சாண்டியாகோ: கடற்கரையில் ஜாலியாக தந்தையும் மகனும் கயாக் சவாரி செய்த நிலையில், திமிங்கலம் ஒன்று மகனை மொத்தமாக விழுங்கியுள்ளது. சில அடிகள் தொலைவில் இருந்த தந்தையால் அவரை காப்பாற்ற முடியவில்லை. ஆனால், அதன் பிறகு நடந்தது தான் அதிசயம்.. இது தொடர்பான வீடியோ இப்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.நம்மில் பெரும்பாலானோருக்குக் கடலில் சென்று ஆட்டம் போடப் பிடிக்கும். கடலின் பிரம்மாண்டமும் அதன் அழகிய அலைகளும் அனைவரும் பிடிக்கும். பலரும் கடற்கரையில் ஆட்டம் போடவும் விரும்புவார்கள். கடற்கரையில் நின்று காலை நனைப்பது ஓகே.. ஆனால், உள்ளே இறங்க வேண்டும் என்றால் அதில் பல ஆபத்துகள் உள்ளன. நம்ம ஊர் கடற்கரைகளில் பெரியளவில் கடல் அலை தாக்கும் அது மட்டுமே பிரச்சினை. ஆனால், வெளிநாடுகளில் திமிங்கலம், சுறா பிரச்சினையும் இருக்கிறது.
உயிருடன் விழுங்கிய திமிங்கலம்
அப்படி தான் சிலியில் உள்ள பஹியா எல் அகுய்லா என்ற பகுதியில் 24 வயதுடைய நபர் தனது தந்தையுடன் படகு சவாரி செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த பெரிய ஹம்ப்பேக் திமிங்கலம் ஒன்று அவரை படகுடன் சேர்ந்து விழுங்கியுள்ளது. ஆனால், அடுத்து நடந்த அதிசயம் தான் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகளும் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
இந்தச் சம்பவம் சிலியின் தெற்கு பகுதியில் உள்ள மகெல்லன் ஜலசந்தியில் உள்ள சான் இசிட்ரோ கலங்கரை அருகே நடந்துள்ளது. அப்பாவும் மகனும் கயாக் என்ற வகை படகில் சென்றுள்ளனர். மகன் சற்று தொலைவில் படகில் சென்று கொண்டிருந்த நிலையில், அதைத் தந்தை டெல் என்பவர் வீடியோவாக எடுத்துள்ளார்.
என்ன நடந்தது
முதல் சில நொடிகள் அதில் எல்லாமே நார்மலாகவே இருக்கிறது. ஆனால், மெல்ல அலைகள் சற்று பெரிதாகிறது. அதைப் பார்த்த தந்தை டெல், "அலைகள் எவ்வளவு அழகா இருக்கு" எனச் சொல்கிறார். ஆனால், உண்மையில் அந்த அலைகளை ஏற்படுத்தியதே திமிங்கலம் தான். அவ்வளவு பெரிய திமிங்கலம் அருகே வந்ததாலேயே அந்த அலைகள் ஏற்பட்டுள்ளது.
அடுத்த நொடி மகனைப் படகுடன் சேர்த்து திமிங்கலம் விழுங்கிவிட்டது. அடுத்த சில நொடிகள் படகைப் பார்க்கக் கூட முடியவில்லை. அப்போது சில நொடிகள் கழித்துத் தான் அந்த அதிசயம் நடந்துள்ளது. திமிங்கலம் அந்த படகையும் இளைஞனையும் துப்பியுள்ளது. நல்வாய்ப்பாக அவர்களுக்கு எந்தவொரு காயமும் ஏற்படவில்லை.
திக்திக்
பதற்றத்துடன் தந்தையிடம் வந்த மகனை அவர் சமாதானப்படுத்தினார்.. "அமைதியாக இரு.. அமைதியாக இரு.. ஒன்றும் இல்லை" என்று அவர் சொல்லி ஆசுவாசப்படுத்துவதும் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. இருப்பினும், கடைசியில் தந்தை மகன் என யாருக்கும் எந்தவொரு சிறு காயமும் ஏற்படவில்லை. இந்த வீடியோ தான் இப்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
பதறிய இளைஞர்
இது குறித்து பிரபல ஆங்கில டிவி சேனலுக்கு அந்த இளைஞன் அளித்த பேட்டியில், "எனக்கு என்ன நடந்தது எனத் தெரிவதற்குள் எல்லாமே முடிந்துவிட்டது. அந்த திமிங்கலம் என்னை மொத்தமாக விழுங்கியது. என்னால் எதுவும் செய்ய முடியாது என்பதை அப்போதே உணர்ந்துவிட்டேன்.
என்ன நடந்தது என்று தெரியாமலேயே உயிரிழந்துவிடுவேன் என்றே நினைத்தேன். எல்லாம் முடிந்தது என நினைத்த போது, திடீரென முகத்தில் ஒளி அடித்தது. எனது லைஃப் ஜாக்கெட் டிரிக்கர் ஆகி மீண்டும் தண்ணீரில் மிதக்கத் தொடங்கினேன். சில நொடிகளுக்கு பிறகே என்ன நடந்தது என்பது புரிந்தது" என்றார்.
0 Comments