவு 2 மணிக்கு அந்தத் தம்பிகள் மட்டும் வரவில்லை என்றால், இன்று எமது மூன்று குடும்பங்களும் இருந்திருக்காது. எமக்கு மறுபிறவி கொடுத்த அந்த இளைஞர்களுக்கு எப்படி நன்றி சொல்வதென்றே தெரியவில்லை,” என மீட்கப்பட்டவர்கள் உருக்கத்துடன் தெரிவித்தனர்.
இயற்கைப் பேரிடர் அன்றையதினம் சமூகப் பொறுப்புடனும், அதீத துணிச்சலுடனும் செயற்பட்ட சஜித், அகரம், இக்ரம், சப்ரான் மற்றும் ரஸ்னி ஆகியோரின் இந்த வீரம் செறிந்த செயலை ஒட்டுமொத்த மக்களும் பாராட்டி வருகின்றது.
(அப்ரா மன்சூர் )
கெலிஓயா கல்கமுவ

0 Comments