உக்ரைன் மீதான போர் குற்றம் தொடர்பாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு சர்வதேச நீதிமன்றம் கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது. இந்த வாரண்ட் பிறப்பித்து ஒன்றரை ஆண்டுகளாகியும் இன்னும் புதின் கைது செய்யப்படவில்லை. இத்தகைய சூழலில் தான் மங்கோலியா சென்ற விளாடிமிர் புதினை கைது செய்ய நல்ல வாய்ப்பு அமைந்தது. ஆனால் அதனை மங்கோலியா செய்யாமல் அவருக்கு ராஜ மரியாதை கொடுத்து அனுப்பியதால் ரஷ்யாவுக்கு எதிரான நிலைப்பாடு கொண்ட உலக நாடுகள் ஏமாற்றமடைந்துள்ளன. உண்மையில் என்ன நடந்தது?
வாங்க பார்க்கலாம். உக்ரைன் மீது ரஷ்யா கடந்த 2022ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 24ம் தேதி போரை தொடங்கியது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உத்தரவில் இந்த போர் என்பது தொடங்கியது. தற்போது இரண்டரை ஆண்டுகளாக தொடர்ந்து போர் நடந்து வருகிறது. உக்ரைனில் இருந்து பல லட்சம் பேர் அண்டை நாடுகளில் தஞ்சமடைந்துள்ளனர். உக்ரைன் நகரங்கள் மீது ரஷ்யா வான்வெளி மற்றும் தரை வழி தாக்குதலை தொடர்ந்து நடத்தி வருகிறது. இந்த தாக்குதலால் உக்ரைனில் வீடுகள் உள்ளிட்ட கட்டடங்கள் சேதமடைந்துள்ளன. உக்ரைன் தரப்பில் அந்நாட்டு மக்கள், வீரர்கள் பலியாகி உள்ளனர். அதேபோல் ரஷ்யா சார்பில் ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். மொத்தமாக கணக்கிட்டு பார்த்தால் இருதரப்பிலும் பல ஆயிரம் பேர் பலியாகி உள்ளனர்.
இந்த போர் நடவடிக்கையை உலக நாடுகள் பலவும் கண்டித்துள்ளன. பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் ரஷ்யாவிற்கு கோரிக்கை வைத்துள்ளன. ஆனால் ரஷ்யா செவிசாய்க்கவில்லை. இதனால் அமெரிக்கா, பிரிட்டன் உள்பட பல நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார தடை விதித்துள்ளன. இதற்கிடையே தான் போர் விதிகளை மீறி ரஷ்யா பல்வேறு கொடூர செயல்களை அரங்கேற்றி வருகிறது என உக்ரைன் தரப்பில் நெதர்லாந்தின் ஹாக்கில் உள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் மனுக்கள் செய்யப்பட்டுள்ளன. சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் விசாரணை நடத்தி கடந்த ஆண்டு மார்ச் மாதம் கைது வாரண்ட் பிறப்பித்தது. அதாவது ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், அந்நாட்டின் குழந்தைகள் உரிமை ஆணையர் மரியா அலெக்ஸீவ்னா லவோவா ஆகியோருக்கு கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது.
ரஷ்யாவால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதியில் இருந்து உக்ரைன் குழந்தைகள் சட்டவிரோதமாக நாடு கடத்தப்படுவது தொடர்பான புகாரில் அவர்கள் போர்க்குற்றம் புரிந்ததாக இந்த கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. இதனை உக்ரைன் மற்றும் ரஷ்யாவுக்கு எதிரான நிலைப்பாடு கொண்ட அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் வெற்றியாக பார்த்தன. விரைவில் விளாடிமிர் புதின் கைது செய்யப்படுவார் என்று நம்பின. ஆனால் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் கைது செய்யப்படவில்லை. கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்ட நிலையில் விளாடிமிர் புதின் குறிப்பிட்ட நாடுகளுக்கு மட்டுமே பயணம் செய்தார்.
குறிப்பாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் உறுப்பினராக உள்ள நாடுகளுக்கு செல்வதை புதின் தவிர்த்தார். ஏனென்றால் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் வாரண்ட் பிறப்பித்தால் அந்த நாடுகளால் புதினை கைது செய்யலாம். இதனால் கைது பயத்தில் புதின் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் உறுப்பினராக உள்ள நாடுகளுக்கு செல்வதை தவிர்த்து வந்தார். இந்நிலையில் தான் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் மங்கோலியாவுக்கு நேற்று சென்றார். மங்கோலி என்பது சர்வதேச நீதிமன்றத்தின் உறுப்பினராக உள்ள நாடாக உள்ளது. சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் கைது வாரண்ட் பிறப்பித்த நிலையில் அவரை மங்கோலியா கைது செய்யும் என்று நேற்று எதிர்பார்க்கப்பட்டது. Advertisement விளாடிமிர் புதினை கைது செய்ய வேண்டும் என்று உக்ரைன், ஐரோப்பிய நாடுகள் மங்கோலியாவுக்கு அழுத்தம் கொடுத்தன. ஆனால் மங்கோலியா நேற்று விளாடிமிர் புதினை கைது செய்யவில்லை. சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிறப்பித்த வாரண்ட்டை புறக்கணித்த மங்கோலியா விளாடிமிர் புதினுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளித்தது. இதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் ரஷ்யாவுடன் இருக்கும் நெருக்கம் தான் காரணம். மங்கோலி என்பது ரஷ்யாவுடன் வடக்கு எல்லையை பகிர்ந்து கொள்கிறது. அதேபோல் சீனாவுடன் தெற்கு எல்லையை பகிர்ந்து கொள்கிறது. இதனால் ரஷ்யா, சீனாவுடன், மங்கோலியாக நெருக்கமாக செயல்பட்டு வருகிறது.
ரஷ்யாவும், சீனாவும் அதிகளவில் பொருளாதார உதவிகளை மங்கோலியாவுக்கு வழங்கி வருகிறது. அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுடன் மங்கோலியா நெருக்கமாக இருந்தாலும் கூட ரஷ்யா மற்றும், சீனா இடையேயான உறவை முக்கியம் என்று மங்கோலியா கருதுகிறது. இதனால் தான் மங்கோலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்த ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை அந்நாடு கைது செய்யாமல் சிவப்பு கம்பள வரவேற்பு அளித்து இருதரப்பு உறவுகள் பற்றி பேசி பத்திரமாக மீண்டும் ரஷ்யாவுக்கு அனுப்பி வைத்துள்ளது.
மங்கோலியா மீது உக்ரைன், அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் கடுப்பாகி உள்ளன. அதேவேளையில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் மனதை மங்கோலியா குளிர வைத்துள்ளது. மங்கோலியா நினைத்தால் அவரை கைது செய்து இருக்கலாம். ஆனால் நட்பு ரீதியாக நம்பிக்கையுடன் வந்தவரின் முதுகில் குத்தாமல் சிறப்பு வரவேற்பு அளித்தால் மங்கோலியா, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இதயத்தில் நீங்கா இடம்பிடித்து விட்டது என்றே கூறலாம்.
0 Comments