மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள நைஜீரியா நாட்டில் இரு லாரிகள் மோதிக்கொண்ட கோர விபத்தில் 48 பேர் உயிரிழந்துள்ளனர். எரிபொருள் ஏற்றி சென்ற லாரி மீது மற்றொரு லாரி மோதியதில் இரண்டு லாரிகளும் வெடித்து சிதறின. இதில் 48 பேர் தீயில் கருகி பலியாகினர். மேலும் 50 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள நாடு நைஜீரியா. நைஜீரியா நாட்டில் 22 கோடிக்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் நைஜீரியாவின் நைஜர் மாநிலம் அகாயி பகுதியில் எரிபொருளுடன் டேங்கர் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த லாரி மற்றொரு டிரக் மீது மோதியது. இரண்டு லாரிகளும் மோதியதில் டேங்கர் லாரியில் தீப்பிடித்தது.
டேங்கர் லாரி பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. மற்றொரு லாரியும் தீப்பிடித்தது. இரண்டு லாரிகளும் தீப்பிடித்ததில் அங்கிருந்த 48 பேர் சம்பவ இடத்திலேயே தீயில் கருகி பலியாகினர். அவர்களது உடல்கள் மீட்கப்பட்டுள்ள்து. இதேபோன்று 50க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. மீட்பு குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். விபத்து குறித்து விசாரணை நடந்து வருவதாக அங்குள்ள அதிகாரிகள் தெரிவித்தனர். அஜாக்கிரதையாக வாகனம் ஓட்டுதல், மோசமான சாலை மற்றும் சாலை வசதிகளும் சரியாக செய்யப்படாதது, லாரி உள்ளிட்ட வாகனங்களும் சரியாக பராமரிக்கப்படாதது இந்த விபத்துக்கு காரணம் என்று சொல்லப்படுகிறது.
நைஜீரியா நாட்டில் விபத்துகள் அடிக்கடி ஏற்படுகின்றன. அந்நாட்டில் எரிபொருளை ரயிலில் எடுத்து செல்ல போதிய வசதிகள் இல்லாததால் டேங்கர் லாரிகளில் தான் கொண்டு செல்லப்படுகிறது. லாரிகளும் சரியாக பராமரிக்கப்படாததால் இப்படி அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகின்றன. அங்குள்ள ஒரு ஆய்வுப்படி, கடந்த 2020 ஆம் ஆண்டில் மட்டும் 1,531 பெட்ரோல் டேங்கர் விபத்துக்கள் நடந்துள்ளன. இதில் 535 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 1,142 காயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
0 Comments