பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்சவே பிரதமர் வேட்பாளராக களமிறங்குவார். எவருடனும் கூட்டணியில்லை. தனித்தே போட்டியிடுவோம் என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.


பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் நேற்றையதினம் இடம்பெற்ற சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். தொடர்ந்தும் தெரிவிக்கையில்,


ஜனாதிபதி தேர்தலில் எம்மை விட்டுச் சென்றவர்கள் பொதுத் தேர்தலில் எந்த கட்சியில் போட்டியிடுவது என்ற இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள்.


ஐக்கிய தேசியக் கட்சியையும், ஐக்கிய மக்கள் சக்தியையும் ஒன்றிணைக்கும் முயற்சிகள் தீவிரமடைந்துள்ள நிலையில் பொதுஜன பெரமுனவின் ஒரு தரப்பினர் நெருக்கடிக்குள்ளாகியுள்ளனர். 




ஜனாதிபதி தேர்தலின் போது எம்மில் பெரும்பாலானோர் அப்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பக்கம் சென்றார்கள்.




நாட்டுக்காக சென்றதாக குறிப்பிடுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. தங்களின் குறுகிய நலன்களுக்காகவே இவர்கள் சென்றார்கள். கட்சி தாவலில் ஈடுபடுபவர்களை மீண்டும் இணைத்துக்கொள்ளப் போவதில்லை.




இடம்பெறவுள்ள பொதுத் தேர்தலில் பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச பிரதமர் வேட்பாளராக களமிறங்குவார். எவருடனும் கூட்டணியமைக்க போவதில்லை. பொதுத்தேர்தலில் மாவட்ட ரீதியில் எமது பலத்தை நிரூபிப்போம் என குறிப்பிட்டுள்ளார்.