ஜனாதிபதித் தேர்தலில் படுதோல்வி அடையப்போவதை அறிந்தே ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு தெரிவிப் பவர்கள் புதிய கட்சியை உருவாக்கப் போகிறார்கள். அவர்கள் கட்சியை காட்டிக்கொடுத்தவர்கள். எனவே, கொள்கையை காட்டிக்கொடுப்பவர்களுக்கு எதிர்வரும் ஒவ்வொரு தேர்தலிலும் மக்கள் சரியான பதிலடியைக் கற்றுக்கொடுப்பார்கள்’’ என்று ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.
நெலும் மாவத்தையிலுள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் நேற்று புதன்கிழமை (04) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே இதனைக் குறிப்பிட்டார்.
அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,
கட்சியைக் காட்டிக்கொடுத்தவர்கள் எவரும் தொடர்ந்து எங்களின் கட்சிக்கு அவசிய மற்றவர்களாவர். அதில் எங்களுக்குச் சிக்கல் இல்லை. ஆனால், ஒரு பிரச்சினை இருக்கிறது. ஜனாதிபதித் தேர்தலொன்று இடம்பெறவுள்ள சந்தர்ப்பத்தில் அந்தத் தேர்தலுக்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவதற்குப் பதிலாக புதிய கட்சியை உருவாக்கப்போகிறார்கள். அப்படியென்றால், தற்போதே இந்தத் தேர்தலில் தோல்வியை ஏற்றுக்கொண்டுள்ளார்கள்.
ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெறுவ தென்றால் கட்சியை உருவாக்குவதற்கு கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. தேர்தலில் படுதோல்வியடைவார்கள் என்பது அவர்களின் மனச்சாட்சிக்குத் தெரியும் என்பதால், தேர்தலின் பின்னர் எப்படியாவது பாராளுமன்றத்துக்கு வர முடியுமா என்பதைப் பார்ப்பதற்காக முயற்சிகளை செய்து வருகிறார்கள்.
எங்களின் கட்சியில் பலம்பொருந்தியவர்களாக இருந்தவர்களுக்கு இன்று நேர்ந்துள்ள நிலைமைக்கு எங்களின் கவலையை தெரிவித்துக் கொள்கிறோம். ஆனால், கொள்கையைக் காட்டிக்கொடுப்பவர்களுக்கு மக்கள் சரியான பதிலடியை அடுத்துவரும் ஒவ்வொரு தேர்தலிலும் கற்றுக்கொடுப்பார்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது.
2016ஆம் ஆண்டு ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவை மொட்டுச் சின்னத்தின்கீழ் உருவாக்கியபோது, விலகிச்சென்ற எவரையும் நம்பி எங்களுக்கு மக்கள் ஆதரவளிக்கவில்லை. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்த நாட்டுக்கு வழங்கிய சேவை மற்றும் அவரின் மஹிந்த சிந்தனைக் கொள்கை, இடதுசாரி நடுநிலை கொள்கையினூடாக நாட்டில் ஏற்படுத்திய அபிவிருத்தி என்பவற்றின் அடிப்படையிலும் நாட்டை மேலும் அபிவிருத்தி செய்ய முடியும் என்று அவர்கள் நம்பியதாலுமே அன்று எங்களுக்கு ஆதரவளித்தார்கள்.
மஹிந்த ராஜபக்ஷவின் வேலைத்திட்டங் களுக்காகவும் கொள்கைகளுக்காகவும் எங்களுடன் இணைந்த மக்கள் தனிநபர்களின் பின்னால் செல்பவர்கள் இல்லை. உயர்மட்ட அரசியல்வாதிகள் மத்தியில் மாற்றம் ஏற்பட்டாலும் அடிமட்ட ஆதரவாளர்கள் கொள்கையின் அடிப்படையிலேயே பிணைந்துள்ளார்கள். அவர்கள் இன்றும் எங்களுடனேயே இணைந்திருக்கிறார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.
மக்களின் நிலைப்பாட்டிலேயே மஹிந்த ராஜபக்ஷவும் இருக்கிறார்.
பாரிய காட்டிக் கொடுப்பைச் செய்தவர்கள் இருக்கிறார்கள். பின்னால் இருந்து கத்தியால் குத்தியவர்களை எங்களின் கட்சிக்கு மாத்திரமல்ல, வேறு எந்தக் கட்சிக்கும், மக்களுக்கும் இருள்மயமாகவே இருப்பார்கள். இதுபோன்ற நபர்கள் இல்லாமல் அரசியல் செய்வது என்பது கட்சிக்குக் கிடைத்துள்ள அதிர்ஷ்டமாகவே கருதுகிறோம்.
கோட்டாபய ராஜபக்ஷவின் காலத்தில் அவரை வழிநடத்தி மஹிந்த ராஜபக்ஷவை பிரதமர் பதவியிலிருந்து நீக்கி, பெசில் ராஜபக்ஷவை நிதி அமைச்சுப் பதவியிலிருந்து நீக்கி தவறான முடிவுகளை எடுக்க அவரை வழிநடத்தியவர்களே இன்று ரணிலை சூழ்ந்திருக்கிறார்கள்.
எனவே, இவர்களுடன் அரசியல் செய்தால் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் வேறு ஸ்திரத்தன்மையை தேடிச் செல்ல நேரிடும்’’ என்றார்
0 Comments