அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட உடங்கா 02 பகுதியில் பாதுகாப்பு அற்ற கிணற்றில் இருந்து மூன்று வயதுடைய "நஸ்ஸாஸ் லுக்மான்" என்று சிறுவனே சடலமாக மீட்பு.
இச் சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை (22) மாலை வேளையில் சடலமாக மீட்கப்பட்ட சிறுவனின் வீட்டின் பின்பகுதியில் இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பாக "119" எனும் பொலிஸ் அவசர பிரிவுக்கு அழைப்பினை ஏற்படுத்தி விடயத்தை தெரியப்படுத்திய போது சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி.எஸ் ஜெயலதின் வழிகாட்டுதலில் சம்மாந்துறை பொலிஸ் நிலைய பெருங்குற்றப்பிரிவு பொறுப்பதிகாரி கே.சதீஸ்கர் தலைமையிலான விசேட பொலிஸ் குழுவினர் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
பாதுகாப்பு அற்ற கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட சிறுவனின் உடல் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது ஏற்கனவே சிறுவன் மரணம் அடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இதன் போது, அருகில் இருந்து வீட்டின் சீ சீ டிவி கேமராவை சோதனை செய்த போது மூன்று வயது சிறுவனை வேறு ஒரு நபர் அழைத்துச் செல்லுவது தெளிவாக தெரிந்தது.
இதனையடுத்து, சிறுவனை அழைத்துச் சென்றதாக சந்தேகிக்கப்படும் அதே பகுதியைச் சேர்ந்த 11 வயது மதிக்கத்தக்க சிறுவனிடம் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையின் போது "பாதுகாப்பு அற்ற கிணற்றில் மீன் இருப்பதாக கூறி அங்கு சென்ற போது குறித்த மூன்று வயதுடைய சிறுவன் தவறி விழுந்ததாக" வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
மூன்று வயது சிறுவனின் உடலை இன்றைய தினம் (23) புதன்கிழமை பிரேத பரிசோதனைக்காக அம்பாறை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது. குறித்த சிறுவனின் உடல் கூறு இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்திற்கு பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பாக நீதிவான் நீதிமன்றத்தில் 11 வயது மதிக்கத்தக்க சிறுவனை ஆஜர் படுத்திய போது மேலதிக விசாரணைக்காகவும், சிறுவனின் பாதுகாப்புக்காகவும் எதிர்வரும் 2025.05.07 வரை சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் வைக்குமாறு நீதவானினால் உத்தரவிடப்பட்டது.
இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மூன்று வயது சிறுவனின் மரணம் சம்மாந்துறை பிரதேசத்தில் அதிர்ச்சியையும் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 Comments