காசோலை பற்றிய புதிய சட்டத் திருத்தம் சொல்வது என்ன?
By: இர்ஹாம் சேகுதாவூத்
2025 ஆம் ஆண்டின் 13 இலக்க, நாணய மாற்றுண்டியல்கள் (திருத்தச்) சட்டத்தின் படி;
ஒருவர் இன்னொருவருக்கு ஒரு காசோலையை வழங்குகிறார் என வைத்துக்கொள்வோம்.
(1) அவரது வங்கிக் கணக்கிலுள்ள பணத்தொகை அக்காசோலையை பணமாக மாற்றப் போதாததாக இருப்பதன் காரணமாக;
(2) அக்காசோலையின் தொகை, வங்கியோடு செய்யப்பட்ட உடன்பாட்டின்மூலம் அவரது கணக்கிலிருந்து பணம் செலுத்த ஏற்பாடு செய்யப்பட்ட தொகையை விட அதிகமாக இருப்பதன் காரணமாக;
(3) காசோலையை வழங்கியவர் மூடப்பட்ட கணக்கிலிருந்து (Closed account) அக்காசோலையை வழங்கியதன் காரணமாக; அல்லது
(4) காசோலையை வழங்கியவர் ஏதேனும் சட்டரீதியான காரணமில்லாமல் அக்காசோலைக்கு எதிர்க்கட்டளை ஒன்றை ஆக்கியதன் காரணமாக,
அக்காசோலையானது பணம் செலுத்தப்படாமல் வங்கியினால் திருப்பி அனுப்பப்பட்டால் அதனை வழங்கியவர் குற்றம் ஒன்றைப் புரிகின்றார் என்பதுடன், அவருக்கு நீதிமன்றத்தினால் குற்றத்தீர்ப்பு அளிக்கப்பட்டதன்மேல்,
(1) காசோலைத் தொகைக்குச் சமமான தொகை அவருக்கு தண்டப்பணமாக விதிக்கப்படும். – அல்லது,
(2) இரண்டு ஆண்டுகளுக்கு மேற்படாத சிறைத்தண்டனை விதிக்கப்படும். – அல்லது,
(3) மேற்படி தண்டப்பணம் மற்றும் சிறைத்தண்டனை ஆகிய இரண்டும் விதிக்கப்படும்.
எவ்வாறாயினும், இந்த ஏற்பாடு பின்வரும் சந்தர்ப்பங்களில் மாத்திரம்தான் ஏற்புடையதாகும் என்பதை கவனத்திற் கொள்ளவும்:-
(1) காசோலை திகதியிலிருந்து 6 மாதங்களுக்குள் அல்லது, அதன் செல்லுபடிக் காலப்பகுதிக்குள் – இவற்றுள் எது முந்தி வருகிறதோ அந்தக் காலப்பகுதியினுள் – பணம் செலுத்தும் வங்கிக்கு குறித்த காசோலை முன்வைக்கப்பட்டிருக்க வேண்டும்.
(2) காசோலையை வைத்திருப்பவர், காசோலை திருப்பப்பட்டதாக வங்கியிடமிருந்து தகவல் பெற்ற நாளிலிருந்து 90 நாட்களுக்குள், குறித்த காசோலையின் தொகையை தனக்கு தருமாறு கோரி காசோலையை வரைந்தவருக்கு எழுத்து மூலமான கோரிக்கையொன்றைச் செய்திருத்தல் வேண்டும்.
(3) காசோலையை வரைந்தவர், அந்த எழுத்திலான கோரிக்கையை பெற்றதிலிருந்து 90 நாட்களுக்குள் அத்தொகையை காசோலையை வைத்திருப்பவருக்குச் செலுத்தத் தவறியிருத்தல் வேண்டும்.
சட்ட நடவடிக்கை எடுத்தல்
—————————————
மேற்கூறியவாறு காசோலையை வரைந்தவர், அந்த எழுத்திலான கோரிக்கையை பெற்றதிலிருந்து 90 நாட்களுக்குள் அத்தொகையை காசோலையை வைத்திருப்பவருக்குச் செலுத்தத் தவறியிருப்பின், காசோலையை வைத்திருப்பவர் அந்த 90 நாட்கள் முடிவடைந்ததிலிருந்து 30 நாட்களுக்குள் காசோலையை வரைந்தவருக்கு எதிராக சட்ட நடவடிக்கையை எடுக்கலாம்.
#இர்ஹாம்_சேகுதாவூத்
0 Comments