ஐக்கிய மக்கள் சக்தியுடனான கூட்டணி என்ற பொதுவான தீர்மானத்திற்கு பாதிப்பு ஏற்படாது என முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரவுப் ஹகீம் தெரிவித்துள்ளார்.
புத்தளத்தில் நேற்று (01.10.2024) இரவு இடம்பெற்ற கட்சி கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,
“புத்தளம் மாவட்டம் சார்பாக முஸ்லிம் காங்கிரஸ் போட்டியிடுவது குறித்த ஒரு கலந்துரையாடலை நாங்கள் நடாத்தி இருக்கிறோம். இதில் இன்று சில விவகாரங்கள் கவனத்தில் கொள்ளப்பட்டன.
புத்தளத்தில் நீண்டகாலமாக நாடாளுமன்ற உறுப்பினர் இல்லை. கடந்த முறை எல்லா அமைப்புகளும் கட்சிகளும் ஒன்றாக சேர்ந்து போட்டியிட்ட காரணத்தினால் ஒரு உறுப்பினரை பெறுகின்ற வாய்ப்பு இருந்தது.
இதனை, அடிப்படையாக வைத்து அதேமுறையில் மீண்டும் ஒரு முயற்சி செய்யப்பட வேண்டும் என்பதற்கான முன் ஆயத்த நடவடிக்கைகள் நடந்து கொண்டிருக்கின்றது.
அது குறித்து சாதகமாக பரிசீலிப்பதற்கு தயாராக இருக்கிறோம். எனவே இந்த சந்திப்பை நடாத்துவதற்கு நாங்கள் இங்கு வந்திருக்கிறோம்.
அதேநேரம், எங்களுடைய கட்சியினர் தனித்து போட்டியிடுவதற்கும் ஐக்கிய மக்கள் சக்தியோடு நாடு முழுவதிலும் சேர்ந்து போட்டியிடுவதற்குமான பொதுவான தீர்மானத்திற்கும் பாதகமில்லாமல் நாங்கள் இந்த கலந்துரையாடலில் ஈடுப்பட்டிருக்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.
0 Comments