இந்தியாவின் பீகாரில் தனியார் மருத்துவமனையில் நண்பர்களுடன் சேர்ந்து செவிலியரை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற பிசியோதெரபிஸ்ட் மருத்துவரின் ஆணுறுப்பை செவிலியர் கத்தியால் அறுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொடூரமாக தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இந்த சம்பவத்தை கண்டித்து மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், செவிலியர் ஒருவருக்கு மருத்துவமனையில் பாலியல் முயற்சி நடந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பீகார் மாநிலம், சமஸ்திபூர் மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியர் ஒருவர் இரவில் நோயாளிகளை பரிசோதனை செய்து கவனித்த பிறகு தனது வீட்டுக்குச் செல்வதற்காக புறப்பட்டுள்ளார். அப்போது, அதே மருத்துவமனையில் பணியாற்றும் பிசியோதெரபிஸ்ட் மருத்துவர் தனது நண்பர்களுடன் அங்கு வந்துள்ளார்.
அப்போது செவிலியர் இருந்த அறையை உள்பக்கமாக தாழிட்டுவிட்டு பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்துள்ளார். அவர்களிடம் இருந்து போராடி தப்பிக்க முயன்ற அந்த செவிலியர், கையில் கிடைத்த கத்தியை எடுத்து அந்த மருத்துவரின் ஆண் உறுப்புப் பகுதியில் சரமாரியாக குத்தியதாக கூறப்படுகிறது.
இதன் பின்னர் சம்பவ இடத்தில் இருந்து உடனடியாக வெளியேறி, பொலிஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த பொலிசார், அதீதமான மது போதையில் இரத்த வெள்ளத்தில் பலத்த காயங்களுடன் கிடந்த மருத்துவர் மற்றும் அவர்களது நண்பர்கள் உள்பட 3 பேரை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
அவர்கள் மூவர் மீது பொலிஸார் வழக்குப் பதிவு செய்து, பாதிக்கப்பட்ட பெண்ணின் வாக்கு மூலத்தின் அடிப்படையில் கைது செய்துள்ளனர். இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
0 Comments